கோட்புலி நாயனார்

“அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை

கோட்புலி நாயனார்
பெயர்:கோட்புலி நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:ஆடி கேட்டை
அவதாரத் தலம்:திருநாட்டியத்தான்குடி
முக்தித் தலம்:திருநாட்டியத்தான்குடி

கோட்புலிநாயனார் சோழநாட்டிலே திருநாட்டியத்தான்குடியில் வேளாளர் மரபில் தோன்றினார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்டு, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்பணித்தார். அவர் தம் அர்பணம் நம்பியாரூரரை அம்மகளரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

சோழ சேனாதிபதியாக அதிகாரம் புரிந்த இவர் பகை நாடுகளைப் போரில் வென்று புகழுடன் விளங்கினார். அரசனிடம் பெற்ற சிறப்பின் வளங்களை எல்லாம் சிவன் கோயிலில் திருவமுதுபடி பெருகச் செய்யும் திருப்பணிக்காக்கி அதனையே பன்னெடுநாள் செய்தனர். அந்நாளில் அவர் அரசனது போரினை மேற்கொண்டு பகைவர் மேற் செல்ல நேர்ந்தது. அப்பொழுது தாம் திரும்பி வரும் வரையில் சிவனுக்கமுது படிக்காகும் நெல்லினைக் கூடுகட்டி வைத்துத், தம் சுற்றத்தாரை நோக்கி ‘இறைவர்க்கு அமுது படிவைத்துள்ள இந்நெல்லை எடுத்தல் கூடாது. திருவிரையாக்கலி என்னும் ஆணை’ எனத் தனித்தனியே ஒவ்வொருவரிடமும் சொல்லிச் சென்றார். சில நாளிலே நாட்டிற் கடும் பஞ்சம் வந்தது. பசியால் வருந்திய சுற்றத்தார்கள் ‘நாம் உணவின்றி இறப்பதைவிட இறைவர்க்கு வைத்த நெல்லைக் கொண்டாகிலும் பிழைத்து உயிர் தாங்கியிருந்து பின்னர் குற்றந்தீரக் கொடுத்துவிடும் என்று நெற்கூட்டைத் திறந்து நெல்லைச் செலவழித்தனர். அரசருடைய பகைவரைப் போர் முனையில் வென்று அரசனிடம் நிதிக்குவை பெற்று மீண்ட கோட்புலியார், தம் சுற்றத்தார் செய்த தீமையை உணர்ந்து அவர்கள் அறியாத வகையில் அவர்களைத் தண்டிக்க நினைத்தார். தம் மாளிகையை அடைந்து. ‘தம் சுற்றத்தார்க்கெல்லாம் ஆடையணிகலன்கள் கொடுக்க அவர்களை அழைத்து வாருங்கள்’ என்று அவர்களை அழைத்து அவர்கள் எவரும் ஓடிவிடாதபடி வாயிலிற் காவலனை நிறுத்தி வைத்தார். ‘சிவ ஆணையை மறுத்து அமுது படியை அழித்த மறக்கிளையை கொல்லாது விடுவேனோ? என்று கனன்று, வாளினை எடுத்துக் கொள்வாராயினர். தந்தையார், தாயார், உடன் பிறந்தவர், சுற்றத்தவர், பதியடியார்’ மற்றும் அமுது படியுண்ண இசைந்தார், இவர்களையெல்லாம் அவர்களது தீயவினைப் பாவத்தினைத் துணிப்பாராய்த் துண்டம் செய்தார். அங்கு ஒரு பசுங்குழந்தை தப்பியது. காவலாளன் ‘இக்குழவி (இக்குழந்தை) அமுதுபடி அன்னமுண்டிலது, ஒரு குடிக்கு ஒருமகன்; அருள் செய்யவேண்டும்’ என்று இறைஞ்சினார். அவ்வண்ணம் உண்டாளது முலைப்பாலினை உண்டது” என்று கூறி அதனை எடுத்து எறிந்து வாளினை வீசி இரு துணியாக விழ எற்றினார்.

அப்போது இறைவர் வெளிப்பட்டார். உன் கைவாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர் தேவருலகம் முதலிய போக பூமிகளிற் புகுந்து பின்னர் நம்முலகமடைய, நீ இந்நிலையிலேயே நம்முடன் அணைக என்று அருளி மறைந்தார்.

நுண்பொருள்

  1. இறைவரது அமுதுபடிக்கென்று அமைத்தவற்றைப் பஞ்சம் வந்து உயிர் துறக்கும் நிலை நேர்ந்த இடத்தும் நம்மவர் தீண்டுதல் பிழை.
  2. விரையாக்கலி என்பது சிவன் ஆணை. இவ்வாணை பிழைத்தல் சிவத்துரோகம்.
  3. அமுதுபடி அழித்தலும், சிவன் ஆணை பிழைத்தலும் ஆகிய இச்சிவத்துரோகம் இழைத்தவர்களைக் கொன்றழித்தல் பாதகமாகாது.
  4. இவ்வாறு கொலை செய்தவர் அந்நிலையிலே சிவபதம் பெறுவர். இவரால் கொலை செய்யப்பட்டோரும் தீவினை தீர்ந்து சிவலோகம் பெறுவர்.
  5. தம் மக்கட் செல்வத்தை நாயன்மார்க்கு அர்பணித்தல் நல்லோர் ஒழுக்கம். அத்தகைய நல்லோரை நாயன்மார்கள் ஒருநாளும் மறவார்.

கோட்புலியார் குருபூசைநாள்: ஆடி கேட்டை.

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.