கணம்புல்ல நாயனார்

“கறைகண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் (காரிக்கும்) அடியேன்” – திருத்தொண்டத் தொகை

கணம்புல்ல நாயனார்
பெயர்:கணம்புல்ல நாயனார்
குலம்:செங்குந்தர்
பூசை நாள்:கார்த்திகை கார்த்திகை
அவதாரத் தலம்:பேளூர்
முக்தித் தலம்:தில்லை

வடவெள்ளாற்றுத் தென்கரையிலே அமைந்த இருக்கு வேளூரிலே அவ்வூர்க் குடிமக்களின் தலைவராய்த் திகழ்ந்தவர் கணம்புல்லர். அவர் சிவபக்தியும் பெருஞ்செல்வமும் உடையவராய் விளங்கினார். “மெய்ப்பொருளாவது திருவடியே” எனும் கொள்கையினரான இவர் செல்வப் பயன் திருவிளக்கெரித்தலே என்று எண்ணி திருவிளக்குப் பணிசெய்து வாயாரப் பாடி வழிபட்டு வந்தார். நெடுநாட்களாக இப்பணி செய்துவந்த நாயனார்க்குத் திருவருளாலே வறுமை வந்தெய்தியது. அதனால் ஊரைவிட்டு நீங்கித் தில்லையை அடைந்து தம் வீடு முதலியவற்றை விற்று விளக்கேற்றி வந்தார். அவரிடமிருந்த பொருள் யாவும் ஒழிந்து போகும் நிலை நேர்ந்தது. அவர் பிறரிடம் இரத்தற்கு நாணினார். தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விலைப்படுத்தி அப்பொருளினால் நெய் பெற்று விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று.

ஒருநாள் அவர் கொண்டு வந்த புல் எவ்விடத்தும் விலை போகாதாயிற்று. விளக்கேற்றும் பணி முட்டாதிருத்தற் பொருட்டு அப்புல்லையே மாட்டி விளக்கெரித்தார். ஆனால் அது தாம் நியமாகவே மேற்கொண்ட யாம அளவு வரை எரிக்கப் போதாதாயிற்று. நாயனார் அன்பினால் எலும்பும் உருக கணம்புல்லைப்போன்ற தமது திருமுடியினையே விளக்காக மாட்டி எரித்தனர். தலையாய அத்திருவிளக்குப் பணியால் இருவினைத் தொடக்கையும் எரித்தொழித்தார். இறைவர் அவருக்கு மங்கலமாம் பெருங்கருணை வைத்தருளினார். அவர் சிவலோகத்தில் இறைஞ்சி இன்பமுடன் அமர்ந்தனர்.

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.