கலிய நாயனார்

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே செக்குத் தொழிலை உடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலியநாயனார். செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் தொண்டில் ஈடுபட்டுத் திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறமும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெருமையை புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வம் அனைத்தும் இவரைப் பிணித்த இருவினைப் போற் குறைய வறுமை நிலை உண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனால் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை இடைவிடாது செய்தார். பின்னர் எண்ணெய் தருவார் கொடாமையால் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டு விளக்கெரித்தார். வேலையாட்கள் பெருகித் தம்மைக் கூலிக்கு அமர்த்திக் கொள்வார் இல்லாமையால் வீடு முதலிய பொருட்களை விற்று விளக்கெரித்தார். முடிவில் தம் மனைவியாரை விற்பதற்கு நகரெங்கும் விலைகூறி வாங்குவாரில்லாமையால் மனம் தளர்ந்தார். திருவிளக்கேற்றும் வேளையில் ஒற்றியூர்த் திருக்கோயிலை அடைந்து “திருவிளக்குப் பணி தடைப்படின் இறந்துவிடுவேன்” எனத்துணிந்து எண்ணெய்க்கு ஈடாக தமது உதிரத்தையே நிறைத்தற்குக் கருவி கொண்டு தமது கழுத்தை அரிந்தார். அப்பொழுது ஒற்றியூர்ப்பெருமானது அருட்கரம், நாயனாரது அரியும் கையைத் தடுத்து நிறுத்தியது. அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றியருள, உடன்பின் ஊறு (காயம்) நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் அவரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலித்திருக்க அருள் புரிந்தார்.

கலிய நாயனார்
பெயர்:கலிய நாயனார்
குலம்:செக்கார்
பூசை நாள்:ஆடி கேட்டை
அவதாரத் தலம்:ஒற்றியூர்
முக்தித் தலம்:ஒற்றியூர்

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.