சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களுள் ஒருவராவார். விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு லிங்க பூசை செய்து கொண்டிருந்த போது அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால் கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூசைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேசுவர் எனும் பதவியளித்தார்.
சண்டேசுவர நாயனார் | |
---|---|
![]() | |
பெயர்: | சண்டேசுவர நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | தை உத்திரம் |
அவதாரத் தலம்: | திருசேய்ஞலூர் |
முக்தித் தலம்: | ஆப்பாடி |
சண்டேசுவர பதவியைப் பெற்றமையால் சண்டேசுவர நாயனார் என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேசுவர் என்றும் அழைக்கின்றனர்.
தொன்மம்
சோழநாட்டின் மணியாற்றின் கரையில் சேய்ஞலூர் எனும் ஊரில் அந்தணரான எச்சத்தன் - பவித்திரை தம்பதிகளின் மகனாக பிறந்தார். அவரை விசாரசருமா என்று அழைத்தனர். அவருக்கு ஏழாம் வயதில் உபநயனம் செய்யப்பட்டது. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என வழிபட்டார்.
திடலில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார் விசாரசருமர். அப்போது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையர், பசுக்களை கொம்பால் அடித்தார். அதனால் கோபம் கொண்ட விசாரசருமர் அதனை தடுத்தார். தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றார்.
நன்கு மேய்க்கும் வல்லமை பெற்றார். அதனால் பசுக்கள் அதிக பாலை தந்தது. அந்த பாலை மணலினால் ஆன சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். அதனால் பால் குறைந்தது பசுக்களின் சொந்தக்காரரர்கள் விசாரசருமர் செய்யும் செயலை வீண் என்று நினைத்தனர். விசாரசருமரின் தந்தையிடம் சென்று மணலில் பாலினை ஊற்றி வீணாக்குகிறான் என்று புகார் தந்தனர். தந்தையார் எச்சத்தன் அனைவரிடமும் மன்னிப்புக் கோரி, தன்னுடைய மகனை கண்டிக்க சென்றார்.
விசாரசருமர் மணலில் இலிங்கம் செய்து அதற்கு பூக்களை சூடி பாலால் அபிசேகம் செய்து கொண்டிருந்தை கண்டார். எச்சத்தன் விசாரசருமரை அழைத்தும் பலனில்லாமல் போக கோபத்தில் அபிசேக பாற்குடத்தினை எட்டி உதைத்தார். சிவபெருமானுக்கு அபிசேகம் செய்த வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவாபாராதம் செய்ததை விசாரசருமரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே கையில் கிடைத்த எடுத்து தந்தையின் கால்களை நோக்கி வீசினார். சிவனருளால் அது மழுவாக மாறி எச்சத்தனின் கால்களை வெட்டியது.
அதனை கண்டுகொள்ளாமல் விசாரசர்மர் சிவபூஜை செய்யத் தொடங்கினார். அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார். விசாரசர்மர் அவர்களை வணங்கினார். விசாரசர்மரை தன்னுடைய கணங்களின் தலைவராக்கினார். அத்துடன் சண்டீசன் எனும் பதவியான சிவபெருமானின் ஆடைக்கும், பூசை பொருட்களுக்கும் உரியவரானாக நியமித்தார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்று அவர் தான்சூடியிருந்த கொன்றை மலர்மாலையை விசாரசருமருக்கு சூட்டினார்.
எச்சத்தனும் உயிர்ப்பெற்று சிவபெருமானை அடைந்தார்.
குரு பூசை
சண்டேசுவர நாயனாருக்கு தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குருபூசை நடத்தப்படுகிறது.[1]
சண்டிகேசுவரர் சிலைகள்

அமைவிடம்
சிவாலயங்களில் சண்டிகேசுவரர் சன்னதி, கற்பக கிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமுகிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இந்த சண்டிகேசுவரர் சன்னதியை சுத்திவருதல் கூடாது என்பதற்காக சில சிவாலயங்களில் சன்னதியை யாரும் சுற்றாத வண்ணம் சிறு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
கங்கை கொண்ட சோழீசுவரம்
விசாரசருமருக்கு சண்டீசர் பதவியை தருகின்ற சிவபெருமான் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் சிவாலயத்தில் உள்ளது. இதில் சண்டீசர் கீழே அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு உமையாளுடன் இருக்கும் சிவபெருமான் தன்னுடைய கொன்றை மாலையை சூடுவதாகவும் அமைந்துள்ளது. கொன்றை மாலை சிவபெருமானுக்கு உரியதாகும்.[2] சிவபெருமான் சண்டீசர் பதவியை தரும்போது தன்னுடைய மலர்மாலை சூட்டி, தன்னுடைய பூசைப் பொருளுக்கு உரியவன் என்று கூறுகிறார். கருவறைக்குச் செல்லும் வடக்கு வாயில் படியில் இந்த சிற்பம் உள்ளது.[2] இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு நான்கு வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது. [2]
உசாத்துணை
- திருகோணமலை விஸ்வநாத சுவாமி கோயில் மகாகும்பாபிஷேகமலர் 24 ஜூன் 1999 (தமிழில்)
ஆதாரங்கள்
- http://shaivam.org/tamil/sta_tirutondarpurana_caram.htm
- பெரிய புராண ஆராய்ச்சி நூல் - டாக்டர் மா. இராசமாணிக்கனார் - அலமு பதிப்பகம் பக்கம் 102