மு. வரதராசன்
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) 20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
பேராசிரியர் முனைவர் மு. வரதராசன் | |
---|---|
![]() முன்னேற்றத்தின் வழிகாட்டி | |
பிறப்பு | பெயர்: திருவேங்கடம் நாள்:ஏப்ரல் 25, 1912 இடம்:வேலம் வாலாஜாப்பேட்டை, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | நாள்: அக்டோபர் 10, 1974 62) இடம்: சென்னை | (அகவை
புனைப்பெயர் | மு.வ. |
தொழில் | தமிழ்ப் பேராசிரியர் எழுத்தாளர் |
நாடு | இந்தியர் |
கல்வி | MOL, MLit,Ph.D |
எழுதிய காலம் | 1938 முதல் 1974 வரை |
இலக்கிய வகை | ஆய்வுக் கட்டுரைகள் புதினங்கள் |
கருப்பொருட்கள் | தமிழிலக்கியம் வரலாறு |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
சாகித்ய அகாதெமி |
துணைவர்(கள்) | இராதா அம்மையார் |
பிள்ளைகள் | அரசு, பாரி, நம்பி |
இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் - அம்மாக்கண்ணு தம்பதிக்கு பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.
மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928ம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.
எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காக கிராமத்துக்குச் சென்று, அங்கு திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.
1931 இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தாமே பயின்று 1935 இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார்.
1935 ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939ல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.
பேராசிரியராகப் பணி
1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் "கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்" என்ற பொறுப்பை ஏற்றார். 1944 இல் "தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.
1948 இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் "சங்க இலக்கியத்தில் இயற்கை" என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.
1939 இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்கு பணியாற்றினார். 1945 இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
பின்னர் 1971 இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.
மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.
சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.
மாணவர்களுக்கு உதவி
மாணவர்களுக்குத் தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவர். கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் கட்ட இயலாத மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்தவர். நோயுற்ற போதும் உதவுவார்.இவர் செய்யும் உதவிகள் இவர் தம் துணைவியாருக்குக் கூடத் தெரியாது. மேலும் உதவி பெறும் மாணவரது நண்பர்களும் அறியாவண்ணம் உதவிபெறும் மாணவருக்குத் தடைவிதித்து விடுவார்.[1]
கல்வித்துறை ஆய்வு மாநாடுகள்
சோவியத் நாடு, பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான பல நாடுகளின் கல்வித்துறை ஆய்வு மாநாடுகளில் பங்கு பெற்றவர்.[1]
தாக்கங்கள்
மு.வரதராசனார் காந்தியடிகள், திரு.வி.க., தாயுமானவர், இராம தீர்த்தர், இராமலிங்க சுவாமிகள், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், நம்மாழ்வார், கவிஞர் தாகூர், வி. ச. காண்டேகர், பெர்னாட்ஷா, சாமர்செட் மாம் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்.
ஈர்க்கப்பட்டோர்
இவரால் ம. ரா. போ. குருசாமி, முனைவர் ந. சஞ்சீவி, முனைவர் சி. பாலசுப்பிரமணியம்,ஈ. ச. விசுவநாதன் முதலானோர் ஈர்க்கப்பட்டனர்.
எழுத்துப் பணி
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.
கால அடிப்படையில் | பொருள் அடிப்படையில் |
1939 1 குழந்தைப் பாடல்கள் 2 இளைஞருக்கான இரு சிறுகதைகள் 3 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1 4 கழகத் தமிழ் இலக்கணம் 1 5 கழகத் தமிழ் இலக்கணம் 2 1940 6 படியாதவர் படும்பாடு 7 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள்-2 8 கழகச் சிறுகதைகள் 1 9 கழகச் சிறுகதைகள் 2 10 கழகச் சிறுகதைகள் 3 1941 11 கழகத் தமிழ் இலக்கணம் 3 1945 12 கண்ணுடைய வாழ்வு 1946 13 செந்தாமரை 14 ஓவச் செய்தி 1947 15 கள்ளோ? காவியமோ? 16 கி.பி. 2000 17 தமிழ் நெஞ்சம் 18 மொழி நூல் 1948 19 பாவை 20 அந்த நாள் 21 விடுதலையா? 22 அன்னைக்கு 23 அறிஞர் பெர்னாட்ஷா 24 காந்தியண்ணல் 25 மணல் வீடு 26 திருக்குறள் அல்லது வாழ்க்கை விளக்கம் 27 அறமும் அரசியலும் 28 அரசியல் அலைகள் 1949 29 கவிஞர் தாகூர் 30 திருக்குறள் தெளிவுரை 1950 31 மலர்விழி 32 கண்ணகி 33 மாதவி 1951 34 பெற்ற மனம் 35 பச்சையப்பர் 1952 36 அல்லி 37 குறட்டை ஒலி 38 மனச்சான்று 39 முல்லைத் திணை 40 மொழியின் கதை 41 எழுத்தின் கதை 42 சொல்லின் கதை 1953 43 கரித்துண்டு 44 தம்பிக்கு 45 தங்கைக்கு 46 இலக்கிய ஆராய்ச்சி 47 நற்றிணை விருந்து 1954 48 ஓவச் செய்தி 49 காதல் எங்கே? 50 நண்பர்க்கு 51 யான் கண்ட இலங்கை 52 நெடுந்தொகை விருந்து 53 நெடுந்தொகைச் செல்வம் 54 குழந்தை 55 மொழி வரலாறு 56 மொழியியற் கட்டுரைகள் 1955 57 பழியும் பாவமும் 58 குறுந்தொகைச் செல்வம் 1956 59 கயமை 60 நெஞ்சில் ஒரு முள் 61 குறுந்தொகை விருந்து 62 நடைவண்டி 63 கொங்குதேர் வாழ்க்கை 64 கல்வி 65 நாட்டுப் பற்று 1957 66 The Treatment of Nature in Sangam Literature 1958 67 அகல்விளக்கு 68 நற்றிணைச் செல்வம் 69 குருவிப்போர் 1959 70 மூன்று நாடகங்கள் 71 இலக்கியத் திறன் 72 மொழிப்பற்று 73 பெண்மை வாழ்க 74 உலகப் பேரேடு 1960 75 வாடாமலர் 76 இலக்கிய மரபு 77 இளங்கோ அடிகள் 1961 78 மண்குடிசை 79 மண்ணின் மதிப்பு 1962 80 திரு.வி.க. 81 இலக்கியக் காட்சிகள் 1967 82 Ilango Adigal 1968 83 குறள் காட்டும் காதலர் 1972 84 தமிழ் இலக்கிய வரலாறு 1973 85 நல்வாழ்வு 1975 86 டாக்டர் மு.வ.வின் மணிமொழிகள் 1977 87 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள் 1983 88 தாயுமானவர் 2012 89 மு.வ.வின் முன்னுரைகள் 90 மு.வ.வின் கட்டுரைகள் 1 91 மு.வ.வின்கட்டுரைகள் 2 | சிறுவர்க்கான இலக்கியங்கள் 1 குழந்தைப் பாடல்கள் 2 இளைஞருக்கான இரு சிறுகதைகள் 3 படியாதவர் படும்பாடு 4 கண்ணுடைய வாழ்வு தழுவல் மொழிபெயர்ப்புகள் 5 கழகச் சிறுகதைகள் 1 6 கழகச் சிறுகதைகள் 2 7 கழகச் சிறுகதைகள் 3 மொழிபெயர்ப்புகள் 8 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 1 9 சிறுவர்க்கான சேக்சுபியர் கதைகள் – 2 இலக்கணம் 10 கழகத் தமிழ் இலக்கணம் 1 11 கழகத் தமிழ் இலக்கணம் 2 12 கழகத் தமிழ் இலக்கணம் 3 நெடுங்கதை 13 செந்தாமரை 14 கள்ளோ? காவியமோ? 15 கி.பி. 2000 16 பாவை 17 அந்த நாள் 18 மலர்விழி 19 பெற்ற மனம் 20 அல்லி 21 கரித்துண்டு 22 கயமை 23 நெஞ்சில் ஒரு முள் 24 அகல்விளக்கு 25 மண்குடிசை 26 வாடா மலர் சிறுகதை 27 விடுதலையா? 28 குறட்டை ஒலி 29 பழியும் பாவமும் நாடகம் 30 பச்சையப்பர் 31 மூன்று நாடகங்கள் 32 காதல் எங்கே? 33 மனச்சான்று கடித இலக்கியம் 34 அன்னைக்கு 35 தம்பிக்கு 36 தங்கைக்கு 37 நண்பர்க்கு 38 டாக்டர் மு.வ.வின் கடிதங்கள் பயண இலக்கியம் 39 யான் கண்ட இலங்கை வாழ்க்கை வரலாறு 40 அறிஞர் பெர்னாட்ஷா 41 காந்தியண்ணல் 42 கவிஞர் தாகூர் 43 திரு.வி.க திறனாய்வு 44 இலக்கிய ஆராய்ச்சி 45 இலக்கியத் திறன் 46 இலக்கிய மரபு 47 இலக்கியக் காட்சிகள்
உரை இலக்கிய வரலாறு சிந்தனைக் கட்டுரைகள் மொழியியல் முன்னுரைகள் மேற்கோள்கள் ஆங்கில நூல்கள் |
இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.
மு.வ. தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.அவற்றின் விற்பனை உரிமையை பாரி நிலையத்திற்கு வழங்கினார்.
மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படமான மு.வரதராசனின் கதைகள்
- பெற்ற மனம் 1960 அக்டோபர் 19
விருதுகள்
மு.வ.வின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது. திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன. பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மு.வ.வைப் பற்றிய நூல்கள்
- மு.வ.வின் நாவல்கள், முனைவர் இரா.மோகன்
- மு.வ. களஞ்சியம், முனைவர் இரா. மோகன்
- மு.வ. நினைவுமலர், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
- மு.வ. ஆய்வடங்கல், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
- மு.வ.வின் கடிதங்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
- மு.வ. கருந்தரங்கக் கட்டுரைகள், மதுரை பல்கலைக் கழகம், மதுரை.
- பேராசிரியர் மு.வ. பேராசிரியர் அ.மு.ப. கருத்தரங்கக் கட்டுரைகள்
- மு.வ. முப்பால், ம. ரா. போ. குருசாமி
- பெருந்தகை மு.வ., முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
- வணக்கத்திற்குரிய வரதராசனார், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- பேராசான் மு.வ., முனைவர் மறைமலை இலக்குவனார்
- மூவா நினைவுகள், ம. ரா. போ. குருசாமி
இவற்றையும் பார்க்க
- மு. வரதராசனின் புதினங்கள்
- மூவா நினைவுகள்
மேற்கோள்கள்
- ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; ஏப்ரல் 2012; பக்கம் 32;33