எம். வி. வெங்கட்ராம்

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

எம். வி. வெங்கட்ராம்
பிறப்புமே 18, 1920(1920-05-18)
கும்பகோணம், தமிழ்நாடு
இறப்புசனவரி 14, 2000(2000-01-14) (அகவை 79)
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்வீரய்யர்
சீதை அம்மாள்
வாழ்க்கைத்
துணை
ருக்மணி
பிள்ளைகள்4 மகன்கள், 3 மகள்கள்

வாழ்க்கைக் குறிப்பு

1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன

மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறைந்தார்

எழுதிய நூல்கள்

புதினங்கள்

  • நித்தியகன்னி
  • இருட்டு
  • உயிரின் யாத்திரை
  • அரும்பு
  • ஒரு பெண் போராடுகிறாள்
  • வேள்வித் தீ
  • காதுகள்

சிறுகதைத் தொகுதிகள்

  • குயிலி (1964)
  • மாளிகை வாசம் (1964)
  • வரவும் செலவும் (1964)
  • மோகினி (1965)
  • உறங்காத கண்கள்(1968)
  • அகலிகை முதலிய அழகிகள் (1969)
  • இனி புதிதாய் (1992)
  • எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் (1992)
  • முத்துக்கள் பத்து (2007)
  • பனிமுடி மீது கண்ணகி

குறுநாவல்கள்

  • நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்


கட்டுரைத் தொகுப்புகள்

  • என் இலக்கிய நண்பர்கள்
  • நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)

ஆனந்த விகடனில் 1970களில் "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.

விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)
  • தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
  • சித்த சூரி ரத்ன விருது
  • லில்லி தேவசிகாமணி விருது
  • சாந்தோம் விருது
  • புதுமைப்பித்தன் சாதனை விருது

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.