மூவா நினைவுகள்

மூவா நினைவுகள் என்பது தமிழறிஞர் மு. வரதராசன் அவர்களின் நினைவுப் பதிவு நூல் ஆகும். இதனை முனைவர் ம. ரா. போ. குருசாமி எழுதியிருக்கிறார். மூவா என்னும் சொல்லுக்கு அழியாத என்பது பொருள். மாணவர் ஒருவர் தன் பேராசிரியர் ஒருவரைப் பற்றி தன்னுள் அழியாது இருக்கும் நினைவுகளை பற்றிக் கூறுவதால் இந்நூலிற்கு மூவா நினைவுகள் எனப் பெயரிட்டப்பட்டு உள்ளது.

மூவா நினைவுகள்
நூல் பெயர்:மூவா நினைவுகள்
ஆசிரியர்(கள்):முனைவர் ம. ரா. போ. குருசாமி
வகை:வாழ்க்கை வரலாறு
துறை:நினைவலைகள்
இடம்:கோயம்புத்தூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:விஜயா பதிப்பகம், 20 அரச வீதி, கோயம்புத்தூர்
பதிப்பு:அக்டோபர் 2011
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

மு.வ.வும் ம.ரா.போ.கு.வும்

மு.வ. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்த பொழுது 1940-41ஆம் கல்வியாண்டில் அங்கு இடைநிலை (Intermediate) வகுப்பிற் சேர்ந்தவர் ம.ரா.போ.கு. அங்கேயே தொடர்ந்து படித்து 1944-45ஆம் கல்வியாண்டில் BOL (Hons) பட்டம் பெற்றவர். அப்பொழுது மு.வ. அவருக்கு ஆசிரியராக, நண்பராக, வழிகாட்டிய இருந்திருக்கிறார். அந்த உறவு மு.வ. மறைந்த 1974ஆம் ஆண்டு வரை தொடர்ந்திருக்கிறது. அந்த 35 ஆண்டு காலத்தில் தமக்கும் தம் ஆசிரியருக்கும் இடையே நிலவிய உறவைப் பற்றிய நினைவலைகளை 19 கட்டுரைகளாக, மு.வ.வின் நூற்றாண்டை ஒட்டி இதழொன்றில், குருசாமி எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

பொருளடக்கம்

  1. மற்றும் ஒரு தெ.பொ.மீ.
  2. பாடங்களுக்கு அப்பாலும்…
  3. திருத்தமான திருத்தம்
  4. இரக்கம் சாதி பாராது
  5. தோற்றது பகுத்தறிவு
  6. வெறும் கட்ட்டமா?
  7. திலகா: செந்தாமரை
  8. தவறான செய்திக்கு இரையான நாவல்
  9. எளிமையின் எல்லை; வண்மை
  10. கோவையில் மு.வ.
  11. தண்டனை
  12. தனிக்கவனம்
  13. ஆடம்பரம் ஆத்திகர்க்குக் கூடாது
  14. கடமை நோன்பு
  15. மு.வ.எழுத்தில் குறை!?
  16. நான் ஓர் அணில்
  17. தீராதவை – தீர்க்க முடியாதவை
  18. முடிந்த்து, எல்லாமே முடிந்தது
  19. வரதராச உபநிடதம்

நூலில் இருந்து சில துளிகள்

  • எங்கள் ஆசிரியர் மு.வ. அவர்கள் நன்னூல்வழி அறிமுகப்படுத்தப்படும் அத்தனை இலக்கணங்களுக்கும் முற்றிலும் பொருத்தமான ஒரு பெருந்தகை. இந்த வகையில் அவர் இன்னொரு தெ.பொ.மீ.
  • பாடப் புத்தகத்தை ஒழுங்காகக் கற்பிப்பவன் வாங்கும் சம்பளத்துக்கு மட்டுமே உண்மை பேணுபவன்; சமுதாய உணர்வு முதலான உணர்வுகளையும் சேர்த்து – இளைஞனை சமுதாய உணர்வுடையவனாக ஆக்குவோனே நல்லாசிரியன்.
  • பாடத்திற்கு அப்பாலும் ஆசிரியர் மு.வ. ஒரு புரவலராய் – உற்றுழி உதவும் நண்பராய் – வழிவகுத்து நடத்தும் தந்தையாய், தாயாய் விளங்கியவர் எங்கள் மு.வ.
  • சிறப்புத் தமிழ் பயில்கின்ற மாணவனை மதிப்பிடுவது வேறு; பொதுத்தமிழ் மாணவனை மதிப்பிடுவது வேறு. முன்னவனின் பிழைகள் எல்லாவற்றையும் புலப்படுத்த வேண்டும். பொதுத்தமிழ் படிக்கின்ற மாணவனின் பிழைகள் எல்லாவற்றையும் சுட்டி, அவனை அச்சுறுத்தக் கூடாது. மு.வ.வின் திருத்தமான திருத்த முறை இது.
  • பிச்சைப் பாத்திரத்துக்குச் சாதி இல்லை. அங்கும் சாதி பார்ப்பவன் கொடிய அரக்கன். இரக்கம் சாதி பாராது.
  • பக்தியும் ஒருவகைப் பற்றுத்தான். பக்தியும் பாசமும் இருக்கும் இடத்திலே பகுத்தறிவு செயலற்றுப் போகும்.
  • எளிய வாழ்க்கை; எது மிஞ்சினாலும் ஏழைக்கு. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது – இது கிராமிய மு.வ.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.