தாயுமானவர்

தாயுமானவர் (1705 - 1742) தமிழில் மெய்ப்பொருள் பற்றிப் புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.

தாயுமானவர்

வாழ்க்கைக் குறிப்பு

இவர் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யத்தில் பிறந்தார். இவர் தந்தையார் கேடிலியப்பர் மற்றும் தாயார் கெஜவல்லி அம்மையார் ஆவார்கள். இவர் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். தாயுமானவர் திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து, அப்போது முக்கியமான ஆவணம் ஒன்றை அரசவையில் இவர் கையால் கசக்கிப் போட, இவர் தன்னிலை மறந்து இறைவியுடன் ஒன்றிப்போய் இந்தக் காரியம் செய்வதை அறியாத சபையினர் அரசனுக்கும், அரசிக்கும் அவமரியாதை என அவதூறு பேசினார்கள். ஆனால் அதே சமயம் திருவானைக்கா அகிலாண்டேசுவரி கோயிலில், அம்பாளின் ஆடையில் நெருப்புப் பற்றியதைச் சிவாசாரியார்கள் கவனிப்பதற்குள் தாயுமானவர் நுழைந்து தம் கையால் கசக்கி அந்த நெருப்பை அணைத்ததைச் சிவாசாரியார்கள் கண்டனர். அவர்கள் உடனே ஓடோடி வந்து நடந்ததைக் கூற, தாயுமானவரின் சக்தியைப் புரிந்து கொண்டு வியந்தனர் என்பார்கள்.

தம் எளிய பாடல்கள் மூலம் தமிழ்ச்சமயக் கவிதைக்கு ஒரு தூணாக இருந்தவர் தாயுமானவர். வள்ளலாரும், பாரதியாரும் இத்தகைய எளிய கவிதைகள் பாட இவர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும் சொல்லுவதுண்டு. பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த, திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.

தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர், பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.

தாயுமானவரின் பாடல்

தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய 'பராபரக் கண்ணி' மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில்,

"“அண்டகோடி புகழ்காவை வாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே!”

என்று தாயுமானவர் அம்பாளைப் பாடியுள்ளார். 1736 ஆம் ஆண்டு துறவு பூண்ட தாயுமானவரை ஒரு சித்தர் என்பார்கள். அவர் சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பினார். இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது. தமிழ் மொழியின் உபநிடதம் என அழைக்கப்படும். இதில் 56 பிரிவுகளில் 1452 பாடல்கள் உள்ளன. மேலும், இவரின் பாடல்களில் உவமைகளும், பழமொழிகளும் மிகுந்துள்ளன.

"சினம் அடங்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம் அடங்கக் கல்லார்க்கு 'வாயேன்' பராபரமே”

(இருபொருள்: வாய்க்க மாட்டேன், வாய் ஏன்)

எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

என்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.

தாயுமானவரின் பணி

இவரது தந்தையான கேடிலியப்பர் திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார். விசயரகுநாத சொக்கலிங்கர் ஆட்சியிலும், அவர் மனைவி இராணி மீனாட்சி ஆட்சியிலும் கணக்கராகப் பணியாற்றினார்.

துறவு வாழ்க்கை

மட்டுவார்குழலி என்னும் மங்கையை மணந்து வாழ்ந்தார். பின்னர்த் துறவு வாழ்கையில் நாட்டங்கொண்டு துறவு பூண்டார். திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும், ஆசியும் பெற்றுச் சிறந்து விளங்கினார். அவர் முக்தி பெற்ற இடம் இராமநாதபுரத்தில் உள்ள இலட்சுமிபுரமாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.