பூசிங்

பூசிங் (Pusing, சீனம்: 布先), மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, பாப்பான், சீபூத்தே, லகாட் போன்ற இடங்கள் உள்ளன. பூசிங், ஈப்போ மாநகரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பூசிங் என்பது ஒரு மலாய்ச் சொல். ’சுற்றுதல்’ என பொருள்படும்.

Yayladağı < br /> Pusing < br />布先
நாடு மலேசியா
உருவாக்கம்பூசிங்: 1880
பரப்பளவு
  மொத்தம்10
மக்கள்தொகை (2010)
  மொத்தம்26,183
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

இந்த நகரில் சீனர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். 19ஆம் நூற்றாண்டில், சீனா, குவாங்டுங் (சீனம்: 中国广东省) மாநிலத்தில் இருந்து வந்த ஹாக்கா இனத்தைச் சேர்ந்த சீனர்கள், இந்த பூசிங் நகரைத் தோற்றுவித்தனர்.[1]

வரலாறு

பூசிங் உருவாக்கப்பட்ட காலத்தில் ‘ஷீடி’ (ஆங்கிலம்: Xi Di சீனம்:锡地) என்று அழைக்கப்பட்டது. அச்சொல் ஈய நிலம் என்று பொருள்படும். 1980களில் இங்குள்ள ஈயச் சுரங்கங்கள் மூடப்பட்டன. அதன் பிறகு அந்த நகரம் ஒரு தூங்கும் நகரமாக அடைமொழி பெற்றது.

பல கோட்டீஸ்வரர்களை உருவாக்கிய இந்த நகரத்தில் இப்போது வயதானவர்கள் மட்டுமே இருக்கின்றனர். இளம் வயதினர் வேலை, தொழில் காரணமாக வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். பெருநாள் காலங்களில் மட்டும் வந்து செல்கின்றனர்.

ஈய மண் துகடுகள்

இந்த நகரத்திற்கு பூசிங் எனும் பெயர் வந்ததற்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. முன்பு காலத்தில் பூசிங் நகரில் ஒரு சின்ன சீனி ஆலை இருந்தது. அந்த ஆலையில் கரும்புகளை ஓர் உருண்டையான உரலுக்குள் போட்டு மாடுகளை இழுக்க வைத்து கர்ப்பஞ்சாறுகளைப் பிழிந்து எடுத்தார்கள். மாடுகள் கல் உரலைச் சுற்றி சுற்றி வந்ததால் ‘பூசிங்’ எனும் பெயர் வந்திருக்கலாம். பூசிங் என்றால் சுற்றுதல் என்று பொருள்.

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. முன்பு காலத்தில் ஆற்றோரங்களில் இருப்புச் சட்டிகளைக் கொண்டு ஈயத்தை அலசி எடுத்தனர். அவ்வாறு இருப்புச் சட்டிகளைச் சுற்றுவாக்கில் அலசியதால் பூசிங் எனும் பெயர் வந்திருக்கலாம் என்றும் சிலர் சொல்கின்றனர். அக்காலத்தில் ஆற்றுப் படுகைகளில் நிறைய ஈய மண் துகடுகள் கிடைத்தன.

பச்சை மலைக் கிராமம்

1950களில் பூசிங் நகரம் ஈய உற்பத்தியில் சிறந்து விளங்கியது. அப்போது பெரும்பாலோர் குனோங் ஹிஜாவ் ’Gunung Hijau’ ( சீனம்:喜州新村) எனும் பச்சை மலை கிராமத்தில் வாழ்ந்தனர். அந்தக் கிராமத்தைச் சீனர்கள் சோ முன் லூங் ’Chow Mun Loong’ (சீனம்:曹文龙) என்று அழைத்தனர். பூசிங் பகுதியில் ஈயம் தோண்டி எடுத்து பணக்காரர்கள் ஆனவர்கள் பலர் உள்ளனர். ரப்பரும் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டது.[2]

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற ’சன்வே லாகூன்’ Sunway Lagoon' [3]எனும் விளையாட்டு மையத்தை உருவாக்கிய டான்ஸ்ரீ டாகடர் ஜெப்ரி சியாவின் தந்தையார் டத்தோ சியா பா என்பவரும் அவர்களில் ஒருவர்.

ஈயக் குளங்களும் குழந்தைகளும்

1950, 1960களில் திருவிழாக் காலங்களில் பூசிங் நகர உணவகங்களில் பெரும் அளவில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த விருந்துகளில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் என எல்லா இனத்தவரும் பாகுபாடு இல்லாமல் கலந்து கொண்டனர். அந்தக் காலகட்டத்தில் ஈய உற்பத்தி உச்சத்தில் இருந்தது.

பூசிங் நகரில் சீக்கியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மாடுகளை வளர்த்து பூசிங் வட்டார மக்களுக்குப் பால் விநியோகம் செய்து வந்தனர். இருப்பினும் பூசிங் பகுதியில் அதிகமாகக் காணப்பட்ட ஈயக் குளங்கள் பெற்றோர்களுக்கு கவலையை அளித்து வந்தன. ஏனெனில் அக்குளங்களில் நீந்தி விளையாடப் போகும் குழந்தைகள் பலர் மூழ்கி இறந்து போயினர்.

மலாயா அவசரகாலம்

ஜப்பானியரின் ஆட்சி காலத்திலும், மலாயா அவசரகாலத்திலும் [4]பூசிங் மக்கள் மற்ற நகர மக்களைப் போல பெரும் துயரமான வாழ்க்கை வாழ்ந்தனர். பூசிங் நகரைச் சுற்றிலும் மின்வேலிகள் அமைக்கப்பட்டன. பொது மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உணவுகள் வழங்குவதைத் தடுக்கவே அந்த மின்வேலிகள் போடப்பட்டன.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் பூசிங்கில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் தலை தூக்கியது.[5]ஜப்பானியர்களின் ஆட்சியின் போது அவர்களை எதிர்க்கும் போராளிப் படையினருக்கு பிரித்தானியர்கள் ஏற்கனவே ஆயுதங்களை வழங்கி ஊக்குவிப்பு செய்தனர். ஜப்பானிய ஆட்சியின் போது அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்கள் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.

ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்

இந்தக் கொரில்லா போராளிக் குழு மலாயா முழுவதும் பரவியிருந்தது. பேராக் மாநிலத்தில் மட்டும் பூசிங், பாப்பான், லகாட், துரோனோ, சுங்கை சிப்புட், சிம்மோர், தஞ்சோங் ரம்புத்தான், தம்பூன், கம்பார் நகரம், தஞ்சோங் மாலிம், சிலிம் ரிவர் போன்ற இடங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்திய இந்த மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம் பின்னாளில் மலாயா கம்னியூஸ்டு கட்சி என்று கொள்கை மாற்றம் அடைந்தது.

கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம்

மலாயாக் கம்னியூஸ்டுக் கட்சி ஒட்டு மொத்த மலாயாவையும் ஒரு கம்னியூச நாடாக மாற்ற திட்டங்களை வகுத்து வைத்து இருந்தது. மலாயாவைத் தங்கள் பிடிக்குள் கொண்டு வர பல நாச வேலைகளிலும் ஈடுபட்டது. அந்தக் கட்சிக்கு சின் பெங் என்பவர் தலைமை வகித்தார். இவர் இப்போது தாய்லாந்து நாட்டில் அரசியல் அடைக்கலம் அடைந்துள்ளார்.

பூசிங் நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல அசம்பாவிதங்கள் நடைபெற்று உள்ளன. சுங்கை சிப்புட்டில் கம்யூனிஸ்டுகள் சில பிரித்தானிய துரைகளையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.

முப்பது ரிங்கிட் அபராதம்

மலாயா அவசரகாலத்தின் போது பூசிங் நகரம், ஒரு கறுப்பு நகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ஒரு முறை பூசிங்கில் ஒரு பிரித்தானியர் கம்யூனிஸ்டு கொரில்லாக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அது தொடர்பான தகவல்களை பூசிங் மக்கள் பிரித்தானியர்களுக்கு வழங்க மறுத்தனர். அதனால், கோபம் அடைந்த பிரித்தானியர்கள், பூசிங்கில் வாழ்ந்தவர்களில் 18 வயதிற்கும் மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் முப்பது ரிங்கிட் அபராதம் விதித்தனர்.

சேகரிக்கப்பட்ட அபராதத் தொகையில் ஒரு பகுதி பூசிங் பொது நூலகம் உருவாக்கப் பயன்பட்டது. ஒரு குறிப்பிட்ட தொகை பூசிங் ஆங்கிலத் தொடாக்கப் பள்ளி கட்டுவதற்கு பயன்பட்டது. மிச்சப் பணம் கொல்லப்பட்ட பிரித்தானிய அதிகாரியின் குடுமபத்திற்கு வழங்கப்பட்டது.

ஹாக்கா உணவுகள்

இப்போது பூசிங்கில் மக்களின் பெருக்கம் தேக்கம் அடைந்துள்ளது. இங்கு ஒரு சில காய்கறி விவசாயிகள், சிறு வியாபாரிகள், இயந்திரங்களைப் பழுதுபார்ப்பவர்கள், ரப்பர் சிறுதோட்டக்காரர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

சீனர்களில் ஹாக்கா சமூகத்தவர் தயாரிக்கும் ஹாக்கா உணவுகள் மிகவும் பிரபலமானவை.[6]அந்த உணவுகளை ருசி பார்க்க நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்து மக்கள் பூசிங் நகருக்கு வருவது உண்டு. பாரம்பரிய ஹாக்கா உணவுகள் ஒரு நூற்றாண்டு காலமாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.