லாருட், மாத்தாங், செலாமா

லாருட், மாத்தாங், செலாமா (Larut, Matang, Selama) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் தலைப்பட்டணமாக தைப்பிங் விளங்குகிறது. லாருட், மாத்தாங், செலாமா ஆகிய மூன்று சிறு மாவட்டங்களும் ஓர் ஐக்கிய மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Larut Matang Selama
லாருட் மாத்தாங் செலாமா
மாவட்டம், மலேசியா
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
டாருல் ரிசுவான்
தொகுதிதைப்பிங்
அரசு
  மாவட்ட அதிகாரிஹாருன் பின் ரவி
பரப்பளவு
  மொத்தம்2,095
மக்கள்தொகை (2005)
  மொத்தம்3,07,900
  அடர்த்தி150

இந்த மாவட்டத்திற்கு ஒரு நீண்ட கால வரலாறு இருக்கிறது. 1850களில் இருந்து அந்த வரலாறு தொடங்குகிறது. தைப்பிங், மாத்தாங் பகுதிகளில் லாருட் கலகம் மலேசிய வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் தான் மலாயாவின் முதல் புகைவண்டிச் சேவை தைப்பிங்கில் இருந்து கோலா செபாத்தாங் வரை தொடங்கப்பட்டது.

வரலாறு

கோலாலம்பூர் இப்போது மலேசியாவின் தலைநகரமாக இருந்தாலும், அதற்கு முன்னர் தைப்பிங் தான் தலைநகரமாக விளங்கியது. அதனால் நாட்டின் முதல் புகைவண்டிச் சேவை இங்கு தொடங்கப்பட்டது. கோலா செபாத்தாங்கின் பழைய பெயர் போர்ட் வெல்ட்[1].

தற்சமயம் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் இரு தனித்தனியான நகராண்மைக் கழகங்களினால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது. லாருட், மாத்தாங் பகுதிகளுக்கு தைப்பிங் நகராண்மைக் கழகமும், செலாமா பகுதிக்கு செலாமா நகராண்மைக் கழகமும் செயல் பட்டு வருகின்றன.

லாருட்

டத்தோ லோங் ஜாபார் என்பவர் மலேசிய வரலாற்றில் முக்கிய இடம் வகிப்பவ்ர். 1848 ஆம் ஆண்டு லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டது. ஈயம் கண்டுபிடிக்கப் படுவதில் டத்தோ லோங் ஜாபார் மிக முக்கிய பங்காற்றினார்.

லாருட்டில் ஈயம் எடுக்க சீனர்கள் அங்கு நூற்றுக் கணக்கில் வந்தனர். அப்படி வந்தவர்களிடையே போட்டிகள் உருவாகின. இரு பிரதான ரகசியக் கும்பல்கள் தோன்றின. ஒரு கும்பலின் பெயர் கீ ஹின். இன்னொரு கும்பலின் பெயர் ஹை சான். இந்த இரு கும்பல்களும் அடிக்கடி மோதிக் கொண்டன. லாருட் பகுதி மக்கள் அமைதி இல்லாமல் வாழ்ந்தனர்.

கேப்டன் ஸ்பீடி

இந்தக் கும்பல்களின் அராஜகத்தை அடக்குவதற்கு கேப்டன் ஸ்பீடி (Tristam Charles Sawyer Speedy) [2]என்பவர் பினாங்கில் இருந்து வந்தார். அவருடன் இந்திய இராணுவ வீரர்களும் வந்தனர். ரகசியக் கும்பல்களின் அத்து மீறிய செயல்கள் ஓரளவுக்கு அடக்கப் பட்டன.[3]

லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. ’லாருட்’ எனும் பெயரில் டத்தோ லோங் ஜாபாரிடம் ஒரு யானை இருந்தது. அவர் வெளியே பயணம் செய்யும் போது அந்த யானையையும் தன் பரிவாரங்களுடன் உடன் அழைத்துச் செல்வது வழக்கம்.

காணாமல் போன லாருட் யானை

திடீரென்று, ஒரு நாள் லாருட் யானை காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடிப் பார்த்தார்கள். யானை கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து அந்த யானை அவரைத் தேடி வந்தது. அதன் உடல் முழுமையும் வெண்ணிறச் சேறும் சகதியுமாக இருந்தது. யானையின் கால்களில் ஈயச் சுவடுகளும் தென் பட்டன.[4]

ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் டத்தோ லோங் ஜாபார் அந்த இடத்தைத் தேடிச் சென்றார். ஈயம் இருப்பது உண்மையென அறியப் பட்டது. அதன் பின்னர் அந்த இடத்திற்கு யானையின் பெயரான லாருட் எனும் பெயரே வைக்கப் பட்டது. லாருட் யானையின் நினைவாக தைப்பிங்கில் ஒரு மாளிகை கட்டப் பட்ட்ய்ம் உள்ளது.[5]

சிங்கப்பூருக்குப் போகும் லாருட் மீன்கள்

மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடமான லாருட் இப்போது அமைதியாக ஆரவாரம் இல்லாமல் இருக்கிறது. வரண்டு போன லாருட் ஈய பூமியில் ஆங்காங்கே ஈயக் குளங்கள் உள்ளன. அங்கே மீன்கள் வளர்க்கப் பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பப் படுகின்றன. ஓரளவுக்கு விவசாயம் செய்யப் படுகிறது.

தமிழர்களைப் பொருத்த வரையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். லாருட்டிற்கு மலேசிய வரலாற்றில் தனி இடம் உண்டு. 1850 ஆம் ஆண்டு லாருட் மாவட்டத்தை டத்தோ லோங் ஜாபாருக்கு பேராக் சுல்தான் அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சீனர்களும் தமிழர்களும்

1950 களில் இங்கு ஆயிரக்கணக்கான சீனர்கள் வாழ்ந்தனர். ஈய வணிகம் உச்சக் கட்டத்தில் இருந்தது. சீனர்களும் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்ந்தனர். சீனப் பெருநாளின் போது சீனர்களின் வீட்டிற்கு தமிழர்கள் போவார்கள். தமிழர்களின் வீட்டிற்கு சீனர்கள் வருவார்கள். தமிழர்களின் கோயில் திருவிழாக்களில் சீனர்கள் அலகு குத்தி காவடிகள் எடுத்தனர். கோயில்களில் அன்னதானம் செய்யும் செலவுகளை சீனர்கள் எற்றுக் கொண்டனர்.

தீபாவளிக் காலங்களில் தமிழர்களின் வீட்டிற்கு செல்லும் சீனப் பெண்கள் தீபாவளிப் பலகாரங்கள் செய்வதற்கு உதவி செய்வார்கள். அதே போல சீனர்களின் வைபவங்களுக்குப் போகும் தமிழ்ப் பெண்கள் அவர்களுக்கு வீட்டு வேலைகள், மற்ற உதவிகளையும் செய்வார்கள். குடும்ப உறவுகள் வலுப்பெற்றன.

காதல் திருமணங்கள்

இப்படிப் பழகியவர்களிடையே நெருக்கமான உறவுகளும் ஏற்பட்டன. சீனர்களின் பெண்களைத் தமிழ் இளைஞர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மலேசியாவில் ஆயிரக் கணக்கான சீனப் பெண்கள் தமிழ் இளைஞர்களைத் திருமணம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அதே போல சீனர்களும் சிலர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்துள்ளனர்.

1970 களில் மலேசியப் பங்கு பரிவர்த்தனை பரிமாற்றத்தில் லாருட் எனும் பெயர் மிகப் பிரபலமாக விளங்கியது. இப்போது சுவடுகள் இல்லாமலே போய் விட்டது. அண்மையில் இப்பகுதியில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், அதிக செலவாகும் எனும் காரணத்தினால் தோண்டி எடுக்கும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.

மெக்ஸ்வல் மலை

மெக்ஸ்வல் மலை (Maxwell Hill|Bukit Larut)[6]. இப்போது புக்கிட் லாருட் என்று அழைக்கப்படுகிறது. 1979 ஆம் ஆண்டு பெயர் மாற்றம் அடைந்தது. இது தைப்பிங் நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது. 1884 ஆம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் மெக்ஸ்வல்[7] என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் நினைவாக அந்த இடத்திற்கும் அவருடைய பெயர் வைக்கப்பட்டது.[8][9] இவர் அப்போது பேராக் மாநிலத்தின் துணைப் பிரித்தானிய நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

மலேசியாவில் அதிகமாக மழை பெய்யும் இடம்

மெக்ஸ்வல் மலை மலேசியாவிலேயே மிகவும் பழமையான உல்லாசப் பொழுது போக்கு மலைத் தளம் ஆகும். இது 1250 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. மலேசியாவில் இங்கு தான் அதிகமான மழை பெய்கிறது[10]. இதன் தட்ப வெப்ப நிலை 15 – 28 பாகை செலிசியஸ்.

மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல சிறப்பு வகையான மலையுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு வரை மலை உச்சிக்குச் செல்ல குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மெக்ஸ்வல் மலைக்குச் செல்லும் பாதையில் 72 ஊசிமுனை வளைவுகள் உள்ளன.

இந்த மலைத் தளத்திற்கு அதிகமான ஐரோப்பியர்கள் வருகின்றனர். இதன் இயற்கை அமைப்பு சுவிட்சர்லாந்து நாட்டைப் போல இருக்கும். தட்ப வெப்ப நிலையும் குளிராக இருப்பதால் அதிகமான வெளிநாட்டவரைக் கவரும் இடமாகத் திகழ்கின்றது.

தமிழர்கள்

மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் லாருட், மாத்தாங், செலாமா பகுதிகளும் ஒன்று. இங்கு நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. குடியேற்ற மேம்பாட்டிற்காகவும், தொழில்துறை வளர்ச்சிக்காகவும் பல தோட்டங்கள் காணாமல் போய்விட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்கள் நகர்ப் புறங்களுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் இந்தப் பகுதியில் இருந்த தோட்டங்களில் ஒவ்வொரு தோட்டத்திலும் ஒவ்வொரு கோயில், ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கூடம் இருந்தது. ஏறக்குறைய 35 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் இருந்தன. தோட்டங்கள் துண்டாடப் பட்டதும் அங்கிருந்த தமிழ்ப்பள்ளிகளும் மறைந்தன அல்லது மறைக்கப் பட்டன.

மொழி வெறி

அரசியல் காரணங்களினால் தமிழ்ப்பள்ளிகள் அப்புறப் படுத்தப் பட்டன. அவற்றுள் தப்பி வந்தவை சில தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் மட்டுமே. தமிழர்களின் கோயில்கள் பல்வேறு காரணங்களினால் இடிக்கப் பட்டன. இன்று வரை மலேசியத் தமிழர்கள் தங்களின் சமய சுதந்திரத்திற்காகப் போராட்டம் செய்து வருகின்றனர்.

அண்மைய காலங்களில் ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடமும் மூடப்படவில்லை. இந்த விஷயத்தில் மலேசியத் தமிழர்கள் ஒன்று கூடி விடுகின்றனர். ஒரு பள்ளிக்கூடம் மூடப் படும் நிலை எற்பட்டால் அதை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்கிற மொழி வெறி உண்டாகி இருக்கிறது.

இந்திய அரசியல் தலைவர்கள்

பணத்தைச் சேர்த்து அந்தப் பகுதியில் எங்காவது ஒரு நிலத்தை வாங்கி விடுகிறார்கள். அதற்கு அவசரமாக அடிக்கல் நாட்டி அஸ்திவாரம் போட்டு விடுகிறார்கள். அங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்டப் படுகிறது. இந்திய அரசியல் தலைவர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

அத்தொகுதியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து கொள்கின்றனர். அரசியல் நிலவரங்களுக்கு ஏற்றவாறு மலேசியத் தமிழர்களும் சமுதாய நலன்களைக் காக்கும் திட்டங்களில் சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் கணிசமான அளவிற்கு அரசாங்க மான்யங்களைப் பெற்றுத் தருகின்றனர். நல்ல தரமான பள்ளிக்கூடங்களை கட்டுவதற்கு உதவியும் செய்கின்றனர். பள்ளிக்கூட மாணவர்களைப் பள்ளிக்கு ஏற்றிச் செல்ல பேருந்துகளையும் பெற்றுத் தருகின்றனர்.

பல்கலைக்கழகம் போல காட்சி அளிக்கும் சில தமிழ்ப்பள்ளிகள் மலேசியாவில் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி 91 இலட்சம் ரிங்கிட் செலவில கட்டப் பட்டுள்ளது. (முப்பது இலட்சம் அமெரிக்க டாலர்கள்)

தமிழ்ப்பள்ளிகள்

லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல். அண்மையில் சில பள்ளிகளின் பெயர்கள் மாற்றம் அடைந்துள்ளன. சில பள்ளிகள் விடுபட்டும் போயிருக்கலாம்.

  • கமுந்திங் தமிழ்ப்பள்ளி[11]
  • YMHA தமிழ்ப்பள்ளி[12]
  • செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி[13]
  • உலு செபாத்தாங் தமிழ்ப்பள்ளி[14]
  • செலாமா தமிழ்ப்பள்ளி[15]
  • போண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளி[16]
  • ஹோலிரூட் தமிழ்ப்பள்ளி
  • மலாயாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி[17]
  • சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • லாவுட்ரால் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • கம்போங் ஜெபோங் தமிழ்ப்பள்ளி
  • பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி
  • தைப்பிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • அழகர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • ஸ்டவ்தன் தோட்டத் தமிழ்ப்பள்ளி

வெளி இணைப்புகள்

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.