சித்தியவான்

சித்தியவான் (Sitiawan) மலேசியாவின் பேராக் மாநிலத்தில், துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம் ஆகும். இது மஞ்சோங் மாவட்டத்தில் இருக்கிறது. 1900களில், சீனாவில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக சில நூறு சீனர்கள், இங்கு குடியேறினார்கள். ஒரு கால கட்டத்தில், சீனாவின் குத்தியான், பூசோவ் மாநிலத்தில் இருந்து வந்து குடியேறிய சீனர்களினால் இந்த நகரம் ஆதிக்கம் பெற்று இருந்தது.

சித்தியவான்
Sitiawan
实兆远
மாவட்ட பிரதான நகரம்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Setia Kawan
குறிக்கோளுரை: Bandar Pelancongan Maritim
நாடுமலேசியா
மாநிலம்பேராக்
அமைவு1903
அரசு
  நகராண்மைத் தலைவர் (யாங் டி பெர்துவா)[1]டத்தோ சாம்ரி பின் மான்
பரப்பளவு
  மொத்தம்331
மக்கள்தொகை (2000)
  மொத்தம்95,920
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே)
இணையதளம்மஞ்சோங் நகராண்மைக் கழகம்

ரப்பர் தோட்டங்களினால் சூழப்பட்டு இருந்த சித்தியவான் இப்போது வெகு துரிதமாக வளர்ச்சி பெற்று வருகிறது. அரச மலேசிய கப்பல் படைத் தளம், இந்த நகருக்கு அருகாமையில் இருக்கும் லூமுட் நகரில் உருவாக்கப்பட்டுள்ளது.[2] இந்த நகரம் சரித்திரப் புகழ் வாய்ந்தது.[3] நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நாடோடிகளாக வந்த இரு சீனச் சமயத் தலைவர்கள், இங்கு இரு சீனக் கோயில்களைக் கட்டினர். பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் இன்று வரை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன.[4]

சித்தியவான் நகரில் அதிகமாக இந்தியர்களைக் காண முடியும். 1900களில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய வந்த அவர்களில் பலர், சமூக அரசியல் நிலைகளில் உயர்ந்து காணப்படுகின்றனர். மலாயா கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கிய சின் பெங் என்பவர் இங்குதான் பிறந்தார்.[5]

வரலாறு

நாட்டுப்புறக் கதைகளில் சித்தியவான் நகரம் ‘கம்போங் சுங்கை காஜா மத்தி’என்று அழைக்கப்படுகிறது.[6] 'இறந்து போன யானையின் ஆற்றுக் கிராமம்' என்று பொருள்படும். ஈய மூட்டைகளைச் சுமந்து செல்லும் போது, இரண்டு யானைகள் டிண்டிங்ஸ் ஆற்றின் சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொண்டன. ஒரு யானை மூழ்கி அங்கேயே இறந்து போனது.

ஒரு யானை தப்பித்துக் கொண்டது. உயிரோடு இருந்த யானையைக் கரைக்கு கொண்டு வர பல முயற்சிகள் செய்யப்பட்டன. இருந்தாலும் அந்த யானை கரைக்கு வர மறுத்தது. கடைசி வரை இறந்து போன யானையுடன் இருந்து, அதுவும் இறந்து போனது. நட்பின் திடமான விசுவாசத்திற்காக அந்த இடத்திற்கு,’செத்தியா காவான்’ என்று வேறு ஒரு பெயரும் வைக்கப்பட்டது.

ஈய மூட்டைகள்

19ஆம் நூற்றாண்டில் ஈயமும், ரப்பரும் பிரதான உற்பத்திப் பொருட்களாக இருந்தன. ஈய மூட்டைகள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு, லூமுட் கடல்கரையில் அணைந்து இருந்த நீராவிக் கப்பல்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அந்தக் கப்பல்கள் ஈய மூட்டைகளை பினாங்குத் தீவிற்கு கொண்டு சென்றன.[7]

1870களில் சித்தியவான் பகுதியைப் பெரியம்மை நோய் தாக்கியது. இறந்து போன யானைகளினால்தான் பெரியம்மை அந்த நகரைத் தாக்கியதாகச் சீனர்கள் நம்பினர். அதனால், அந்த யானைகளைச் சாந்தப் படுத்த ’கம்போங் சுங்கை காஜா மத்தி’ எனும் நகரின் பெயரை, செத்தியா காவான் என்று பெயர் மாற்றம் செய்தார்கள்.

இந்தச் செத்தியா காவான் எனும் பெயர்தான் காலப் போக்கில் ‘சித்தியவான்’ என்று மாறிப் போனது. இப்போது சித்தியவான் என்றும் அழைக்கப்படுகிறது.

கம்போங் கோ

1903ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவின் பூஜியான் மாநிலத்தில் இருந்து 360 கிறிஸ்துவச் சீனர்கள் சித்தியவானில் குடியேறினார்கள். அப்பொழுது சீனாவில் வறுமையும் பஞ்சமும் ஏற்பட்டு இருந்தன. அவற்றில் இருந்து தப்பிக்க அந்தக் கிறிஸ்துவச் சீனர்கள், இங்கு வந்து குடியேறினர்.

கம்போங் கோ எனும் ஒரு புதிய கிராமத்தை உருவாக்கினார்கள். இந்த கம்போங் கோ, தற்சமயம் மிளகாய்ச் சுவைச் சாறு தயாரிப்பதில் மலேசியாவிலேயே புகழ்பெற்று விளங்குகிறது.

பழமை வாய்ந்த கிணறுகள்

சித்தியவானில் குடியேறிய சீனர்கள் ரப்பர் தோட்டங்களிலும், ஈயச் சுரங்கங்களிலும் வேலை செய்தனர். அவர்கள் சித்தியவானில் நான்கு கிணறுகளைத் தோண்டினர். 1930களில் இரு கிணறுகளும், 1950களில் இரு கிணறுகளும் தோண்டப்பட்டன. பழமை வாய்ந்த அந்தக் கிணறுகள் இன்றும் உள்ளன. இருப்பினும் இன்றைய காலத்தில் அவை பயன்படுத்தப் படவில்லை.

இராமசாமி பழனிச்சாமி

பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரர் ஆவார். ராமசாமி மே 10 , 1949 அன்று சித்தியவானில் பிறந்தார். தனது தந்தை பழனிசாமி மற்றும் தாயார் பழனியம்மாள் தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து 1920 ல் மலாயா குடிபெயர்ந்தனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.