பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி

பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி மலேசியா, பகாங் மாநிலத்தின் தலைப் பட்டணமான குவாந்தான் மாநகரில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப்பள்ளி ஆகும்.[2] 1923 ஆம் ஆண்டில் ஒரு மரத்தடியில் 15 மாணவர்களைக் கொண்டு உருவான இந்தப் பள்ளி இப்போது பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. 91 இலட்சம் மலேசிய ரிங்கிட் செலவில் கட்டப் பட்ட இப்பள்ளி தான் மலேசியாவிலேயே அதிகமான செலவில் கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளியாகும்.

பண்டார் இந்திரா
மக்கோத்தா தமிழ்ப்பள்ளி
SJKT Bandar Indera Mahkota
அமைவிடம்
பண்டார் இந்திரா மக்கோத்தா, குவாந்தான், பகாங், மலேசியா
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
தொடக்கம்1923[1]
பள்ளி மாவட்டம்குவாந்தான்
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி
பள்ளி இலக்கம்CBD4051
தலைமை ஆசிரியர்ஆர்.பி.வேலாயுதம் AMN., PPT., PJK., PJM., PBB.

தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்427
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்

வரலாறு

தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்பிக்கும் பொருட்டு தனியார் ஏற்பாட்டில் ஒரு மரத்தின் அடிகில் இப்பள்ளி தொடங்கியது. ஐந்தாண்டுகள் கழித்து 1928 ஆம் ஆண்டு குவாந்தான் பெஞ்சாரா சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தோற்றம் கண்டது.

பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் போது அது ஒரு சோகமான கதையாக இருக்கிறது. தமிழ்மொழியைப் படிக்க 15 மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள். ஆனால், வகுப்புகளை நடத்த இடமில்லை.

மரத்தின் அடியில் வகுப்புகள்

அதனால், தானா பூத்தே எனும் இடத்தில் ஒரு மரத்தின் அடியில் தமிழ்மொழி வகுப்பு தொடங்கியது. பின்னர், 1925 இல் ஜாலான் பெரிசாய் எனும் ஜாலான் மாட் கிலாவ் சாலையில் இருந்த ஒரு கடையின் மேல்மாடியில் வகுப்புகள் தொடர்ந்தன. ஆனால், இப்போது இப்பள்ளி ஒரு புதியக் கட்டடத்தைப் பெற்றுவிட்டது. இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர் அமரர் எஸ்.எஸ்.ஏகாம்பரம் ஆவார்.

சிறைச்சாலைப் பள்ளி

1968 ஆம் ஆண்டு தொடங்கி பள்ளியின் புறத் தோற்றத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய இரண்டு மாடிக் கட்டடம் எழுந்தது. சிற்றுண்டிச்சாலை நிர்மாணிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் நான்கு பேருந்துகள் வாங்கப்பட்டன.

இப்பள்ளி பெஞ்சாரா சாலையில் இயங்கி வந்ததால் சிறைச்சாலையோடு இணைத்துப் பேசப்பட்டது. பெஞ்சாரா (Penjara) என்றால் மலேசிய மொழியில் சிறைச்சாலை என்று பொருள். பலர் இதனை விரும்பவில்லை. பின்னாளில் இதற்கு ஒரு தீர்வு ஏற்பட்டது.

பள்ளியின் பெயர் மாற்றம்

2003 ஆம் ஆண்டு மலேசிய கல்வி அமைச்சு 91 இலட்சம் வெள்ளி செலவில் பெரிய அளவிலான ஒரு பள்ளியை ஜாலான் பெஞ்சாரா தமிழ்ப்பள்ளிக்கு இந்திரா மக்கோத்தா பட்டணத்தில் கட்டித் தந்தது.

ஜாலான் பெஞ்சாரா தமிழ்ப்பள்ளி, பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது. இப்பள்ளியை அன்றைய பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

தலைமையாசிரியர்கள்

  • எஸ். எஸ். ஏகாம்பரம்
  • மீனாம்பாள் பொன்னையா
  • எஸ். சுவாமிநாதன்
  • எஸ். சின்னையா
  • பொன்னுசாமி நாயுடு
  • வி. சுப்பையா
  • கே. சுப்பிரமணியம்
  • இராமநாயுடு
  • சாந்தி
  • வீ. தங்கவேலு PJK
  • ஆர். கோவிந்தசாமி
  • ஆர்.பி. வேலாயுதம் AMN., PPT., PJK., PJM., PBB.

பள்ளி நிர்வாகம்

2010 ஆம் ஆண்டு மே திங்கள் முதல் ஆர். பி. வேலாயுதம் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

  • தலைமையாசிரியர்: ஆர். பி. வேலாயுதம் AMN., PPT., PJK., PJM., PBB.
  • துணைத் தலைமையாசிரியர் (கலைத் திட்டம்): கா. விஜயா
  • துணைத் தலைமையாசிரியர் (மாணவர் நலன்): மாரியம்மாள்
  • துணைத் தலைமையாசிரியர் (இணைப் பாடம்): புஷ்பவள்ளி
  • பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்: டாக்டர் ஆர். சுதேசன்

இப்பள்ளியின் 29 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளியின் நிர்வாகத்திற்கு உதவ 4 அலுவலக ஊழியர்களும் 5 பொது ஊழியர்களும் உள்ளனர். 427 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.

பொது

குவாந்தான் தெய்வீக வாழ்க்கைச் சங்கம், குவாந்தான் இளைஞர் மணி மன்றம், குவாந்தான் ரோட்டரி கிளப், ஏ.எம்.வங்கி, டெலிகோம், மலேசிய இந்து சங்கம் முதலியவை இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. நாளுக்கு நாள் மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 9 மாணவர்கள் அதிகபட்ச 7A க்கள் பெற்று சாதனை படைத்தனர்.

தேர்வுப் பட்டறைகள்

இப்பள்ளியில் பயின்ற மாணவி பா. வினாஷினி தேசிய அளவில் நடைபெற்ற திடல்தட போட்டி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதனால் அவருக்கு தேசிய விளையாட்டுச் சிறப்பு பள்ளியில் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பள்ளியின் மற்றொரு மாணவியான மகேஸ்வரி லெட்சுமணன் கிழக்குக்கரை மாநிலங்களுக்கு இடையிலான ‘தேக்குவாண்டோ’ போட்டியில் தங்கம் வென்று பள்ளிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் உயர்ந்தோங்க இப்பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். மாணவர்களின் தேர்ச்சி அடைவை உயர்த்த மாலை வகுப்புகள், விடுமுறை கால வகுப்புகள், தன்முனைப்புப் பயிலரங்குகள், தேர்வுப் பட்டறைகள் முதலிய நடவடிக்கைகளைப் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அமல்படுத்தி வருகின்றன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.