ஒலிம்பிக் பட்டயம்

ஒலிம்பிக் சாசனம் (Olympic Charter) என்பது ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான கட்டமைப்பிற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கொண்ட தொகுப்பாகும். இது கடைசியாக சூலை 8, 2011இல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஒலிம்பிக் இயக்கத்தை மேலாண்மை செய்ய உதவும் ஆவணமாகும். அடிப்படைக் கொள்கைகள், விதிகள் மற்றும் துணை விதிகளை ஆவணப்படுத்தியும் தொகுத்தும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதனை வெளியிடுகிறது. இந்த சாசனம் அலுவல்முறையாக ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் வெளியிடப்படுகிறது. இவை இரண்டிற்கும் முரண் காணப்பட்டால், பிரெஞ்சுப் பதிப்பில் உள்ளதே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நோக்கம்

ஒலிம்பிக்கின் வரலாற்றில் எவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தாலும் ஒலிம்பிக் சாசனம் மூலமே தீர்வு காணப்படுகிறது. இத்தொகுப்பின் முகவுரையில் தெரிவிக்கப்பட்டபடி இதற்கு மூன்று முதன்மை நோக்கங்கள் உள்ளன:

முதன்மை உள்ளடக்கம்

ஐந்து அத்தியாயங்களையும் 61 அமைப்புவிதிகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு பல வழிகாட்டல்களையும் விதிமுறைகளையும் விவரமாக வரையறுக்கிறது.

முதல் அத்தியாயத்தில் ஒலிம்பிக் இயக்கம் குறித்தும் செயற்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நோக்கமாக ஒலிம்பிக் இயக்கத்தை உலகெங்கும் வளர்த்தெடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுக்களில் நன்னெறிப் பண்புகளை வளர்த்தல், பங்கேற்றலைக் கூட்டுதல், குறிப்பிட்ட காலவெளியில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிகழ்வதை உறுதி செய்தல், ஒலிம்பிக் இயக்கத்தைக் காபாற்றுதல், விளையாட்டுக்களை வளர்ப்பதும் ஆதரவளிப்பதும் என இதனை அமைப்புவிதி 2 விவரிக்கிறது. அமைப்புவிதி 8 ஒலிம்பிக் கொடி ஒன்றுடன் ஒன்று பிணைந்த ஐந்து வளையங்களைக் கொண்டதாயும் இந்த வளையங்களின் வண்ணம் இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பாக இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கிறது.

இரண்டாம் அத்தியாயத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு அரசு சார்பில்லா இலாபநோக்கமற்ற பன்னாட்டு அமைப்பாக விவரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் பட்டயத்தில் காணும் பொறுப்புக்களையும் பங்கையும் நிறைவேற்ற இது சுவிட்சர்லாந்தின் லோசான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் அத்தியாயம் பன்னாட்டளவில் விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட விளையாட்டுச் சார்ந்த பன்னாட்டு கூட்டமைப்புக்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் விவரிக்கிறது. இந்தக் கூட்டமைப்புக்கள் அந்த விளையாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்துவதுடன் ஒலிம்பிக் இயக்கம் வளரவும் துணை நிற்கின்றன.

நான்காம் அத்தியாயம் தேசிய ஒலிம்பிக் குழுக்களைக் குறித்தான விதிமுறைகளையும் செயற்பாட்டையும் விளக்குகின்றது.

ஐந்தாம் அத்தியாயம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது குறித்த செயல்முறைகளை விவரிக்கிறது. எவ்வாறு விளையாட்டுக்களை நடத்தும் நகரம்/நாடு தீர்மானிக்கப்படுகிறது, விளையாட்டுக்களில் பங்கேற்பதற்கான தகுதிநிலைகள், எந்தெந்த விளையாட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன போன்றவை இங்கு நெறிப்படுத்தப்படுகின்றன. மேலும் விளையாட்டுக்களின் போது நடைபெறும் விழாக்களையும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளையும் குறித்த நெறிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.