வாயிலார் நாயனார்

வாயிலார் என்னும் பெயர் பெற்ற நாயன்மார் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தவர். இவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் எப்பொழுது வாழ்ந்தார் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. இவரைப்பற்றி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் அவர்கள் தம்முடைய பெரியபுராணத்திலும், 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயன்மார், அவருடைய திருத்தொண்டத் தொகையில் "தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று கூறியிருப்பதாலும், இவர் 8 ஆம் நூற்றாண்டுக்கும் முன்னர் வாழ்ந்த சிவனடியார் என்பது புலப்படும். இவர் வாழ்க்கையின் வரலாறு மிகவும் சுருக்கமானது. இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார் என்பதே. இவர் சூத்திரத் தொல்குடியில் பிறந்த வேளாளர் என்பதை பெரிய புராணத்தில்,

வாயிலார் நாயனார்
பெயர்:வாயிலார் நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:மார்கழி ரேவதி
அவதாரத் தலம்:திருமயிலை
முக்தித் தலம்:திருமயிலை [1]

மன்னு சீர்மயி லைத்திரு மாநகர்த்
தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல
நன்மைசான்ற நலம்பெறத் தோன்றினார்;
தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

கூறுகின்றார். இதில் "தன்மை வாயிலார் என்னும் தபோதனர்" என்னும் தொடர் மிகவும் இன்றியமையாதது. வாயிலார் என்னும் பெயர் அவர் பேசாமல், மௌனமாய் சிவன் பால் அன்பு வழிபாடு செய்தவர் என்னும் பொருளோடு, அவர் என்றும் "நான்" என்னும் அகந்தை எழாத அரும் தன்மையைப் பெற்றிருந்தார் என்பதை "தன்மை வாயிலார்" என்பது குறிக்கும். தன்மை என்பது "நான்" என்பதைக் குறிப்பது.

வாயிலார் நாயன்மாருக்கு திருமையிலை கபாலீசுவரர்-கற்பகாம்பாள் கோயிலில் முருகன் உண்ணாழிகைக்கு அருகில் தனி உண்ணாழிகை (சன்னதி) உண்டு.

மார்கழியில் இரேவதி நாள்மீன் கூடும் நாளில் குருபூசை என்னும் வழக்கம் உண்டு[2][3] 2008 ஆண்டில் வாயிலாரின் திருநட்சத்திரம் மார்கழி 29 (ஜனவரி 14) ஆம் நாள் வந்தது.

குறிப்புகள்

  1. நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
  2. தமிழ்ப் பஞ்சாங்கம். எ.கா வாசன் சுத்த திருக்கணித பஞ்சாங்கம்; வாக்கிய பஞ்சாங்கம்
  3. அ. ச. ஞானசம்பந்தன், சித்திர பெரியபுராணம் 2 ஆம் பதிப்பு, இராமிலிங்கர் பணி மன்றம், 102, அண்ணா சாலை, கிண்டி, சென்னை 600 032 பக் 194 (மொத்த பக்கம் 248) ஆண்டு 1991 ?
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.