திருநாவுக்கரசு நாயனார்

அப்பர் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.[1]

அப்பர் திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
பிறப்புதிருவாமூர்
இயற்பெயர்மருணீக்கியார்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், மூவர்
தத்துவம்சைவ சமயம் பத்தி நெறி
இலக்கிய பணிகள்தேவாரம்
மேற்கோள்நற்றுணையாவது நமச்சிவாயவே
நால்வர்
தலைப்புகள்/விருதுகள்நாயன்மார், சமயக்குரவர்
தத்துவம்சைவ சமயம் பத்தி நெறி
இலக்கிய பணிகள்தேவாரம், திருவாசகம் திருக்கோவையார்
அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்
திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்

இவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.[2]

பெயர்கள்

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை என பல பெயர்கள் இவருக்கு உள்ளது.

  • மருணீக்கியார் - இயற்பெயர்
  • தருமசேனர் - சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்
  • நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்
  • அப்பர் - திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்
  • உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்
  • தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்

இளமைக் காலம்

திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர்.[3] இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும்.[3] இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.[3]

தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) [3] ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.[3] இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.[3]

பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை, "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.

தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.

கரக்கோயில்

அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.

அற்புதங்கள்

  • சமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்
  • சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது
  • சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.
  • சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது
  • வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.
  • விடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது[3]
  • காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.

பதிகங்கள்

திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்களை தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள்.[3] அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,

"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
("Mācil vīṇaiyum mālai matiyamum
vīcu těņṛalum vīŋkiḷa vēņilum
mūcu vaṇţaṛai pǒykaiyum pōņṛatē
īcaņ ěntai iṇaiyaţi nīļalē")

ஈசனுடைய அடிகளில் சரணடைந் தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது. வீசுகின்ற தென்றல் போன்றது. இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக் கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார் அப்பர்!

திருவதிகை வீரட்டானம் முதற்பதிகப்பாடல்

கூற்றாயின வாறு விலக்கலீர்

கொடுமை பலசெயதனநான் அறியேன்

ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டா னத்துறை யம்பானே

இசை ஞானம்

திருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது.[3] இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.

  1. கொல்லி
  2. காந்தாரம்
  3. பியந்தைக்காந்தாரம்
  4. சாதாரி
  5. காந்தார பஞ்சமம்
  6. பழந்தக்கராகம்
  7. பழம் பஞ்சுரம்
  8. இந்தளம்
  9. சீகாமரம்
  10. குறிஞ்சி

குரு பூசை

திருநாவுக்கரசரின் குருபூசையானது சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.[4]

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணைகள்

  1. "Saivam - Tamil Virtual University".
  2. "TVU Courses".
  3. "Untitled Document".
  4. "திருநாவுக்கரசு நாயனார்".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.