நுரையீரல் அழற்சி

நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் புடைக்கலவிழைய / நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது.[1][2] நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். இவை நுரையீரலில் ஒட்சிசனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று; அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும்.[3] இவ்வாறான நோய்க்காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய் இல்லாதவிடத்து, இதன் காரணம் அறியப்படவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விபரிக்கப்படக்கூடும்.

நுரையீரல் அழற்சி நுரையீரலின் நுண்பைகளை நீர்மத்தால் நிரப்புகிறது. இதனால் ஒட்சிசன் குருதியோட்டத்தை அணுக முடிவதில்லை. இடப்பக்க நுண்பைகள் சரியாக உள்ளன. இடப்பக்கம் நுரையீரல் அழற்சியால் விளைந்த நீர்மத்தால் நிரம்பியுள்ளது.

இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும் .[4][5] நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும்.[6] இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன.[7] குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.[8] கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமை போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும்.[8] இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் அந்நோய் தொற்றலுக்கான அடிப்படைக் காரணத்தைச் சார்ந்துள்ளது.[9] பாக்ட்டீரியங்களால் ஏற்படக்கூடிய நுரையீரல் அழற்சியை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம்.[10] நோய்த்தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பின் செயற்கைசுவாச சிகிச்சை அளிக்கப்படலாம்.[9] .[10]

நுரையீரல் அழற்சி நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் (அது உலக மக்கள்தொகையில் 7%) மற்றும் வருடத்திற்கு இந்நோய் தாக்கத்தால் சுமார் 4 மில்லியன் இறப்புக்கள் ஏற்படுகின்றன.[11][12] நுரையீரல் அழற்சியானது “மனித இறப்புகளின் தலைவன்” என வில்லியம் ஓஸ்லர் என்பவரால் குறிப்பிடப்படுகிறது.[13] 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் இறப்புகள் குறைந்துள்ளன.[11] ஆயினும்கூட வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த்தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கிறது.[11][14]. நுரையீரல் அழற்சியானது நோய்தொற்றுக்குள்ளானவரை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்கிறது. இதற்கு “முதியவர்களின் நண்பன்” என்ற அடைமொழியும் உண்டு.[15]

நோய் அறிகுறிகள்

அறிகுறிகள் சதவீதம் [16]
அறிகுறிகள்சதவீத அளவு
இருமல்
79–91%
அசதி
90%
காய்ச்சல்
71–75%
மூச்சு இரைப்பு
67–75%
சளி
60–65%
நெஞ்சு வலி
39–49%
நுரையீரல் அழற்சி நோயின் முக்கிய அறிகுறிகள்

தொடர்ச்சியான நீடித்த இருமல், நடுங்கும் குளிர் காய்ச்சல், குறுகிய மூச்சுவிடுதல், நெஞ்சகப் பகுதியில் குத்துவது போன்ற வலி மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன நுரையீரல் அழற்சி நோய் அறிகுறியுடையவருக்குத் தோன்றும் அறிகுறிகளாகும்.[17] முதியவர்களிடம் இத்தகைய அறிகுறிகள் குழப்பமானதாக இருக்கக்கூடும்.[17]

காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு வாங்குதல் போன்றவை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவாக அறிகுறிகளாகும்.[18] காய்ச்சல் அறிகுறி மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி அல்ல ஏனெனில் பல பொதுவான நோய்களிலும் காய்ச்சல் இருக்கக்கூடும் கடுமையான நோய், ஊட்டச்சத்துக் குறைதல் அல்லது வயதான முதுமை நிலைகளில் காய்ச்சல் இல்லாமல் இருக்கலாம். மேலும் 2 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளில் இருமல் அடிக்கடி காணப்படுவதில்லை. குழந்தைகளில் நீலத் தோல், அருந்துவதில் சிரமம், தொடர் வாந்தி, குறைந்த நனவு நிலை, மயக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான அறிகுறிகள் காணப்படலாம்.

பாக்டீரியம் மற்றும் தீநுண்மங்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியானது வழக்கமாக பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன.[19] படைநிமோவாக்கியால் ஏற்படும் நுரையீரல் அற்சியானது அடிவயிற்றில் வலி , பேதி அல்லது குழப்பநிலை ஆகியவை அறிகுறிகள் தென்படும்.[20] ஸ்டெப்ட்ரோகாக்கசு பாக்டீரியங்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியானது துரு நிறத்திலான சளியும் [21] கிளெப்செல்லாவால் ஏற்படும் நுரையிரல் அழற்சியினால் உலர்ந்த சிவப்பு நிற சளியும் வெளிப்படக்கூடும்.[16] இரத்தக் கசிவுடன் (இரத்தச்சளி அல்லது ஹீமோப்ட்டிசிஸ் என்று அறியப்படுகிறது) [22] கூடிய இந்தச் சளி கிராம்-எதிர் நிமோனியா, நுரையீரல் சீழ்கட்டிகள் மற்றும் பொதுவாக கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்நிலைகளில் கானப்படுகிறது. மைக்கோப்ளாஸ்மா நுரையீரல் அழற்சியால் கழுத்துப் பகுதியில் நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் மற்றும் மூட்டு வலி அல்லது நடுச்செவியில் [23] தொற்று ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். தீநுண்மத்தால் ஏற்படும் நுரையீரல் அழற்சியால் மூச்சிரைப்பு ஏற்படும். இந்த அறிகுறி பாக்டீரிய நுரையீரல் அழற்சியில் ஏற்படுவதில்லை.[19] வரலாற்று ரீதியாக நுரையீரல் அழற்சியானது விளக்கக்காட்சி அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் இயல்பு மாறா மற்றும் இயல்பற்ற அல்லது வகையிலி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வேறுபாடுகளை பல சான்றுகள் ஆதரிக்கவில்லை இதனால் அவை வலியுறுத்தப்படுவதில்லை.

காரணிகள்

நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தும் முதன்மை பாக்டீரிய காரணியான “ஸ்டெப்ரோகாக்கஸ் நிமோனியே” எதிர்மின்னி நுண்நோக்கி வழியாக

நுரையீரல் அழற்சியானது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது தீ நுண்மங்கள் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவையும் இதற்கடுத்தாற்போல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. 100 க்கும் அதிகமான தொற்று நோய்க்காரணிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவற்றுள் சில மட்டுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்காரணியாக இருக்கின்றன. குழந்தைகளில் 45% நோய்த்தாக்கங்களும், பெரியவர்களில் 15% நோய்த்தாக்கமும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றின் கலப்பு பாதிப்புகளால் ஏற்படக்கூடியவையாகும். இந்நோய்க்கான பாதியளவு சோதனைகளில் கவனமுடன் நடத்தப்படும் சோதனைகளில் கூட நோய்க்கான முதன்மைக்காரணியைத் தனிமைப்படுத்தி அறியமுடிவதில்லை.

நிமோனியா (pneumonia) என்ற ஆங்கிலச் சொல்லானது நுரையீரலின் அனேகப் பாதிப்புகளை (நோய் எதிர்ப்புக் குறை நோய் பாதிப்புகள், நிணநீர்க்குழாய் நோய்கள், இரசாயனப் பாதிப்புகள் அல்லது மருந்துகளால் ஏற்படம் எதிர்விளைவுகள் போன்றவை) விவரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் முக்கியமாக நுரையீரல் அழற்சியைக் குறிக்கவே pneumonitis என்ற ஆங்கிலச் சொல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. [24][25]

புகைப்பழக்கம், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு, மதுபானப் பழக்கம், நாள்பட்ட நுரையீரல் சுவாச நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை நோய் நிலையையும் தீவிரத் தன்மையையும் நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன.[22][26] நேர்மின் எக்கியொடுக்கி (proton-pump inhibitors) அல்லது H2 தடுப்பான்கள் (H2 blockers) போன்ற அமில-அடர்த்தி மருந்துகளின் பயன்பாடு நுரையீரல் அழற்சியின் அதிகரிப்பின் ஆபத்தோடு தொடர்புடையன ஆகும்.[27] முதுமை நிலையில் இடர் தன்மை கூடுதலாகக் காணப்படலாம் [23]

மேற்கோள்கள்

  1. McLuckie, A., தொகுப்பாசிரியர் (2009). Respiratory disease and its management. New York: Springer. பக். 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84882-094-4.
  2. Leach, Richard E. (2009). Acute and Critical Care Medicine at a Glance (2nd ). Wiley-Blackwell. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4051-6139-6. Archived from the original on 26 November 2015. https://web.archive.org/web/20151126075640/https://books.google.com/books?id=7u_wu5VCsVQC&pg=PT168.
  3. Jeffrey C. Pommerville (2010). Alcamo's Fundamentals of Microbiology (9th ). Sudbury MA: Jones & Bartlett. பக். 323. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7637-6258-X. Archived from the original on 1 December 2015. https://web.archive.org/web/20151201080853/https://books.google.com/books?id=RJNQwQB8IxIC&pg=PA323.
  4. Ashby, Bonnie; Turkington, Carol (2007). The encyclopedia of infectious diseases (3rd ). New York: Facts on File. பக். 242. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8160-6397-4. Archived from the original on 23 September 2015. https://web.archive.org/web/20150923135607/https://books.google.com/books?id=4Xlyaipv3dIC&pg=PA242. பார்த்த நாள்: 2011-04-21.
  5. "Pneumonia Symptoms, Causes, and Risk Factors". American Lung Association. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  6. "Diagnosing and Treating Pneumonia". American Lung Association. பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  7. "Pneumonia". Fact Sheet. WHO (Sep 2016). பார்த்த நாள் ஏப்ரல் 20, 2017.
  8. "How Can Pneumonia Be Prevented?" (March 1, 2011). மூல முகவரியிலிருந்து 7 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2016.
  9. "What Is Pneumonia?" (March 1, 2011). மூல முகவரியிலிருந்து 29 February 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2 March 2016.
  10. "How Is Pneumonia Treated?" (March 1, 2011). மூல முகவரியிலிருந்து 6 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2016.
  11. Ruuskanen, O; Lahti, E; Jennings, LC; Murdoch, DR (2011-04-09). "Viral pneumonia". Lancet 377 (9773): 1264–75. doi:10.1016/S0140-6736(10)61459-6. பப்மெட்:21435708.
  12. Lodha, R; Kabra, SK; Pandey, RM (4 June 2013). "Antibiotics for community-acquired pneumonia in children.". The Cochrane database of systematic reviews 6: CD004874. doi:10.1002/14651858.CD004874.pub4. பப்மெட்:23733365.
  13. Osler, William (1901). Principles and Practice of Medicine, 4th Edition. New York: D. Appleton and Company. பக். 108. http://mcgovern.library.tmc.edu/data/www/html/people/osler/PPM4th/OP400067.htm.
  14. George, Ronald B. (2005). Chest medicine : essentials of pulmonary and critical care medicine (5th ). Philadelphia, PA: Lippincott Williams & Wilkins. பக். 353. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780781752732. Archived from the original on 17 October 2015. https://web.archive.org/web/20151017025259/https://books.google.com/books?id=ZzlX2zJMbdgC&pg=PA353.
  15. Eddy, Orin (Dec 2005). "Community-Acquired Pneumonia: From Common Pathogens To Emerging Resistance". Emergency Medicine Practice 7 (12). Archived from the original on 17 September 2011. https://web.archive.org/web/20110917205243/http://www.ebmedicine.net/topics.php?paction=showTopic&topic_id=118.
  16. Tintinalli, Judith E. (2010). Emergency Medicine: A Comprehensive Study Guide (Emergency Medicine (Tintinalli)). New York: McGraw-Hill Companies. பக். 480. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-148480-9.
  17. Hoare Z; Lim WS (2006). "Pneumonia: update on diagnosis and management" (PDF). BMJ 332 (7549): 1077–9. doi:10.1136/bmj.332.7549.1077. பப்மெட்:16675815. பப்மெட் சென்ட்ரல்:1458569. http://www.bmj.com/content/332/7549/1077.full.pdf.
  18. name=Develop11
  19. name=WHOPrevent2012
  20. Darby, J; Buising, K (October 2008). "Could it be Legionella?". Australian family physician 37 (10): 812–5. பப்மெட்:19002299.
  21. Ortqvist, A; Hedlund, J; Kalin, M (December 2005). "Streptococcus pneumoniae: epidemiology, risk factors, and clinical features". Seminars in respiratory and critical care medicine 26 (6): 563–74. doi:10.1055/s-2005-925523. பப்மெட்:16388428.
  22. Nair, GB; Niederman, MS (November 2011). "Community-acquired pneumonia: an unfinished battle". The Medical clinics of North America 95 (6): 1143–61. doi:10.1016/j.mcna.2011.08.007. பப்மெட்:22032432.
  23. name=Clinic2011
  24. Lowe, J. F.; Stevens, Alan (2000). Pathology (2nd ). St. Louis: Mosby. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7234-3200-7. Archived from the original on 17 October 2015. https://web.archive.org/web/20151017012321/https://books.google.com/books?id=AfVxLi4QTZQC&pg=PA197.
  25. Snydman, editors, Raleigh A. Bowden, Per Ljungman, David R. (2010). Transplant infections (3rd ). Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58255-820-2. Archived from the original on 20 March 2015. https://web.archive.org/web/20150320133954/http://books.google.com/books?id=NWa4FJv-eBYC&pg=PA447.
  26. Marrie, edited by Thomas J. (2002). Community-acquired pneumonia. New York: Kluwer Academic Publishers. பக். 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780306468346. Archived from the original on 8 September 2017. https://web.archive.org/web/20170908184822/https://books.google.com/books?id=Yc0RBwAAQBAJ&pg=PA20.
  27. Eom, CS; Jeon, CY; Lim, JW; Cho, EG; Park, SM; Lee, KS (22 February 2011). "Use of acid-suppressive drugs and risk of pneumonia: a systematic review and meta-analysis". CMAJ : Canadian Medical Association 183 (3): 310–9. doi:10.1503/cmaj.092129. பப்மெட்:21173070.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.