ஜெனியாங்

ஜெனியாங் (Jeniang) மலேசியா, கெடா மாநிலத்தின் சிக் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும்.[1] இந்த நகரம் சுங்கை பட்டாணி நகரில் இருந்து 41 கி.மீ. வடக்கே உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரங்கள் குரூண், பீடோங்.

ஜெனியாங்
Jeniang
நாடு மலேசியா
மாநிலம் கெடா
நகரத் தோற்றம்1948
நேர வலயம்மலேசிய நேரம் (MST) (ஒசநே+8)
  கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு08320
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)

ஜெனியாங் நகரம் 1948 இல் உருவாக்கப்பட்ட ஒரு சிறு நகரம் ஆகும். மலாயாவில் கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டிஷார் புதுக் கிராமங்களையும் புது நகரங்களையும் உருவாக்கினார்கள். அந்த வகையில் ஜெனியாங் நகரம் உருவாக்கப்பட்டது.

வரலாறு

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் பாலிங்கில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்தது. ஜப்பானியர்களை எதிர்த்தப் போராளிப் படையினருக்கு,[2] பிரித்தானியர்கள் ஏற்கனவே சுடும் ஆயுதங்களை வழங்கி இருந்தனர். அந்தக் காலகட்டத்தில் ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து மலாயாவில் பல கொரில்லா போராளிக் குழுக்களும் உருவாகின. அவற்றுள் ஒன்றுதான் மலாயா மக்களின் ஜப்பானிய எதிர்ப்பு இராணுவம்.[3][4]

இந்தக் கொரில்லா போராளிக் குழுக்கள் பேராக், கெடா, சிலாங்கூர், பகாங், ஜொகூர், மலாக்கா மாநிலங்களில் பரவி இருந்தன. பேராக் மாநிலத்தில் தான் அதிகமான போராட்ட வெளிப்பாடுகள் இருந்தன.[5]

பிரிக்ஸ் திட்டம்

மலாயா தேசிய விடுதலை படையின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சில முக்கிய தீவிர நடவடிக்கைகளை மலாயா பிரித்தானியா அரசாங்கம் மேற்கொண்டது. ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள் போன்றவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈட்டுபட்டது. புதிய திட்டமான ’பிரிக்ஸ்’ திட்டத்தையும் (Briggs Plan)[6] அமல் செய்தது. மலாயா தேசிய விடுதலை படையினருக்கு பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் பொருளுதவிகளைத் துண்டிப்பதுதான் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

’பிரிக்ஸ்’ திட்டத்தை உருவாக்கியவர் ஹெரால்ட் பிரிக்ஸ் (General Sir Harold Briggs)[7] என்பவர். இவர் அப்போது மலாயாவின் பிரித்தானிய இராணுவத்தின் நடவடிக்கை இயக்குநராக இருந்தார்.

பிரிக்ஸ் திட்ட முகப்புக் கூறுகள்

’பிரிக்ஸ்’ திட்டம் பல முகப்புக் கூறுகளைக் கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது பொதுமக்களை வேறு புதிய குடியிருப்புப் பகுதிகளுக்கு மறுக் குடியேற்றம் செய்வதாகும். அந்த வகையில் அப்போது மலாயாவின் கிராமப்புறங்களில் வாழ்ந்த பொது மக்களில் 470,509 பேர் வெவ்வேறு இடங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

பொதுவாகவே கிராமப்புற மக்கள் மலைக்காடுகளின் விளிம்புப் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தனர். அப்படி வாழ்ந்தவர்களில் பெரும்பாலோர் புதுக்கிராமங்களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்டனர். மறுக்குடியேற்றத்திற்காகப் பல புதுக்கிராமங்கள் புதிதாக உருவாக்கப் பட்டன.[8] புதுக்கிராமங்கள் முள்வேலிகளால் பாதுகாக்கப் பட்டன.[9] புதுக்கிராமங்களைக் கண்காணிக்கக் காவல் சாவடிகள் இருந்தன. இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் பிரகாசமாக எரிந்தன. தொடக்கக் காலங்களில் மக்கள் அந்தத் திட்டத்தை விரும்பவில்லை. அவர்களின் இயல்பான வாழ்க்கைநிலையில் கட்டுப்பாடுகள் திணிக்கப் படுவதாகக் கருதினர். மறுக்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 400,000 சீனர்களும் அடங்குவர்.

ஜெனியாங் புதுக்கிராமம்

இருப்பினும் நல்ல ஆரோக்கியமான இருப்பிட வசதிகள் அமைத்துக் கொடுக்கப் பட்டதால், காலப் போக்கில் அந்தத் திட்டத்தை மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் வாழ்ந்த மனைப்பகுதிகளுக்குச் சொத்துரிமைகளும் வழங்கப்பட்டன. பண உதவியும் செய்யப்பட்டது.[10]

மலாயாவின் அவசரகாலம் ஒரு முடிவிற்கு வரும்போது ஏறக்குறைய 40,000 பிரித்தானிய, பொதுநலவாயத் துருப்புகள், மலாயாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8,000 கம்யூனிஸ்டுக் கொரில்லாக்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். கெடா மாநிலத்தில் பிரிக்ஸ் திட்டத்தின் மறுசீரமைப்புக் கொள்கையினால் தான் ஜெனியாங் புதுக்கிராமமும் உருவாக்கப்பட்டது.

ஜெனியாங் இப்போது ஒரு சிறு கிராமப்புற நகரமாக விளங்குகிறது. ஏறக்குறைய 400 பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலோர் சீனர்களாகும். தாய்லாந்து மக்களும் மலாய் மக்களும் சிறுபான்மை இனத்தவர்களாக உள்ளனர். பெரும்பாலான கிராமத்து மக்கள் புத்த மதத்தையும் பின்பற்றி வருகின்றனர்.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.