பீடோங்

பீடோங் (Bedong) மலேசியா, கெடா மாநிலத்தின் கோலா மூடா மாவட்டத்தில் ஒரு சிறு நகரம் ஆகும்.[1] இந்த நகரம் சுங்கை பட்டாணி நகரில் இருந்து 12 கி.மீ. வடக்கே உள்ளது. பீடோங் ஒரு துணை மாவட்டமாகவும் செயல்பட்டு வருகிறது.[2] இங்குதான் ம.இ.காவின் கல்விக் கழகமான ஏய்ம்ஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகமும் (AIMST University) உள்ளது.

பீடோங்
Bedong
நாடு மலேசியா
மாநிலம் கெடா
நகரத் தோற்றம்1900களில்
நேர வலயம்மலேசிய நேரம் (MST) (ஒசநே+8)
  கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு08100
அனைத்துலக முன்னொட்டுக் குறி+6044 (தரைவழித் தொடர்பு)

லெம்பா பூஜாங் எனும் வரலாற்றுப் புகழ் பூஜாங் பள்ளத்தாக்கு, ஜெராய் மலை ஆகியவற்றின் நுழைவாயிலாகவும் பீடோங் நகரம் விளங்கி வருகிறது. 1900 களில் பீடோங் புறநகர்ப் பகுதியில் நிறைய ரப்பர் தோட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்குத் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் சஞ்சிக்கூலிகளாய் கொண்டு வரப்பட்டனர்.

1970 ஆம் ஆண்டுகளுக்கு முன்னால் பீடோங்கைச் சுற்றிலும் நிறைய செம்பனைத் தோட்டங்களும் இருந்தன. நில மேம்பாட்டுத் திட்டங்கள், நகரமயத் திட்டங்கள், நவீனமயமாக்க நடைமுறைகளினால் இப்போது அந்தத் தோட்டங்கள் மூடப் பட்டு விட்டன. அங்கு வேலை செய்தவர்களில் பெரும்பாலோர் நகர்ப்புறங்களுக்குப் புலம் பெயர்ந்தனர்.

ஏய்மிஸ்ட் மருத்துவப் பல்கலைக்கழகம்

இந்திய மாணவர்களுக்கு உயர்க் கல்வியில் அதிக வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டது ‘ஏய்ம்ஸ்ட்” (AIMST - Asian Institute of Medicine, Science and Technology) பல்கலைக்கழகம் ஆகும். இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகம் (University of Bristol), ஆஸ்திரேலியாவின் லா துரோபே (La Trobe University) பல்கலைக்கழகம், கிரிபித் (Griffith University) பல்கலைக்கழகம், குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்பப் பலகலைக்கழகம் (Queensland University of Technology for Biotechnology) போன்றவற்றுடன் இணைந்து மருத்துவர்களையும் மருத்துவத் தொழில்நுட்பர்களையும் உருவாக்கி வருகிறது.[3]

ம.இ.காவின் கல்விக் கரமாக விளங்கி வரும் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தினால் (Maju Institute of Educational Development (MIED)[4] 2001 மார்ச் 21ஆம் தேதி இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[5] ம.இ.காவின் முன்னாள் தலைவர் டத்தோ ஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு அவர்களின் அரும் முயற்சிகளினால் இந்த மருத்துவப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

சுங்கை பட்டாணி அருகே செமிலிங் என்ற இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் இப்போது செயல்பட்டு வருகிறது. ஆங்கில மொழியைப் போதனா மொழியாகக் கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில், தற்சமயம் 3200 மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

சுங்கை பட்டாணி நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், அலோர் ஸ்டார் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இந்தக் கல்விக்கழகம் அமைந்து உள்ளது.

பீடோங் வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள்

கோலா மூடா மாவட்டத்தில் 23 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. துணை மாவட்டமான பீடோங்கில் மட்டும் 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றின் விவரங்கள்[6]

  • ஜாலான் செமிலிங் தமிழ்ப்பள்ளி
  • ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1
  • ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2
  • ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3
  • லூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • சுங்கை தோக் பாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.