கடாரம்

கெடா, மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் என்பதே இதன் தமிழ்ப் பெயர்.

கெடா
மாநிலம்
கெடா டாருல் அமான்

கொடி
பண்: Allah Selamatkan Sultan Mahkota
அரசருக்கு இறைவன் அருள் புரிவானாக

      கெடா      மலேசியா
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மலேசியத் தலைநகரங்களின் பட்டியல்அலோர் ஸ்டார்
அரச நகரம்அனாக் புக்கிட்
அரசு
  கடாரம் சுல்தான்சுல்தான் அப்துல் ஹாலிம்
  மந்திரி பெசார்அகமது பாஷா
பரப்பளவு[1]
  மொத்தம்9,500
மக்கள்தொகை (2010)[1]
  மொத்தம்18,90,098
  அடர்த்தி199
மனித வள வளர்ச்சிப் பட்டியல்
  20100.670 (மத்திமம்) (மலேசிய மாநிலங்கள்)
அஞ்சல் குறியீடுகள்02xxx
05xxx to 09xxx
தொலைபேசி அழைப்பு முன் எண்04
வாகனப் பதிவுவாகனங்கள் பதிவுப் பட்டை முன்குறி K (Kedah)
பிரித்தானிய கட்டுப்பாடு1909
மலாயாவில் ஜப்பானியர் ஆதிக்கம்1942
மலாயா கூட்டரசில் இணைதல்1948
இணையதளம்http://www.kedah.gov.my

இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு லங்காவி எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.

பொதுவாக, கெடா சமதரையான நில அமைப்பைக் கொண்டது. இங்கு அதிகமாக நெல் விளைவிக்கப் படுகிறது. லங்காவித் தீவைச் சுற்றிலும் சின்னச் சின்னத் தீவுகள் நிறைய உள்ளன. இவற்றில் பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. கெடாவைச் சியுபுரி (Syburi) (தாய்லாந்து மொழியில்: ไทรบุรี) என்று சயாமியர்கள் முன்பு அழைத்தனர்.

கெடா மாநிலத்தின் வடக்கே பெர்லிஸ் மாநிலம், தாய்லாந்து உள்ளன. தெற்கே பேராக், பினாங்கு மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் அலோர் ஸ்டார்.

வரலாறு

பூஜாங் பள்ளத்தாக்கு

கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் பூஜாங் பள்ளத்தாக்கு எனும் ஒரு தொல்பொருள் புதையல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

பூஜாங் பள்ளத்தாக்கு கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், தென் கிழக்கு ஆசியாவிலேயே கெடாவில் தான் மிகப் பழமையான நாகரீகம் இருந்திருப்பது வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.[2] அதைத் தவிர, அந்தக் காலகட்டத்தில் தென் இந்தியத் தமிழர்ப் பேரரசுகள் பூஜாங் பள்ளத்தாக்கில் ஆட்சிகள் செய்துள்ளன என்பதுவும் தெரிய வந்துள்ளது. [3]

பட்டினப்பாலை

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது. பூம்புகார் நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்திப் பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு

மேரோங் மகாவங்சா

கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா (Hikayat Merong Mahawangsa) எனும் ஒரு காப்பியம் உள்ளது. இதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தைத் தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சுல்தானகம் பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் இந்த மன்னர் இஸ்லாம் சமயத்தைத் தழுவி சுல்தான் முஷபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் பிடிமானம் இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஸ்ரீ விஜயா பேரரசின் ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா பேரரசு கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களும் சுமத்திராவின் ஆச்சே அரசும் கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தின.

போர்த்துகீசியர்களின் தாக்குதல்

இந்தக் காலகட்டத்தில் மலாக்கா போர்த்துகீசியர்களின் கைவசம் இருந்தது. வெளித் தாக்குதல்களில் இருந்து கெடாவைத் தற்காத்துக் கொள்ள, 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிரித்தானியர்களுக்கு பினாங்குத் தீவு தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டது. பிரித்தானியர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று கெடா பெரிதும் நம்பி இருந்தது.

இருப்பினும் 1811-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் உதவிக் கரம் நீட்டவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் கெடா சுல்தானகம், சயாமியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

ஜப்பானியர் படையெடுப்பு

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பில் முதன் முதலாக கிளந்தான் மீது தான் ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். அடுத்த தாக்குதலில் கெடா வீழ்ந்தது. அந்தக் கட்டத்தில் சயாமிய அரசு ஜப்பான் நாட்டின் தோழமை நாடு என்பதால் ஜப்பானியர்கள் கெடா மாநிலத்தை முழுமையாகச் சயாமியரிடம் ஒப்படைத்தனர்.

கெடாவை சயாமியர்கள் சியுபுரி என்று அழைத்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும் கெடா அரசு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் 1948-இல் கெடா அரசு மலாயா ஒன்றியத்தில் விருப்பமின்றித் தயக்கத்துடன் இணைந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா (Tuanku Abdul Halim Mu'adzam Shah) அவர்களின் சந்ததியினர் கெடாவை ஆட்சி செய்து வருகின்றனர். இது வரையில் கெடாவை 27 சுல்தான்கள் ஆட்சி செய்துள்ளனர்.

புவியியல்

மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கெடா மாநிலம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு 9,500 ச.கிலோ மீட்டர்கள். (3,700 சதுர மைல்கள்) மாநிலத்தின் மக்கள் தொகை 1,890,098.[4] இங்குள்ள பெடு ஏரி மனிதர்களால் உருவாக்கப் பட்ட மிகப் பெரிய ஏரி ஆகும்.

அரசாங்கமும் அரசியலும்

அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) சுல்தானைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவ்ர் இருக்கின்றார். இவர் (Parti Islam Se-Malaysia எனும் PAS) மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர்.

முதலமைச்சர்கள் பட்டியல்

பொறுப்பு வகித்தவர்கள் பதவிக்காலம் அரசியல் இணைப்பு
முகமட் செரிப் ஒஸ்மான் 1948–1954 பாரிசான் நேசனல்
துங்கு இஸ்மாயில் பின் துங்கு யஹாயா 1954–1959 பாரிசான் நேசனல்
சையட் ஒமார் பின் சையட் அப்துல்லா சகாபுடின் 1959–1967 பாரிசான் நேசனல்
சையட் அகமட் பின் சகாபுடின் 1967–1978 பாரிசான் நேசனல்
சையட் நாகாட் பின் சையட் ஷே சகாபுடின் 1978–1985 பாரிசான் நேசனல்
ஹாஜி ஒஸ்மான் பின் ஹாஜி அரோப் 1985–1996 பாரிசான் நேசனல்
சனுசி ஜுனிட் 1996–1999 பாரிசான் நேசனல்
சையட் ரசாக் பின் சையட் சாயின் பராக்பா 1999–2005 பாரிசான் நேசனல்
டத்தோ ஹாஜி மாட்சிர் பின் காலிட் 2005–2008 பாரிசான் நேசனல்
அசிசான் அப்துல் ரசாக் 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
முக்ரீஸ் மகாதிர் 2013–2016 பாரிசான் நேசனல்
அகமது பாஷா 2016–இன்று வரை பாரிசான் நேசனல்

பொருளியல்

கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கிறார்கள். (மலேசிய மொழியில்: Jelapang Padi) நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நெல் இங்கு விளைச்சல் ஆகின்றது. ரப்பர், செம்பனை, புகையிலை போன்றவையும் பயிர் செய்யப் படுகின்றது. லங்காவித் தீவு அதிக சுற்றுப் பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளமாக சிறப்பு பெறுகின்றது.

1996-இல் கூலிம் உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. இன்டெல் (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன.

மேற்கோள்

  1. "Penduduk dan Demografi Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2011-10-16.
  2. New interest in an older Lembah Bujang, 2010/07/25
  3. Asia Research News - USM discovers earliest civilisation in Southeast Asia
  4. "Penduduk dan Demografi Laporan Kiraan Permulaan 2010". Jabatan Perangkaan Malaysia. பார்த்த நாள் 2011-10-16.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.