சிகாமட்
சிகாமட் (மலாய்:Segamat, சீனம்:昔加末) [1], மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். மாவட்டத்தின் பெயரும் சிகாமட் ஆகும். ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவிலிருந்து 172 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இதன் எல்லை மாநிலங்களாக அமைந்துள்ளன.
சிகாமட் Segamat 昔加末 | ||
---|---|---|
| ||
நாடு | மலேசியா | |
மாநிலம் | ஜொகூர் | |
மாவட்டம் உருவாக்கம் | 1890களில் | |
அரசு | ||
• மாவட்ட அதிகாரி | துவான் ஹாஜி ரஹீம் ஹாஜி நின் | |
பரப்பளவு | ||
• மொத்தம் | 2,851.26 | |
மக்கள்தொகை (2010) | ||
• மொத்தம் | 1,89,820 | |
நேர வலயம் | MST (ஒசநே+8) | |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) | |
இணையதளம் | Portal Majlis Daerah Segamat |
இந்த நகரம் வேளாண்மைத் தொழிலைச் சார்ந்த நகரம் ஆகும். சுற்றியுள்ள நிலப் பகுதிகளில் (இ)ரப்பர், எண்ணெய், பனை ஆகிய பயிர்கள் செய்யப்படுகின்றன. துரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது. கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கு நடு மையத்தில் சிகாமட் அமைந்து இருக்கிறது. அண்மையில் இந்த நகரத்திற்கு ஒரு புதிய வரவேற்பு வாசகம் வழங்கப்பட்டது. Welcome to Segamat – The Land of King of Fruits எனும் ’பழங்கள் அரசனின் சிகாமட்டிற்கு வருக, வருக!’ என்பதே அந்த வாசகம்.
வரலாறு
1511 ஆம் ஆண்டு மலாக்கா போர்த்துகீசியர்களால் தாக்கப்பட்டது. அதில் மலாக்கா சுல்தான் அகமது ஷா தோற்கடிக்கப்பட்டார். சுல்தான் அகமதுஷா மலாக்காவின் கடைசி சுல்தானாக இருந்தார். அவருடன் மலாக்கா சுல்தானகம் ஒரு முடிவிற்கும் வந்தது.
சுல்தான் அகமது ஷா மலாக்காவில் இருந்து தன் குடிமக்களுடன் சிகாமட்டிற்கு அருகில் உள்ள பாகோ எனும் இடத்தில் வந்து குடியேறினார். அங்கேயும் போர்த்துகீசியர்கள் தொடர்ந்து வந்து சுல்தான் அகமது ஷாவைத் தாக்கினர். பின்னர் சுல்தான் அகமது ஷா, அங்கே இருந்து பெனாரிக்கான் எனும் இடத்திற்கு இடம் பெயர்ந்தார்.
பகாங் மாநிலத்திற்கு இடம் மாறிச் செல்வதே அவர்களின் நோக்கமாகும். அப்படி அவர்கள் இடம் மாறிப் போய்க் கொண்டிருக்கும் போது ஓர் இடத்தில் தங்கி ஓய்வு எடுத்தனர்.
செகார் மாட்
அப்போது சுல்தான் அகமது ஷாவின் டத்தோ பெண்டாஹாராவிற்கு தாகம் எடுக்கவே குடிக்கத் தண்ணீர் கேட்டார். டத்தோ பெண்டாஹாரா என்பவர் சுல்தானின் தலைமை நிருவாகி. அருகில் இருந்த ஓர் ஓடையில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார்கள். அதைப் பருகிய டத்தோ பெண்டாஹாரா ‘தண்ணீர் நன்றாக - சுவையாக இருக்கிறது’ என்று நன்றிப் பெருக்குடன் சொன்னார்.
டத்தோ பெண்டாஹாரா அப்போது சொன்ன மலாய்ச் சொற்கள். “Segar Amat”. தமிழில் ‘செகார் மாட்’. Amat என்பது சுல்தான் அகமது ஷாவின் சுருக்கப் பெயர் ஆகும். சுல்தான் அகமது ஷா மறுமொழி கூறாமல் புன்னகை மட்டும் செய்தார். அதன் பின்னர் அவர்கள் ஓய்வு எடுத்த அந்த இடத்திற்கு செகார் மாட் எனும் பெயர் வந்தது.
’செகார் மாட்’ எனும் சொல் காலப் போக்கில் சுருங்கி இப்போது ’சிகாமட்’ என்று அழைக்கப் படுகின்றது.[2] சிகாமட்டின் பழைய பெயர் ரந்தாவ் பாஞ்சாங். 20 ஆம் நூற்றாண்டு தொடக்க காலம் வரை ரந்தாவ் பாஞ்சாங் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது.
சிகாமட் மாவட்டம்
சிகாமட் மாவட்டம் 11 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துணை மாவட்டத்தையும் ஒரு மாவட்ட அதிகாரி நிருவகிக்கிறார். சிகாமட் மாவட்டத்தின் துணை மாவட்டங்கள்:
- சிகாமட் நதி துணை மாவட்டம் - சிகாமட் நகரத்தின் முக்கால் பகுதி
- கெமெரே துணை மாவட்டம் - சிகாமட்டின் ஆகச் சிறிய துணை மாவட்டம்
- பெக்கோ துணை மாவட்டம் - சிகாமட்டின் ஆகப் பெரிய துணை மாவட்டம்
- ஜாபி துணை மாவட்டம்
- செர்மின் துணை மாவட்டம்
- பூலோ காசாப் துணை மாவட்டம்
- ஜெமாந்தா துணை மாவட்டம்
- பாகோ துணை மாவட்டம்
- லாபிஸ் துணை மாவட்டம்
- சாஆ துணை மாவட்டம்
- கிம்மாஸ் துணை மாவட்டம்
பொருளாதாரம்
சிகாமட்டின் பொருளாதார முன்னோடியாக விளங்குவது வேளாண்மைதான். சிகாமட் மாவட்ட மக்களில் 61.8 விழுக்காட்டினர் வேளாண்மையையே நம்பி வாழ்கின்றனர். அடுத்து தொழில் துறையில் 13.1 விழுக்காட்டினரும் அரசாங்கப் பணியில் 12.2 விழுக்காட்டினரும் ஈடுபட்டுள்ளனர்.
சிகாமட் போக்குவரத்து தொடர்புகள்
சிகாமட் நகரம் கூட்டரசு, தேசிய மாநில நெடுஞ்சாலைகளினால் இணைக்கப்பட்டுள்ளது. கூட்டரசு நெடுஞ்சாலைதான்
கூட்டரசு நெடுஞ்சாலை
சுற்றுலா இடங்கள்
சிகாமட் ஒரு நடுத்தரமான நகரம். இங்கே பழையதும் புதியதும் கலந்த கலாசாரங்கள் மேலோங்கி நிற்கின்றன. இந்த நகரத்திற்கு அருகாமையில் வரலாற்றுப் புகழ்மிகு Gunung Ledang எனும் லேடாங் மலை இருக்கின்றது. தவிர ’ஆயர் பனாஸ்’ சுடுநீர் வீழ்ச்சி, பெக்கோக் நீர்வீழ்ச்சி போன்றவை சுற்றுப்பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளங்களாகும்.
- சிகாமட் சதுக்கம் - 1996 ஆம் ஆண்டு கட்டப் பட்ட இந்தச் சிகாமட் சதுக்கத்தை Segamat Square என்று அழைக்கிறார்கள். தேசிய, மாநில அளவிலான விழாக்கள் அல்லது கொண்டாட்டங்கள் இங்கு நடைபெறும். இங்கு ஓர் அழகான மணிக்கூண்டும், முள் நாறிப் பழக் கற் சிற்பமும் உள்ளன.
- கல்பாறை பூங்கா - இதை Rock Garden என்று அழைக்கிறார்கள். இது சிகாமட் நகரின் முக்கியமான பொழுது போக்கு பூங்காவாகும். இங்கு மாவட்ட அதிகாரியின் மாளிகையும், ஜொகூர் அரசரின் ஓய்வு மாளிகையும் உள்ளன.
- மலாக்கா பெண்டாஹாரா கல்லறை - சிகாமட் நகரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், மலாக்கா சுல்தானகத்தின் கடைசி பெண்டாஹாராவின் கல்லறை இங்கு தான் உள்ளது.
உயர் கல்விக் கூடங்கள்
- மாரா தொழில்நுட்பப் பல்கலைகழக ஜொகூர் வளாகம் (Universiti Teknologi Mara Kampus Johor) [3]- சிகாமட் நகரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த UiTM வளாகம் உள்ளது. பச்சைப் பசும்புல்வெளிகள் நிறைந்த இடம்.
- துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி (Kolej Tunku Abdul Rahman) [4]- சிகாமட் நகரின் தென் பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. 1998 மே மாதம் 8 ஆம் தேதி திறக்கப்பட்டது.
- சிகாமட் சமூகக் கல்லூரி (Kolej Komuniti Segamat) [5]- சிகாமட் நகரில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 2001 ஜூன் மாதம் திறக்கப்பட்டது.
சிகாமட் வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள்
- சிகாமட் தமிழ்ப்பள்ளி
- பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி
- பெக்கோக் தமிழ்ப்பள்ளி
- சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி
- லாபிஸ் தமிழ்ப்பள்ளி
- போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- கோமாளித் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சிகாமட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- ஊல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
வெள்ளப் பெருக்குகள்
கடந்த 50 ஆண்டுகளில் சிகாமட் நகரம் மூன்று முறை வெள்ளப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. 1950, 1984, 2006 ஆகிய ஆண்டுகள் சிகாமட் நகரத்தின் மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். 2006 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கிய உத்தோர் சூறாவளி, சிகாமட்டிலும் மோசமான வெள்ளச் சேதங்களை ஏற்படுத்தியது.
2011 ஆம் ஆண்டு மற்றொரு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அது ஒரு மிக மோசமான வெள்ளப் பெருக்காகும். அந்த வெள்ளப் பெருக்கு அண்டை மாநிலமான மலாக்காவையும் பாதித்தது. இந்தப் பேரிடரினால் 31,00 பேர் துயர்துடைப்பு மையங்களில் அடைக்கலம் அடைந்தனர். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
சிகாமட் வட்டாரத்தின் மற்ற பட்டணங்கள்
- பண்டார் புத்ரா
- லாபிஸ்
- ஜெமாந்தா
- பூலோ காசாப்
- சாஆ
- பெக்கோ
- பத்து அன்னம்
- பாகோ
- பெக்கான் ஆயர் பானாஸ்
- கிம்மாஸ் பாரு
- சுங்கை காராஸ்
- கம்போங் தெங்ஙா
மேற்கோள்
- http://www.correctplace.com/
- "A Brief History of Segamat". Segamat District Council. http://www.mdsegamat.gov.my/web/guest/latar_belakang. பார்த்த நாள்: 17.11.2011@11.30pm. Datuk Bendahara drank the water in the ‘temika’, and he finds the water very clear and cold, “SEGAR AMAT”. And therefore the name ‘Segamat’ emerged, until now.
- "UiTM Johor". UiTM Johor. http://johor.uitm.edu.my/. பார்த்த நாள்: 18.11.2011@3.38am. Pada tahun 1990, UiTM Johor telah tersergam indah di KM12, Jalan Muar-Segamat di atas tanah kurniaan pemerintah negeri. Di sini, UiTM Johor telah berkembang pesat dengan memenuhi tanggungjawab sebagai kampus UiTM Negeri Johor Kampus Segamat
- "Kolej Tunku Abdul Rahman". Webway E Services Sdn Bhd. http://www.studymalaysia.com/where/profile.php?code=TARC. பார்த்த நாள்: 18.11.2011@3.38am. Kolej Tunku Abdul Rahman (KTAR) was established in 1969 by the Malaysian Chinese Association (MCA) with the aim of providing quality and affordable education to young Malaysians
- "Laman Web Rasmi Kolej Komuniti Segamat". Kolej Komuniti Segamat. http://www.kkseg.edu.my/. பார்த்த நாள்: 18.11.2011@3.52am. Kolej ini mula beroperasi pada jun 2001 di kampus sementara di Sekolah Menengah Teknik Segamat (SMT) sebelum berpindah ke kampus tetap di no. 24-34 Jln. Putra 1/1, Bandar Putra, 85000 Segamat, Johor.
வெளி இணைப்புகள்
- Segamat – Link to Segamat on Bahasa Melayu site
- Segamat.com – community web sites of Segamat.
- Segamat.org – Chinese forum for Segamatians.
- Segamat Fotopages – Pics of Segamat from the webmaster of Segamat.fotopages.com