ஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா (பி. 1930) மலையாள மொழியின் முன்னோடியான புதுக்கவிஞர் ஆவார். திரிச்சூர் அருகே ஆற்றூர் என்ற ஊரில் பிறந்தார். மலையாளம் பி. ஏ ஆனர்ஸ் படித்துக்கொண்டிருக்கும்போது இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டார். பின்னர் இடதுசாரியானார். தலைமறைவுப் போராளியாக இருவருடம் இருந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் மலையாளப் பேராசிரியராக பணியாற்றினார். பின்பு கேரளத்தில் தலைசேரி பிரண்ணன் கல்லூரி மலையாளப் பேராசிரியராக ஆனார்.

இரவிவர்மா மலையாளத்தில் புதுக்கவிதைகளை எழுதிய முன்னோடிகளான அய்யப்ப பணிக்கர், சுகதகுமாரி, ஆர். ராமச்சந்திரன், சச்சிதானந்தன் , என். என். கக்காடு ஆகியோரின் வரிசையில் வரக்கூடியவர். 1962இல் வெளிவந்த புதுமுத்ரகள் என்ற புதுக்கவிதை தொகுதி மலையாளத்தில் புதுக்கவிதை இயக்கத்தை ஆரம்பித்து வைத்தது.
இவர் எம். கோவிந்தனால் கவரப்பட்டவர். மலையாளத்தை தமிழுடன் தொடர்புபடுத்தி சிந்திக்கக்கூடிய மரபை சார்ந்தவர். தமிழ் எழுத்தாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன், சல்மா, தேவதேவன் மற்றும் ஜெயமோகன் போன்றவர்களின் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்துடன் கம்ப ராமாயணம் போன்ற செவ்வியல் இலக்கியத்தையும் மொழிபெயர்த்துள்ளார்.[1] இவரது புதுக்கவிதைகள் இசையற்றவை. நேரடியானவை. கற்பனாவாதப் பண்பு இல்லாத யதார்த்தவாத கவிதைகள்
தமிழில் இருந்து தொடர்ந்து மலையாளத்துக்கு மொழியாக்கங்கள் செய்து வருகிறார். மொழியாக்கத்துக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது 1997ல் கிடைத்தது. கவிதைக்கான கேந்திர சாகித்ய அகாதமி விருது 2001ல் கிடைத்தது.
மொழிபெயர்ப்புகள்
- ஜேஜேசில குறிப்புகள். (சுந்தர ராமசாமி)
- ஒருபுளியமரத்தின் கதை (சுந்தர ராமசாமி)
- நாளை மற்றுமொரு நாளே (ஜி நாகராஜன்)
- இரண்டாம் ஜாமங்களின் கதை (சல்மா)
- புதுநாநூறு, 400 தமிழ்க்கவிதைகள்
- பக்திகாவியம் (சைவ நாயன்மார்கவிதைகள்)
மேற்கோள்கள்
- "தி இந்து செய்தி". பார்த்த நாள் பெப்ரவரி 1, 2015.