தேவதேவன்

தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்றப் பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

கைவல்யம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜாகோயில் என்ற ஊரில் மே 5 1948 ஆம் ஆண்டு பிச்சுமணி தம்பதியினருக்குப் பிறந்தார். ஈ. வெ. ராமசாமி இவருக்குக் கைவல்யம் என்றப் பெயரை இட்டார். தந்தையுடன் 19 அகவையில் தூத்துக்குடிக்கு பிழைப்புத் தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கியிருக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்தபின் கைவல்யம் ஒரு சிறு அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். பின்னர் ஆசிரியர் படிப்பு முடித்து தூத்துக்குடியிலேயே ஆசிரியரானார். நகராட்சிப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றார். இவரது மனைவி சாந்தி , மகள் அமர்த்தா பிரீதம் , மகன் அரவிந்தன்.

எழுத்துலகம்

இளம்வயதில் மரபுக்கவிதைகள் எழுதிவந்த கைவல்யம் தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீனக் கவிதைகளைப் புனையத் தொடங்கினார். குறுகிய காலம் கேரளத்தில் வாழ்ந்தபோது அங்கிருந்த இயற்கைக் காட்சிகளினால் ஆழ்மான மனநகர்வுக்கு உள்ளாகி நிறைய கவிதைகள் எழுதினார். இக் காலகட்டத்தில் அவர் சுந்தர ராமசாமி தன் வீட்டு மாடியில் நடத்திவந்த காகங்கள் என்ற இலக்கிய உரையாடல் அமைப்பில் நெடுந்தொலைவுப் பயணம் செய்து வந்து கலந்துக் கொள்வதுண்டு.

கைவல்யத்தின் முதல்கவிதைத் தொகுப்பு குளித்துக் கரையேறாத கோபியர்கள் 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பு மின்னற்பொழுதே தூரம் பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்து கவிதை வாசகர்களால் கவனிக்கப்பட்டது. தொடர்ந்து 'மாற்றப்படாத வீடு' பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது. பெரும்பாலான கவிதைகளை தன் நண்பர்களான முத்துப்பாண்டி, லெனா குமார், காஞ்சனை சீனிவாசன் ஆகியோரின் உதவியுடன் அவரே வெளியிட்டு வந்தார். பின்னர் அவரது கவிதைகளைத் தமிழினி பதிப்பகம் வெளியிட தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு அவரது கவிதைகளுக்கான முழுத்தொகுப்பு தேவதேவன் கவிதைகள் என்ற பெயருடன் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தேவதேவன் கவிதைபற்றி என்ற உரையாடல் நூலையும் அலிபாபவும் மோர்ஜியானாவும் என்ற நாடக நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

1970-80 களில் தூத்துக்குடியில் கலைப்படங்களுக்கான திரைப்படச் சங்கம் ஒன்றையும் நடத்திவந்தார்.

விருதுகளும் திறனாய்வுகளும்

விஷ்ணுபுரம் விருது[2]

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது,

லில்லி தேவசிகாமணி விருது,

தேவமகள் அறக்கட்டளை விருது

தமிழக அரசின் தமிழ்வளர்ச்சிக்கழக விருது

விளக்கு விருது

தூத்துக்குடி சாராள் -ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது

திறனாய்வு

தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். நவீனத்துவத்திற்குப் பின் தமிழ்க் கவிதை-தேவதேவனை முன்வைத்து என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.


தமிழினி வெளியீடாக ஜெ.ப்ரான்ஸிஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனைப்பற்றி யாதும் ஊரே யாதும் கேளிர் என்ற செய்திப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

கவிதை நடை

தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டவை. இயற்கைசார்ந்த படிமங்களை உள்ளொடுங்கிய தத்துவ நோக்குடன் சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும் இலக்கின்மையையும் விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமான கருணையையும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். கவிதைக்கு புற அரசியல் தேவையில்லை, கவிதை தன்னளவிலேயே அரசியல்செயல்பாடுதான் என்று வாதிடும் தேவதேவன் தமிழக தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மிகுந்த உணர்ச்சிப் பங்குடன் கண்டனக் கவிதைகளை எழுதியுள்ளார்.

அடிக்குறிப்புகள்

  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
  2. "மனதை அமைதிப்படுத்தும் தேவதேவனின் கவிதைகள்". பார்த்த நாள் 28 December 2012.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.