திருத்தொண்டத் தொகை

திருத்தொண்டத்தொகை என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்ட நூலாகும். இந்நூல் சிவபெருமானுடைய அடியார்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இந்நூலில் 60 தனியடியார்களும் மற்றும் 9 தொகையடியார்களும் குறிப்பிடப் படுகிறார்கள். இந்நூலை மூலமாகக் கொண்டே சைவ சமய புராண நூலான பெரியபுராணம் சேக்கிழாரால் பாடப்பட்டதாகும்.

தொன்மம்

சுந்தரமூர்த்தியார் சிவபெருமானது நண்பர் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். ஒரு முறை திருவாரூர் சிவாலயத்தில் இறைவனோடு சுந்தரமூர்த்தியார் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் எண்ணற்ற சிவனடியார்கள் இருந்தனர். அவர்களை யாரென சிவபெருமானிடம் சுந்தரர் கேட்டார், அதற்கு சிவபெருமான் அவர்களின் பெருமையை எடுத்துரைத்தார். அதன்பின்பு அடியார்களின் பெருமைகளை விரித்து பாடுமாறு சுந்தரரிடம் சிவபெருமான் கேட்டுக் கொண்டார். அந்தப் பாடல்களுக்கு சிவபெருமானே "தில்லை வாழ் அந்தணர்" என்று அடியெடுத்துக் கொடுத்தார். [1]

அடியார் பெருமைகளை சிவபெருமான் பாடியதாக நம்பப்படும் பாடல் :-

பெருமையால் தம்மை ஒப்பார்
  பேணலால் எம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
  ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம் நிலையில் நின்றார்
  அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்து நின்றார்
  இவரை- நீ அடைவாய்

அமைப்பு

திருத்தொண்டர்த் தொகை நூலானது பதினொரு பாடல்களால் ஆனது. இந்நூலில் இரு பெண் அடியார்கள் பற்றியும், ஐம்பத்தி எட்டு ஆண் அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அடியவர்களின் புகழைப் பாடுவதால், தன்னையும் அடியார்களின் அடியான் என சுந்ததர் குறிப்புடுகிறார்.

அடியார் தொகை

திருத்தொண்டத் தொகையில் 60 தனியடியார்களும் மற்றும் 9 தொகையடியார்களும் குறிப்பிடப் படுகிறார்கள். இந்நூலில் 58 ஆண் அடியார்களும், காரைக்கால் அம்மையார் மற்றும் மங்கையற்கரசியார் என இரு பெண் அடியார்களும் குறிப்பிடப்படுகிறார்கள். இந்நூலில் குறிப்பிடப்படும் ஒன்பது தொகையடியார்கள், உலக அளவில் உள்ள சைவ அடியார்களை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டதாகும். [2]

இந்நூலை மூலமாகக் கொண்டும், எண்ணற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகள், செவி வழி செய்திகள், கர்ண பரம்பரை கதைகள் கொண்டு சேக்கிழார் பெரிய புராணத்தினை இயற்றினார். அதனால் திருத்தொண்டத் தொகையின் ஆசிரியரான சுந்தரமூர்த்தியாரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த தந்தை சடையனார், தாயார் இசை ஞானியார் ஆகியோரையும் இணைத்து 63 நாயன்மார்களாக கொண்டார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.