லா. ச. ராமாமிர்தம்

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா. ச. ராமாமிர்தம்

வாழ்க்கைக் குறிப்பு

1916 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இலக்கிய உலகில்

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.

மறைவு

லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91 வயதில், சென்னையில் மரணமடைந்தார்.

எழுதிய நூல்கள்

புதினம்

  1. புத்ர (1965)
  2. அபிதா (1970)
  3. கல்சிரிக்கிறது
  4. பிராயச்சித்தம்
  5. கழுகு
  6. கேரளத்தில் எங்கோ

சிறுகதைகள்

  1. இதழ்கள் (1959)
  2. ஜனனி (1957)
  3. பச்சைக் கனவு (1961)
  4. கங்கா (1962)
  5. அஞ்சலி (1963)
  6. அலைகள் (1964)
  7. தயா (1966)
  8. மீனோட்டம்
  9. உத்தராயணம்
  10. நேசம்
  11. புற்று
  12. துளசி
  13. என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
  14. அவள்
  15. த்வனி
  16. விளிம்பில்
  17. அலைகள்
  18. நான்
  19. சௌந்தர்ய

நினைவலைகள்

  1. சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
  2. பாற்கடல்

கட்டுரைகள்

  1. முற்றுப்பெறாத தேடல்
  2. உண்மையான தரிசனம்

பெற்ற விருதுகள்

1989ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.