மயிலாப்பூர்
மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஒரு இடமாகும். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.
மயிலாப்பூர் | |
— அண்மைப்பகுதி — | |
அமைவிடம் | 13°02′01″N 80°16′07″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.chennai.tn.nic.in |
இங்கு கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில், மற்றும் கடலோரம் அமைந்துள்ள சாந்தோம் சர்ச் ஆகிய பெற்ற கோயில்கள் உள்ளன.
திருவள்ளுவர் இங்கு வாழ்ந்தார் என்று ஒரு கருத்து உள்ளது. இவருக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.
வரலாறு
சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.
சமணம்
தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் சமணம் எழுச்சியுற்று இருந்தபோது, மைலாப்பூரிலும் இச்சமயம் செழிப்புற்றிருந்தது. இப்போது சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறப்படுகின்றது. இங்கே நேமிநாத தீர்த்தங்கரரின் உருவம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மயிலையிலிருந்த இந்த நேமிநாதர் மீது திருநூற்றந்தாதி என்னும் நூலை அவிரோதியாழ்வார் என்பவர் இயற்றியுள்ளார். இது தவிர திருக்கலம்பகம், மயிலாப்பூர் பத்துப்பதிகம், மயிலாப்பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்பனவும் இப் பள்ளி தொடர்பில் எழுந்தவை ஆகும். இச் சமணக் கோயில் தொடர்பான தொல் பொருட்கள் பலவும் சாந்தோம் தேவாலயத்தை அண்டிய பகுதிகளில் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.[4]
- ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலையிலிருந்த 'சினகரம்' என்னும் கோயிலைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோயில் 1600-ஆம் ஆண்டு கடலால் கொள்ளப்பட்டது.[5]
இந்து சமயம்

இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.
திருமயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும். சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மற்றும் அம்பாள் மயில் வடிவங் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
சப்த சிவதலங்கள்
மயிலாப்பூரில் சப்த சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்கிறார்கள். இந்தத் தலங்கள் ஒன்றுக்கொன்று அருகாமயில் அமைந்துள்ளன. இத்தலங்களை கீழ்கண்ட வரிசைப்படி தரிக்க வேண்டும் என்கிறார்கள்.[6]
- மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில்
- திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் விருபாக்சீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்
- மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்
இந்த சப்த சிவாலயங்களை சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.[7]
கிறிஸ்தவம்
இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவரான செயின்ட் தோமஸ் கி.பி 52 இல் கேரளாவுக்கு வந்து அங்கே சமயப் பணி செய்தபின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார் என்றும், கி.பி 72 ஆம் ஆண்டில் சென்னை அருகில் உள்ள சின்ன மலை (Little Mount) அருகே கொல்லப்பட்டார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இவரது உடல் மயிலாப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டதாகவும் கருதப்படுகின்றது. இவ்விடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.[8] தற்போது அந்த இடத்தில் சாந்தோம் பேராலயம் உள்ளது.
இராமகிருஷ்ணர் மடம்

இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர் துவக்கிய ராமகிருஷ்ண மடம் நாடெங்கும் பல கிளைகளைக் கொண்டுள்ளது. மயிலாப்பூரில் ராமகிருஷ்ண மடத்தின் கிளை ஒன்று அமைந்துள்ளது. வங்காளத்தைத் தவிர மற்ற இடங்களில் ராமகிருஷ்ண இயக்கத்தின் முதல் கிளை மடம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.[9] நகருக்குள் பச்சை பசேலென வியாபித்திருக்கும் அமைதி நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று.
இவற்றையும் பார்க்க
குறிப்புகள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- வெங்கடசாமி மயிலை. சீனி.
- ஆதிநாதர் பிள்ளைத்தமிழ், ஆதிநாதர் பதிப்பகம், 1956
- தீபம் இதழ் - சப்த சிவ தலங்கள் - மே 20 2016 -பக்கம் 32
- தீபம் இதழ் மே 20 2016 -பக்கம் 42
- Berchmans, 1998
- சுவாமி ராமகிருஷ்ணானந்தர் விரிவான வாழ்க்கை வரலாறு,ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை,பக்கம் 116
உசாத்துணைகள்
- பர்ச்மன்ஸ், இந்தியாவில் கிறீஸ்தவம், 1998, அணுக்கம் 20th ஜனவரி 2007 (ஆங்கில மொழியில்)
- வெங்கடசாமி மயிலை. சீனி., சமணமும் தமிழும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (ஆங்கில மொழியில்)
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005