சின்னமலை (சென்னை)
சின்னமலை (Little Mount) என்பது தமிழ் நாட்டின் சென்னை மாநிலத்தில் சைதாப்பேட்டை வட்டத்தில் அடையாறு ஆற்றின் கரையில் அமைந்த சிறிய குன்று ஆகும். இயேசுவின் பன்னிரு திருத்தூதருள் ஒருவரான புனித தோமா வாழ்ந்து கிறித்தவ மறையைப் பரப்பிய இடங்களுள் ஒன்றாக சின்னமலை கருதப்படுகிறது.
புனித தோமா வாழ்ந்ததாகக் கருதப்படும் இம்மலைமீது 1551ஆம் ஆண்டில் போர்த்துகீசியர் ஒரு கோவில் எழுப்பினார்கள். அக்கோவில் இருந்த இடத்தில் பின்னர் 1970ஆம் ஆண்டில் அதிக இட வசதி கொண்ட ஒரு பெரிய கோவில் வட்ட வடிவத்தில் கட்டி எழுப்பப்பட்டது.
சின்னமலையில் தற்போது வீடுகள், கடைகள், அலுவலகங்கள் உட்பட பல கட்டடங்கள் உள்ளன. 9ஆம் பெருநகர் குற்றவியல் நீதிமன்றம் (சைதாப்பேட்டை), சென்னை மாநகரப் பேருந்து பணிமனை (சைதாப்பேட்டை), அனைத்திந்திய வானொலி நிலையம் ஆகியவை சின்னமலையில் அமைந்துள்ளன. சின்னமலையில் எல்லையில் மாநில ஆளுநர் இல்லம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் மற்றும்
புனித தோமா வரலாற்றோடு இணைந்த மலை
சின்னமலையில் அமைந்த ஒரு சிறு குகையில் புனித தோமா தங்கியிருந்ததாக மரபு. அங்கு அவர் தனிமையில் இறைவேண்டல் செய்வதிலும் கிறித்தவ மறையை மக்களுக்கு போதிப்பதிலும் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மலையில் அமைந்துள்ள சின்ன கோவில் வழியாக அக்குகைக்குள் செல்ல முடியும். அங்கு மக்கள் அமைதியாக அமர்ந்து இறைவேண்டல் நிகழ்த்துகின்றனர்.
குகையின் மறுபுறம் ஒரு வாயில் உள்ளது. புனித தோமா தம்மைத் தாக்க வந்தவர்களின் கைகளிலிருந்து அவ்வாயில் வழியாகத் தப்பியோடியதாக மரபு. அவ்வாயில் முற்றத்தில் பாறையில் காணப்படும் கைத்தடமும் கால்தடமும் தோமையாருடையவை என்று கூறப்படுகிறது.
குகையிலிருந்து சிறிது தொலையில் ஒரு நீரூற்று உள்ளது. அதிசயமாகத் தோன்றிய அந்நீரூற்றில் புனித தோமா தாகம் தணித்ததாக மரபு கூறுகிறது.
ஆரோக்கிய அன்னை கோவில்
ஆரோக்கிய அன்னையைச் சிறப்பிக்கும் வகையில் போர்த்துகீசியர் இப்புனித தலத்தில் 1551ஆம் ஆண்டு ஒரு கோவில் கட்டியெழுப்பினர். பலமுறை புதுப்பிக்கப்பட்ட பிறகும் அப்பழைய கோவிலின் ஒரு பகுதி இன்றும் உள்ளது. இக்கோவிலின் பீடத்தின் இடது புறம் வழியாக புனித தோமா வாழ்ந்த குகைக்குள் நுழைய முடியும்.
மேம்பாட்டுத் திட்டங்கள்
கோவில் பகுதியில் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நிகழ்ந்துள்ளன. கோவிலின் பின்புறத்தில் திருநாடு (Holy Land) அமைக்கப்பட்டுள்ளது. அங்கே சிலுவைப் பாதை நிலைகளும் செபமாலை நிலைகளும் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. திருநாட்டில் அமைக்கப்பட்டுள்ள பீடம் இத்தாலியில் செய்யப்பட்டு திருத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பழைய கோவிலுக்கு அருகே ஆராதனைச் சிற்றாலயம், பெரிய கோவில் பக்கத்தில் பங்கு அலுவலகம், திருவிழாக் கொண்டாட்டத்திற்கான மேடை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
கோவில் திருவிழா
ஆரோக்கிய அன்னைக் கோவில் திருவிழா ஆண்டுதோறும் இயேவின் உயிர்த்தெழுதல் திருநாளுக்குப் பின்வரும் ஐந்தாம் ஞாயிறு நடைபெறுகிறது. கொடியேற்றத்தோடு தொடங்கும் விழாக் கொண்டாட்டம் நவநாள் சிறப்புகளோடு பத்துநாள்கள் நீடிக்கும். ஒவ்வொரு நாளும் திருப்பலியும் சிறப்பு வழிபாடுகளும் நிகழும். திருவிழா நிறைவின்போது தேர்ப்பவனி கோவிலைச் சுற்றி நிகழும். அதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். மறுநாள் திருப்பலி நிகழ்த்தப்பட்டு, கொடி இறக்கப்படும்.
ஆரோக்கிய அன்னை கோவில் "திருத்தலம்" (shrine) என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.[1]
திருப்பலி நேரங்கள்
- ஒவ்வொரு நாளும்:
காலை 6:15 திருப்பலி
காலை 11:30 திருப்பலி
- சனிக்கிழமை:
காலை 11:30 திருப்பலி
மாலை 5:00 செபமாலை
- ஞாயிறு:
காலை 6:15 ஆராதனை
காலை 6:30 திருப்பலி (ஆங்கிலம்)
காலை 8:00 திருப்பலி (தமிழ்)
காலை 10:00 திருப்பலி (மலையாளம்)
காலை 11:30 திருப்பலி (தமிழ்)
மாலை 5:00 திருப்பலி (தமிழ்)
கோவில் தொடர்பான பிற நிறுவனங்கள்
- ஆரோக்கிய அன்னை கல்விக்கூடம்
- அமலோற்பவ அன்னை கன்னியர் மடம்
- கருணை இல்லம்: அன்னை தெரேசா தொடங்கிய "பிறரன்புப் பணி சகோதரர்" (Missionaries of Charity (Brothers)) சகோதரர் பார்வையில் இங்கு உடல், உள ஊனமுற்றோர் பராமரிக்கப்படுகின்றனர்.
- ஓசானாம் நல மையம்: புனித வின்சென்ட் தே பவுல் சபையினரின் ஆதரவில் நடைபெறும் இந்த மையம் ஏழைகளின் நலவாழ்வுக்கு உதவியாக உள்ளது.
- கல்லறைத் தோட்டம்
மேலும் சின்ன மலையில் அசெம்பிளி ஆப் காட் சபைக் கோவில் உள்ளது.
சின்னமலையில் உள்ள வாழ்பகுதிகள்
சின்னமலையில் மக்கள் வாழ்பகுதிகள் வெவ்வேறு காலங்களின் எழுந்தன. எல்.டி.ஜி. சாலையும் ஆரோக்கிய மாதா நகரும் மிகப் பழமையானவை. தாமஸ் நகர், சிறீநகர் காலனி, ரங்கராசபுரம் ஆகியவை பின்னர் எழுந்தவை.அத்துடன் கன்னிகாபுரம்,ராஜ்பவன்,கிண்டி மடுவங்கரை,கோதாமேடு,ஜோதியம்மாள் நகர்,அரசுப் பண்ணை,சி.ஐ.டி. நகர்,வெங்கடாபுரம், என பல பகுதிகள் சின்னமலைப் பங்கின் பகுதிகள்
உணவகங்கள்
வேளச்சேரி சாலையில் அசோக் பவன் உள்ளது. அங்கு சைவ உணவு கிடைக்கிறது. Hotel Heritage-இல் சைவ உணவும் Mount Palace-இல் அசைவ உணவும் கிடைக்கின்றன. Domino's Pizza உணவகம், பொன்னுசாமி உணவகம் போன்றவையும் உள்ளன.
போக்குவரத்து வசதி
சின்னமலை வழியாக சென்னை மாநிலப் பேருந்துகள் எல்லா நேரத்திலும் செல்கின்றன.