நல்லூர் கந்தசுவாமி கோவில்

நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில்
நல்லுர் கந்தசுவாமி கோவிலின் நுழைவாயில்.
நல்லூர் கந்தசுவாமி கோவில்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°40′28.82″N 80°1′46.61″E
பெயர்
பெயர்:நல்லூர் கந்தசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1749
அமைத்தவர்:கிருஷ்ண உப ஐயர் மற்றும் ரகுனாத மாபான முதலியார்
இணையதளம்:http://nallurkanthan.com/
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள தேர் வீடு

வரலாறு

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.

இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை
யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு
நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்
குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே

ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:

சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சிவகோத்திரோற்பவ இரகுநாதமாப்பாணர் சமுக”

திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள்.

முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.

உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.   

யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.

ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.

மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

ஆலய அமைப்பு

இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன.

பூசைகளும் மகோற்சவமும்

இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன.

தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும்.

இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது.

மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.

இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.

ஆலயம் பற்றிய நூல்கள்

  • கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா.
  • இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா.
  • நல்லையந்தாதி.
  • நல்லைக் குறவஞ்சி.
  • நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல்.
  • "" திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி"
  • உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி.
  • நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா'.

உசாத்துணை நூல்கள்

  • உமாச்சந்திரா பிரகாஷ் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், 2016

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.