திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம்
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் திருகோணமலை நகரின் மையப்பகுதியில், பேருந்து நிலையத்திற்கு மிக அருகாமையிலும் திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம் | |
---|---|
![]() திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம் | |
![]() ![]() திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயம் தேசப்படத்தில் பத்திரகாளி அம்பாள் ஆலயம் | |
ஆள்கூறுகள்: | 8°34′29.24″N 81°14′4.10″E |
பெயர் | |
பெயர்: | பத்திரகாளி அம்பாள் ஆலயம் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | கிழக்கு மாகாணம் |
மாவட்டம்: | திருக்கோணமலை |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.
வரலாறு
இவ்வாலயத்தின் வரலாற்றினை திட்டவட்டமாக வரையறுத்துக் கூறமுடியவில்லையென்றாலும் இவ்வாலயத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், பழைய சாசனங்கள், கர்ண பரம்பரையாக வழங்கிவரும் கதைகள், அக்கதைகளோடு தொடர்புடையதாய் தற்போது ஆலயத்திலிருக்கும் விக்கிரகங்கள், தகளி, வாகனம் என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு முதலாம் இராசேந்திர சோழன் காலமாகிய பதினோராம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்றிருந்திருக்க வேண்டுமென்று சரித்திரப் பேராசிரியர் செ. குணசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
திருவிழா
பங்குனி உத்தரத்தைத் தீர்த்தோற்சப நாளாகக்கொண்டு பத்து நாட்கள் மகோற்சபம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரதோற்சபம் நடைபெற்று, பங்குனி உத்தரத்தன்று அம்பாள் கோணேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் கோணமலையின் அடிவாரத்திலுள்ள கடற்கரையில் அதிகாலையில் தீர்த்தமாடுவர்.
விமர்சையாக நடைபெறும் விழாக்கள்
வைகாசிப் பொங்கல்
வைகாசிப் பூரணை வரும் தினம் எதுவோ அதற்கு முன்னர் வரும் திங்கட்கிழமை ஸ்ரீ பத்திரகளி அம்பாள் ஆலயப் பொங்கலும், இத்தினத்திற்கு முன்னர்வரும் திங்கட்கிழமை பாலம்போட்டாற்றுப் பத்தினியம்மன் கோயில் பொங்கலும், இத்தினத்தை அடுத்துவரும் வாரத்தில் செவ்வாயக்கிழமை சல்லி அம்மன் கோயில் பொங்கலும் நடைபெற்றுவருகின்றது. இந்த ஒழுங்கு பன்னெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. இதனால் வைகாசி மாதம் முழுவதும் திருகோணமலையில் சக்தி வழிபாட்டு பக்தி வெள்ளத்தில் மூழ்கியிருப்பதைக்காணலாம்.
கேதாரகௌரி விரதம்
இவ்வாலயத்தில் கடந்த 150 ஆண்டு காலமாக மிகச்சிறப்பாக அனுட்டிக்கப்பட்டுவருகிறது கேதாரகௌரி விரதம். புரட்டாதி மாதம் விஜயதசமி முதல் ஐப்பசி மாத அமாவாசைத் திதிவரை நிகழும் 21 நாட்களுக்கான விரத அனுட்டானங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள் தரிப்பதற்குரிய விரத நூலும் பூசைப்பொருட்களும் வைக்கப்பட்டு அலங்காரப்பூசை நடைபெறும். பூசையின் முடிவில் இவ்விரதத்திற்காக முன்னரே பதிவு செய்துகொண்டவர்களை அழைத்து பூசைப்பெட்டிகளை வழங்குவார்கள். தனியாக விரதநூலை மாத்திரம் பெற்று இவ்விரதத்தை அனுட்டிப்பவர்களும் உண்டு.
கும்பவிழா
விசயதசமியன்று நடைபெறும் கும்பவிழா திருகோணமலையில் இடம்பெறும் தனித்துவமான ஒரு விழாவாகும்.
ஏனையவை
- நவராத்திரி
- இலட்சார்ச்சனை
மேற்கோள்கள்
- பண்டிதர் இ. வடிவேல், திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள்