பறாளை விநாயகர் ஆலயம்

பறாளை விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும்.

அமைவிடம்

யாழ்ப்பாணத்தின் வடமேற்கே தொல்புரம், சோழியபுரம் என்னுமிரு கிராமங்கள் உள்ளன. அவற்றில் சோழியபுரமே பிற்காலத்திலே சுழிபுரம் என மருவி உள்ளதாக குறிப்பிடுவர். சுழிபுரம் கிராமத்தின் வயல் சூழ்ந்த மருத நிலப்பகுதியில் கிழக்கு நோக்கிய சந்திதியாக இலங்கையின் புராதன விநாயகர் ஆலயங்களில் ஒன்றான பறாளை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு வடக்கு வீதியுடன் பறாளை முருகன் ஆலயமும் அமைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மூர்த்திச் சிறப்பு

தமிழரசர் காலத்தில் சிறப்புற்றிருந்த இவ்வாலயத்தை போர்த்துக்கேயர் இடிக்கத் தொடங்கிய வேளையில் காகம் ஒன்று வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக் கொத்தி ஆலயத்தை இடிக்கவிடாது செய்தது. அதனால் அங்குள்ள பிள்ளையார் கண்ணைக் கொத்திக் காக்கைப் பிள்ளையார் எனவும் அழைக்கப்படுகிறார். இந்த அற்புதத்தை பறாளை விநாயகர் பள்ளினூடாக அறிய முடியும்.

ஆலய பரிபாலனமும் சிவாசாரியார்களும்

இவ்வாலயத்தில் இந்தியாவிலிருந்து வந்த வேதாரணிய சைவக்குருமார்களால் வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. தற்பொழுதும் சைவக்குருமார்களின் பரம்பரையினராலேயே நித்திய நைமித்திய வழிபாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.

நூல்கள்

இவ்வாலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை விநாயகர் பள்ளு என்னும் பிரபந்தம் ஒன்றை பாடியுள்ளார். அந்நூல் இத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானை பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய யாப்புகளால் அந்நூல் அமைந்துள்ளது. இதுவும் இவ்வாலயத்தின் பழைமையையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது.

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.