உடலியங்கியல்
உடலியங்கியல் (இலங்கை வழக்கு: உடற்றொழிலியல்) (Physiology, Lua error in package.lua at line 80: module 'Module:IPAc-en/pronunciation' not found. ) என்பது உயிரினங்களின் செயல்பாட்டைக் குறித்த அறிவியல் ஆகும். அறிவியலின் இப்பிரிவு உயிரிகளிலுள்ள உயிர் மூலக்கூறுகள், உயிரணுக்கள், இழையங்கள், உறுப்புக்கள், உடல் உறுப்புத் தொகுதிகள், எவ்வாறு வேதியியல் அல்லது இயற்பியல் செயல்பாடுகளைச் செய்கின்றன என்பதைக் குறித்ததாகும். ஓர் உயிரியில் எவ்வாறு உறுப்புக்கள் இயங்கி அதனால் தனது செயல்களை மேற்கொள்ள முடிகிறது என உடலியங்கியலாளர்கள் அறிகின்றனர். எடுத்துக்காட்டாக மனிதர்களில் உணவு செரிக்க இரைப்பை, கல்லீரல், மற்றும் கணையம் போன்றவை சுரக்கும் வேதிப்பொருட்கள் குறித்தும், அவை உடல் எவ்வாறு உணவை உறிய வைக்கின்றன என்பது குறித்ததுமாக கற்பது. இதேபோல் தசைகளில் நரம்புகள் எடுத்துச்செல்லும் வேதிச் செய்திகளுக்கேற்ப சுருங்கி விரிதல் ஏற்படுவதும் உடலியங்கியல் ஆகும். இயல்பாக உடல் எப்படிச் செயல்படுகிறது என்பதை அறிவதன் மூலம், மருத்துவர்கள் உடலுறுப்புகள் இயல்பாகச் செயல்படாதிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எடுத்துக் காட்டாக, தைராய்டு சுரப்பி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்ததால் முன்கழுத்துக் கழலை என்னும் நோய்க்குச் சிகிச்சை அளிக்க முடிந்தது.

இத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக வேந்திய சுவீடனின் அறிவியல் அகாதமி 1901 முதல் அளித்துவரும் உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு உள்ளது.