இரா. மதிவாணன்
பேராசிரியர். இரா. மதிவாணன்( பிறப்பு: 1-7-1936 ) சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞர் ஆவார். இவர் கல்வெட்டு எழுத்தாய்வாளரும், சொற்பிறப்பியல் எழுத்தாளரும் ஆவார். இவர் வரலாற்று ஒளிஞாயிறு என்னும் விருது பெற்றவர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் 1936 ஆண்டின் சூலை முதலாம் நாளில் தருமபுரி -உகுநீர்க்கல் ( ஒகேனக்கல்) சாலையிலுள்ள பென்னாகரத்தில் பிறந்தார். திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் ஆய்வுப்பட்டங்களும் பெற்றவர். சேலம் அரசினர் கல்லூரியில் பணியாற்றினார்.[1]
தொழில்முறை வாழ்க்கை
மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரை இயக்குநராகக் கொண்ட செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்டத்தில் பணியாற்றி ஆராய்ச்சித்திறன் பெற்றவர், அவருடன் பணியாற்றிய பெருமைக்கு உரியவர். பாவாணருக்குப் பின்னர் அகர முதலித்திட்டத்தில் இயக்குநராகித் திறமுடன் பல மடலங்களை உருவாக்கினார், சொற்பிறப்பியல் அகர முதலியின் 6 தொகுதிகளை வெளியிட்டார். சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆய்விலும், எழுத்தாய்விலும் உலகப்புகழ் பெற்றவர், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டவர். வடநாடு முழுவதும், மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா போன்ற பல பகுதிகளில் சொற்பிறப்பியல் மொழி ஆய்வுக்காகப் பயணம் செய்தவர்.[2][3].
ஆய்வு பற்றிய சொற்பொழிவுகளும் பங்கேற்ற மாநாடுகளும்

- பரோடா பல்கலைக்கழகத்தில் "சிந்துவெளி எழுத்துக்களைப் படிக்கும் முறைகள்" என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவுகள் – 1973
- ஐதராபாத்து மாநிலத் தொல் பொருளாய்வுத் துறையில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் – 1993
- அனைத்திந்திய பாறை ஓவியக் கருத்தரங்கம் – ஆக்ராவில் தென்னாட்டுப் பாறை ஓவியங்களிலுள்ள சிந்துவெளி எழுத்துச் சான்று தொடர்பான ஆய்வுத்துரை.
- கருநாடக மாநில உடுப்பி அறிவியல் கலைக் கல்லூரியில், சிந்துவெளி எழுத்தைப் படித்தறிந்த முறைகள் குறித்த சொற்பொழிவு.
- திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் மறை மாநாட்டில் சிந்துவெளி எழுத்துகள் குறித்த உரை.
- நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரால் நிறுவப்பட்ட சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் சித்துவெளி தொடர்பான எழுத்துகள் உரை -1996.
- கலிபோர்னியாவில் பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு அவர்கள் முன்னிலையில் சிந்துவெளி எழுத்துகள் படித்தறிந்த முறை பற்றிய விளக்கம் – கலந்துரையாடல் – (2002).
- புது தில்லி சாகித்திய அகாதமியின், இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு ஆசிரியர்களை ஊக்குவிக்கும் சிறப்புச் சொற்பொழிவுச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், தமிழிலக்கியம் குறித்த சொற்பொழிவு – குசராத்து, இராசத்தானம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் நிகழ்த்தப்பட்டது. அம்மாநிலங்களிலுள்ள இலக்கிய மன்றங்கள் தமிழிலக்கியச் சொற்பொழிவுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தன.
- கனடா நாட்டுத் தொரண்டரோ நகரத்துத் கலை அற்வியல் கல்லூரியில் திருக்குறள் சிறப்புச் சொற்பொழிவு (2002)
- சென்னை, பெரியார் திடலில் இருக்கு வேதபேருரை – 18 தொடர் சொற்பொழிவுகள்.
இவர் தமிழறிவு, சிந்துவெளி எழுத்தாராய்ச்சி, மொழியியல், சொற்பிறப்பியல், தொன்மை நாகரிக ஆராய்ச்சி, இலக்கியம், இலக்கணம், மொழிபெயர்ப்பு, கல்வெட்டு, பாறை ஒவிய எழுத்துகள் போன்ற பல துறைகளிலும் சிறந்த ஆய்வாளர் எனப் பெயர் பெற்றவர். மேற்கண்ட துறைகளில் அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர்.[4].[5][6].[7][8].[9][10].[11][12].
விருதுகளும் பரிசுகளும் பராட்டுகளும்
- 1956ஆம் ஆண்டில் திருக்குறளின் 1330 குறளையும் முழுமையாக ஒப்பித்ததற்காகத் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி முதற் பரிசு வழங்கியது.
- 1992ஆம் ஆண்டில் தமிழக அரசின் ‘திருக்குறள் நெறிபரப்பு மையம்’ ‘ திருக்குறள் செம்மல்’ என்னும் விருது வழங்கியது.
- ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலுக்குச் சென்னை கிறிஸ்துவ இலக்கிய கழகம் (CLS) முதற்பரிசு வழங்கியது.(1977).
- வங்கிக் கலைச்சொல் அகராதி பதிப்புக் குழுவில் பணியாற்றியதற்காகப் பாரத மாநில வங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது.
- 1981ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் குமரிக்கண்டம் என்னும் வரலாற்றுக் குறும்படம் திரையிடப்பட்டது. இது இவருடைய ‘இலெமூரியா முதல் அரப்பா வரை’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டதாலும், திரைப்பட உருவாக்கத்திற்கு இயக்குநர் ப.நீலகண்டனாருடன் உடனிருந்து பணியாற்றியதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் பாராட்டும் தஞ்சாவூர் கலைத்தட்டும் வழங்கப்பட்டன.
- மலேசியத் தமிழ்க் குயில் முனைவர் கா.கலியபெருமாள் அவர்கள் தம் சொந்தச் செலவில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் சிறப்பு சொற்பொழிவுக்கு அழைத்துச் சென்றார். மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தாமும் உடனிருந்து, இவரது பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்தார். ஈப்போவிலுள்ள பாவாணர் தமிழ்மன்றமும் வள்ளலார் ஒளிநெறி மன்றமும் இணைந்து ‘’தமிழ்ஞாயிறு’’ என்னும் விருது அளித்தன. பாரிட் புந்தர் தமிழ்மன்றம் ‘’வரலாற்று ஒளிஞாயிறு’’ எனப் பாராட்டி சிறப்பித்தது.
- 2002 ஆம் ஆண்டில் சிகாகோவிலுள்ள அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, பாவாணர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுத் சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்தது. 'சிந்துவெளி முத்திரைகளில் உள்ள எழுத்து தமிழே' என்றும், தென்னாட்டிலிருந்து சிந்து வெளி நாகரிகம் வடநாட்டிலும் பாகித்தானத்திலும் ஆபகானித்தானத்திலும் பரவியது. சிந்துவெளி எழுத்துகள் இந்தியப் பிற மாநில ஒதுக்குப் புறங்களிலும் தென்னாட்டு மக்களின் அன்றாட வாழ்விலும் புழக்கத்தில் உள்ளன. மலைக்குகைகளிலும் பாறை ஓவியங்களிலும் சிந்துவெளி எழுத்துகள் தென்னாட்டில் உள்ளன எனும் உண்மைகளை தன் ஆங்கில நூல்கள் வெளிப்படுத்தியதால் ‘’ பேருண்மையாளர்’’ என்னும் பட்டயமும் விருதும் வழங்கிச் சிறப்பித்தது. அட்லாண்டா, பிளோரிடா, கலிபோர்னியா, தமிழ் மன்றங்களும் பாராட்டிப் பெருமைப்படுத்தின.
ஆய்வும் கண்டுபிடிப்புகளும்
- தொல்காப்பியம் அரங்கேற்றிய ஆண்டு கி.மு.835
- சிந்துவெளி முத்திரைகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட்டுள்ளன.
- சிந்துவெளி நாகரிகம் தமிழர்களால் தென்னாட்டிலிருந்து வடநாட்டில் பரப்பப்பட்டது.
- சிந்துவெளி எழுத்து இரண்டாம் தமிழ்க் கழகக் காலத்து எழுத்துமுறை. முதல் தமிழ்க் கழகக் காலத்தில் பட எழுத்து நிலவியது எனத் தெரிகிறது.
- பிராமி எனப்படும் எழுத்துமுறை மூன்றாம் தமிழ்க் கழகக் காலத்தில் சிந்துவெளி எழுத்தை மாற்றியமைத்த தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட புதிய எழுத்துமுறை ஆகும். பாலி, பிராகிருதம், திபெத்தியம் ஆகிய வட இந்திய மொழியினரும் இந்தத் தமிழ் எழுத்து முறையை அக்கால இந்திய மொழிகளுக்கு பொது எழுத்து முறையாக ஆண்டுவந்தனர். பிராமி என்பது அண்மைக் காலத்தில் இடப்பட்ட புதியபெயர்.
- நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை கி.மு. 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட சேரனின் பெயர் அதியஞ்சேரல்.
- சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் குமரி முதல் இமயம் வரை வாழும் கல்லாத மக்களிடையில் இன்றும் அடையாளக் குறியீடுகளாக ஆளப்பட்டு வருகின்றன. இவை சிந்துவெளி நாகரீகக் காலத்து எழுத்து முறை என்பது அவர்களுக்கு தெரியாது.
- வடக்கு இந்திய தாய் மொழிகளுக்கு மூலத்தாய் மொழி தமிழே.
- பரதநாட்டியக் கலையின் தந்தை அவிநயர்
- 2000 ஆண்டுகளுக்கு முந்தய கிரேக்க நாடகத்தில் 22 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன.
- அன்றில் பறவை இன்றும் வாழ்கிறது.[13][14][15].[16]
இயற்றிய நூல்கள்
- குளிர்காவிரி-1969
- எல்லைப்போர் வில்லுப்பாட்டு-1966
- ஒரு பூமாலையின் பாமாலை-2006
- குறள் அறிமுகம்-1978
- குறள்வழி பிராகிருத இலக்கிய இன்பம்-1978
- திருக்குறள் தேனமுதம்-2005
- பாவாணார் ஆய்வு நெறி-1990
- Language Archaeology-2002
- சொல் என்ன சொல்கிறது-2003
- சொல்லாய்வுக் கட்டுரைகள் 2- 2005
- பாவாணாரின் ஞால முதன் மொழிக் கொள்கை-2006
- தமிழ் வளர்ச்சி-1978
- Quotations on Tamil and Tamil Culture-1981
- கன்னடம் மூலம் ஆங்கிலம் கற்க-1997
- தமிழாய்வில் கண்ட உண்மைகள்-2005
- இலெமூரியா முதல் அரப்பா வரை-1977
- கடல்கொண்ட தென்னாடு முதல் சிந்துவெளி வரை-2001
- உலக நாகரிகத்துக்குத் தமிழரின் கொடை
- நாவினில் நற்றமிழ்
- சாதிகளின் பொய்த்தோற்றம்
- அகர முதலி (செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி, தமிழக அரசு. 6 தொகுதிகள் )-1986-2001
- அயல்சொல் கையேடு-1996
- ஆந்திர நாட்டு அகநானூறு (காதா சப்தசதி)-1979
- சிவகோட்டாச்சாரியரின் நல்லறக் கதைகள் (சமண பெரியபுராணம்)-1978
- கிரேக்க நாடகத்தில் தமிழ் உரையாடல்-1978
- பி.எம்,சீகண்டையா - 1979
- டி. பி. கைலாசம் – 1990
- சங்கர குருப்பு-1998
- அபிநவகுப்தர்-
- தொல்காப்பியர் காலம்
- சிலம்பின் காலக்கணிப்பு
- கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும்-2005
- சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி
- Indus Script Dravidian-1995
- Indus Script Among Dravidian Speakers-1995
- Indus Dravidian Civilization
- Phonetic Value of the Indus Script-1995
- திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துகள்-2004
- சிந்துவெளி எழுத்தின் திறவு-1991
- தருமபுரி மாவட்டப் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள்-2002
- நாடகம்[17][18][19][20][21][22]
மேற்கோள்கள்
- பாவாணரும் செல்லாராய்ச்சியும்-தமிழ்த்திரு. இரா. மதிவாணன் மேனாள் அகரிமுதலித்திட்ட இயக்குனர், சென்னை
- பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா?
- சொல்லாய்வுக் கட்டுரைகள் / இரா. மதிவாணன்.
- செம்மொழி ஆக ஆசைப்படும் கன்னடமும் தெலுங்கும் - பேராசிரியர் இரா. மதிவாணன
- பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா? பேராசிரியர். இரா.மதிவாணன்
- தமிழும் திரவிட மொழிகளும்-பேராசிரியர் இரா. மதிவாணன்
- பிராகிருத மொழி
- மேலை நாகரிகங்களில் தடம் பதித்த தமிழ்
- உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எம் மொழி!!-பாவாணர் தொடங்கிய இத்திட்டம். பேராசிரியர் இரா.மதிவாணன் தலைமையில் இப்போது முழுமை பெற்றுள்ளது.
- அகரமுதலித் திட்டம் (Tamil etymological Dictionary project)
- மேலை எழுத்தும் தமிழ் எழுத்தும் – ஓர் இயலுமைத் தொடர்பு (பாகம்2)- கட்டுரை
- உலகில் அதிக சொற்களை கொண்ட மொழி எது தெரியுமா ?
- பாவாணரால் தொடங்கப்பட்டு பேராசிரியர் இரா. மதிவாணன் என்பவரின் தலைமையில் முழுமை பெற்றுள்ளது.
- மொழிஞாயிறு பாவாணர் இறுதிப் பேருரை இரா.மதிவாணன் உரை
- புத்தகங்களுக்குத் தமிழியலில் வெளியான மதிப்புரைகள்
- தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள்
- திரவிட மக்களின் சிந்துவெளி எழுத்துக்கள்
- கடைக் கழக நூல்களின் காலமும் கருத்தும்
- தமிழர் வரலாற்றில் புதிய பார்வைகள்