ரவி கண்ணன்

ரவிந்திரன் கண்ணன் (Ravindran Kannan) மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளராவார். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணையாசிரியரும் ஆவார். கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT) எனப்படும் படிமுறைத்தீர்வுகளும் கணியியலும் சிறப்பு ஆர்வலர் குழுவின் 2011 ஆண்டுக்கான கெநூத் பரிசிற்கு தெரிந்தெடுக்கப்பட்டார்.[1]

ரவி கண்ணன் தனது பொறியியல் பட்டப்படிப்பை (பி. டெக்) இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பையிலும் முனைவர் பட்ட மேற்படிப்பை கார்னெல் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.

இவரது முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று புரோபெனியசு சிக்கலுக்கான தீர்வாகும். பணத்தின் குறிப்பிட்ட வெவ்வேறு மதிப்புகள் கொண்ட தாள்களும் நாணயங்களும் இருக்கையில் இவற்றைக் கொண்டு கூட்ட முடியாத தொகைகளில் பெரிய தொகை எவ்வளவு என்பதை விரைவாகக் கணிக்கும் முறையை இவர் கண்டறிந்தார். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் ஐந்து உருவாவும் மூன்று உருவாவும் மட்டுமே புழக்கத்தில் உள்ளது என வைத்துக் கொண்டால், அங்கே ஏழு உருவாவுக்கு எந்த வணிகமும் செய்ய முடியாது. இவரது தீர்வுமுறையின் விளைவாக எண்கணித நிரலாக்கத்திலும் அளவாக்கி நீக்கமுறையிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்பட்டன.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.