அருச்சுனன்

அருச்சுனன் அல்லது அர்ஜூனன் மகாபாரதக் காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவன். இவன் பஞ்ச பாண்டவர்களில் மூன்றாமவன். கிருஷ்ணரின் நண்பன். சிறந்த வில் வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு குருவான துரோணரின் முதன்மையான சீடன். பகவத் கீதையானது, குருட்சேத்திரப் போரின் முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.

அருச்சுனன்
ஸ்ரீகிருஷ்ணரை பிரபாச பட்டினத்தில் அருச்சுனன் சந்தித்தல்
தேவநாகரிअर्जुन
துணைதிரௌபதி, சுபத்திரை, உலுப்பி, சித்திராங்கதை.
பெற்றோர்கள்பாண்டு - தந்தை குந்தி - தாய்
சகோதரன்/சகோதரிதருமன், வீமன், நகுலன், சகாதேவன்
குழந்தைகள்உபபாண்டவர்கள்#சுருதகர்மா, அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன்

அருச்சுனனின் குடும்பம்

அருச்சுனனுக்கு திரெளபதி தவிர சுபத்திரை, உலுப்பி மற்றும் சித்திராங்கதை எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த அபிமன்யு, அரவான் மற்றும் பாப்ருவாஹனன் எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.

வில்லாளன்

குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றைச் செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான். பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. துரோணர் கதறினார். அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து பிரசிரஸ் என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்[1].

குரு தட்சனை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குரு குல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று, அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.

பின்னர் பாண்டவர்களில் அருச்சுனன் பாஞ்சாலம் சென்று துருபதனுடன் போரிட்டு வென்று, தேர்ச்சக்கரத்தில் கட்டி, குரு துரோணாச்சாரி முன்பு கிடத்தி, அதன் வாயிலாக குரு தட்சணையைச் சமர்ப்பித்தான்.

அருச்சுனனின் அடைமொழிப் பெயர்கள்

விராட பருவத்தில், அருச்சுனன் உத்தரனிடம் தனது பத்து சிறப்புப் பெயர்களை அதற்கான காரணத்துடன் கூறுகிறான்.

  • பார்த்திபன்
  • தனஞ்சயன்: தான் வெற்ற எதிரி நாட்டு செல்வங்களால் நிரம்பிப் பெற்றவனாக நான் இருந்ததால், தனஞ்சயன் என்று அழைக்கிறார்கள்.
  • விஜயன்: எதிர்களை வீழ்த்தாமல் போர்க்களத்தை விட்டு நான் திரும்பியதில்லை என்பதால், விஜயன் என்று அழைக்கிறார்கள்.
  • சுவேதவாகனன்: எதிரிகளுடன் போரிடும்போது, எனது தேரில், தங்கக் கவசம் பூண்ட வெள்ளைக் குதிரைகளையே நான் பூட்டுவதால், சுவேதவாகனன் என்று அழைக்கிறார்கள்.
  • பல்குனன்: பங்குனி மாதம், உத்திரம் நட்சத்திர நாளில் நான் பிறந்ததால் பல்குனன் என்று அழைக்கிறார்கள்.
  • கிரீடி: ஒரு முறை தேவர்களின் எதிரிகளான அசுரர்களை வென்றமையால், ஒரு கிரீடத்தை இந்திரன் எனது தலையில் சூட்டியதால், கிரீடி என்று பெயர் பெற்றேன்.
  • பீபத்சு: போர்க்களத்தில் இதுவரை வெறுக்கத்தக்க எந்தச் செயலையும் நான் செய்யாததால், பீபத்சு என்று அறியப்படுகிறேன்.
  • சவ்யசச்சின்: காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் அம்புகளை செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன் என்பதால் சவ்யசச்சின் (சவ்யசாசி) என்று அறியப்படுகிறேன்.
  • அர்ஜுனன்: எனது செயல்கள் எப்போதும் களங்கமற்றவையாக இருப்பதாலும் என்னை அர்ஜுனன் என்று அழைக்கிறார்கள்.
  • ஜிஷ்ணு: அடக்கப்பட முடியாதவனாகவும், எதிரிகளை அடக்குபவனாகவும், இந்திரனின் மகனாகவும் இருப்பதால்நான் ஜிஷ்ணு என்ற பெயரால் அறியப்படுகிறேன்.
  • கிருஷ்ணன்: எனது பத்தாவது பட்டப்பெயரான கிருஷ்ணன் என்பது, கரிய நிறத் தோல் கொண்ட என் மீது பாசம் கொண்ட எனது தந்தை (பாண்டுவால்) எனக்கு வழங்கப்பட்டதாகும். [2]

பகவத் கீதை உபதேசம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர், குருசேத்திரப் போர்க்களத்தில் மனம் தளர்ந்த அருச்சுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்து மனத்தெளிவு பெறச் செய்து போரிடுவது அருச்சுனனின் கடமை என்றும், பிறப்பின் ரகசியத்தையும் உபதேசித்து போரில் ஈடுபடச்செய்தார்.

குருசேத்திரப் போரில் அருச்சுனன் பங்கு

குருச்சேத்திரப் போரில் அருச்சுனன், பகவான் கிருஷ்ணரின் உதவியால் பீஷ்மர், சுசர்மன், ஜயத்திரதன் மற்றும் கர்ணன் போன்ற மாவீரர்களை அழித்ததின் மூலம் கௌரவர் படைகள் தோற்றது.

மேற்கோள்கள்

  1. வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்
  2. http://mahabharatham.arasan.info/p/blog-page_8070.html#sthash.fAFuh81d.dpuf

வெளி இணைப்பு

சான்றாவணம்


    பஞ்ச பாண்டவர்கள்
    தருமன் | பீமன் | அருச்சுனன் | நகுலன் | சகாதேவன்
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.