யாளி

யாளி என்பது தமிழ் கோயில்களில் காணப்படும் ஒரு தொன்ம உயிரினச் சிற்பமாகும். இதை வியாழம், என்றும் அழைக்கிறார்கள். இவற்றைப் பொதுவாக தமிழ் கோயில்களின் தூண்களில் காணலாம். தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளி யானையைத் தாக்குவது போன்று உள்ளதைச் சிற்பங்களில் காணலாம்.

யாளி மற்றும் குதிரை வீரன்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் உற்சவர் சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைத்த வாகனங்களில் வருவது வழக்கம்.

சங்க இலக்கியங்களில் யாளி

இள நாகனார் பாடிய நற்றிணைப் பாடல் ஒன்று யாளி விலங்கினை ஆளி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. அது காட்டில் வாழும் விலங்கு என்றும், அது புலியைக் கொல்லும் என்றும், யானையை அது தன் நகங்களால் பற்றி இழுக்கும் என்றும் அதன் ஆற்றலை விளக்குகிறது. [1] [2] இது அன்றில் பறவை போலவும், அனிச்சம் செடியினம் போலவும் வாழ்ந்து மறைந்துபோன உயிரினம் ஆகும்.

யாளியின் வரலாறு

சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவூட்டும் உறுப்புடன் காணப்படும் யாளி, இந்தியாவில் கி. மு. 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்துக்கு வந்தது. கி. பி. 800களில் தமிழ்நாட்டின் கோயில் கட்டுமானம் செங்கற்களுக்குப் பதிலாக கருங்கற்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. முதன்முதலாக பராந்தக சோழன், ஆதித்த சோழன் காலத்தில் கோயில்களைக் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டினார்கள். இதனைக் கற்றளி என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்ற இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப நூல்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யாளி சிற்பம்

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம் (சிம்மம்), ஆடுகளின் (மகரம்) தலைகளையும், அரிதாக நாய் [3], எலி [4] போன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

  • சிம்ம யாளி
  • மகர யாளி
  • யானை யாளி

சுருள்யாளி என்பது ஒரு சிற்ப அலங்காரக் குறியீடு ஆகும். தென்னிந்திய இந்து கோவில்களின் கைப்பிடிசுவரில் இந்த அமைப்பு செதுக்கப்பட்டு இருக்கும். தலை திரும்பிய யாளி உருவத்தின் வாய்ப்புறத்திலிருந்து வளைவளைவாக செல்லும் கல் அலங்கார வளைவுகளை கொண்டிருக்கும் யாளி உருவை சுருள்யாளி என்பர். குறிப்பாக கல்மண்டபப் படிகளின் சுவர்களில் இவற்றைக் காணலாம்.

ஆதாரங்கள்

  1. அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து,
    ஆளி நன் மான், வேட்டு எழு கோள் உகிர்ப்
    பூம் பொறி உழுவை தொலைச்சிய, வைந் நுதி
    ஏந்து வெண் கோட்டு, வயக் களிறு இழுக்கும்
    துன் அருங் கானம் - நற்றிணை 205

  2. ஆனை = யானை, ஆளி = யாளி
  3. Dog-headed Yali, Kulikka Mandapa, Meenakshi Temple
  4. Rat-headed Yali, Krishna Temple, Vijayanagara

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.