நாய்

நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும். இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது. இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 [1] ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 [2][3] ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

வீட்டு நாய்
புதைப்படிவ காலம்:Late Pleistocene - Recent
இராசபாளையம் நாய்
உயிரியல் வகைப்பாடு
உலகம்: யூக்கார்யோட்டா
[நல்லுயிர் (அல்) பாவுயிர்]
(Eukaryota)
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: நாய்ப் பேரினம்
பேரினம்: நாயினம்
கேனிசு (Canis)
இனம்: சாம்பல் ஓநாய்
கேனிசு லூப்பஸ்
(C. lupus)
துணையினம்: C. l. familiaris
மூவுறுப்புப் பெயர்
Canis lupus familiaris
(லின்னேயசு, 1758)
தமிழகத்திலிருக்கும் ஒரு நாய்
நாய்: சிறியது+பெரியது

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது. நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன. சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.

பெயர்களும், வகையும்

நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டே திரிவதால் 'நாய்' என்னும் பெயர் தமிழில் தோன்றியது.[4] ஞாளி, ஞமலி என்பன நாயைக் குறிக்கும் சங்ககாலத் தமிழ்த் திசைச்சொற்கள்.[5]

அவற்றில் சில குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிக்கும். சிவிங்கி நாய் என்பது வேகமாய் ஒடக்கூடிய ஒல்லியாய் உயரமாய் கழுத்து நீண்ட நாய், சடை நாய் என்பது உடலில் எங்கும் நிறைய முடி உள்ள நாய். இதே போல ஞாளி,[6] எகினம், கடிநாய், அக்கன், அசுழம், குக்கர்,[7] கூரன், கொக்கு, செந்நாய், ஞமலி, ஞெள்ளை, முலவை, முவ்வை, மடிநாய், குடத்தி நாய், குக்குரன், கடுவாய், வடி, வங்கு, தோல்நாய், நயக்கன், தோனாய் (தோல்நாய்), பாகி, பாசி, முடுவல் என பல பெயர்கள் உள்ளன. இவற்றில் தோல்நாய் என்பது வேட்டை நாய் வகையச் சேர்ந்தது. வங்கு என்பது புள்ளியுடைய நாய் (டால்மேசன் என்னும் வகையைப்போல). (இப்பெயர் கழுதைப்புலி என வழங்கும் புள்ளி கொண்ட காட்டில் வாழும் கொடிய விலங்கையும் குறிக்கும்.)

அறிவுத்திறன்

நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு. மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை. நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள். நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது. நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர். ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

நாய்களின் வாழ்க்கை, இனப்பெருக்கம்

நாய்களின் வாழ்நாள் சுமார் 7 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். இது பெரும்பாலும் நாயினத்தின் வகையும், வளர்ப்பு நிலைகளையும் பொருத்தது.

பாகுபாட்டியல்

உயிரியல் பாகுபாட்டியலின் தந்தை எனப்போற்றப்படும் கரோலசு இலின்னேயசு அவர் காலத்தில் அவருக்குத் தெரிந்த "நான்கு கால்கள்" கொண்டவை ("quadruped") என்னும் வகைப்பாட்டில் உள்ள விலங்குகளில் நாய்க்கு இலத்தீன் பெயராகிய canis என்பதை 1753 இல் குறிப்பிட்டிருந்தார். இந்தப் பேரினத்தில் நரி என்பதை Canis vulpes என்றும், ஓநாய் என்பதை Canis lupus என்றும் குறிப்பிட்டிருந்தார் இலின்னேயசு. வீட்டில் வளர்க்கும் நாயை Canis canis என்று குறிப்பிட்டிருந்தார்.

பின் வந்த பதிப்புகளில் இலின்னேயசு இந்த Canis canis என்பதை நீக்கிவிட்டார், ஆனால் "நான்குகால்கள்" ("quadruped") விலங்குகளின் குழுவில் Canis என்னும் பேரினத்தை விரிவாக்கினார்; 1758 ஆம் ஆண்டு வாக்கில் நரிகள், ஓநாய்கள், குள்ள நரிகளோடு பலவற்றையும் சேர்த்திருந்தார், அவற்றுள் மயிர் இல்லாத aegyptius (தோல்நாய்கள்), aquaticus எனப்படும் "நீர்மீட்பு நாய்கள்", mustelinus எனப்படும் "குட்டைக்கால் நாய்கள்" அல்லது "பேட்சர் என்னும் விலங்கைப் பிடிக்கும் நாய்கள்" என்பனவற்றையும் சேர்த்திருந்தார். இப்பெயர்களுள் Canis domesticus என்று அழைக்கப்படும் வீட்டு நாய் (கொல்லைப்படுத்தப்பட்ட நாய்) என்பதும், Canis familiaris, நன்கு அறியப்பட்ட நாய் என்பதும் ஆகிய இவ்விரண்டு பெயர்களையும் பின்னர் வந்த துறைவல்லுநர்கள் பயன்படுத்தினர்.[8]

வீட்டுநாய் அல்லது பழக்கப்படுத்தப் பட்ட, கொல்லைப்படுத்தப்பட்ட நாய் என்பது தனி இனம் என்பது உறுதியாகியுள்ளது; அதன் பழக்கவழக்கங்களையும், குரைத்தல் போன்ற குரல் வெளிப்பாடுகளையும், உருவ அமைப்பு, மூலக்கூற்று உயிரியல் வகைப்பாடு போன்ற பல கூறுகளைக் கண்டபோது தற்கால அறிவியலில் அடிப்படையில் இவ்விலங்கு ஒரு தனி இனம் என்னும் கருத்து வலுப்பெற்றுள்ளது. இந்த இனம் காட்டுவிலங்காகிய சாம்பல் ஓநாய் (gray wolf) என்னும் ஒரு விலங்கினத்தில் இருந்தே பற்பல வளர்ப்புநாய் இனங்களாகப் பிரிந்து பல்கிப் பெருகியது என்று கண்டுபிடித்துள்ளனர்.[9][10] இக்கண்டுபிடிப்புகளின் பயனாய் 1993 இல் வீட்டு நாயை சாம்பல்நிற ஓநாயின் துணை இனமாக, Canis lupus familiaris (கானிசு இலூப்பசு பெமீலியாரிசு) என்னும் பெயரில் வழங்குமாறு அமெரிக்கப் பாலூட்டியியல் அறிஞர்கள் குழுமமும் (American Society of Mammalogists) சுமித்துசோன் கழகமும் (Smithsonian Institution) வகைப்படுத்தியுள்ளார்கள். இப்பெயரையே ஒருமித்த வகைப்பாட்டியல் தகவல் ஒருங்கியம் (Integrated Taxonomic Information System) என்னும் நிறுவனமும் பரிந்துரைக்கின்றது, எனினும் பழைய பெயராகிய கானிசு பெமிலியாரிசு (Canis familiaris) என்பதும் ஈடான ஒருபொருள் பன்மொழிப் பெயராகக் கொள்ளப்படுகின்றது[11]

வரலாறும் பரிணாமமும்

மனிதருடனான பாத்திரம்

RAJAPALAYAM DOG

இந்திய நாய்கள் மிக முக்கியதுவம் வாய்ந்தவை(ராஜபாளையம்/கன்னி/கோம்பை/அலங்கு)

உயிரியல்

நுண்ணறிவு மற்றும் நடத்தை

ஓநாயிலிருந்து வேறுபாடு

ஒரே அளவுள்ள நாயையும் ஓநாயையும் ஒப்பிட்டால் நாயின் மண்டையோடு 20% சிறியது, மூளை 30% சிறியதாகும் [12]. மற்ற நாய் பேரினங்களை விட விகிதப்படி நாயின் பற்கள் சிறியதாகும் [13]. நாய் செயல்பட ஓநாய் அளவு கலோரி தேவையில்லை[13] . ஓநாயின் தோல் மெல்லியதாகும் வீட்டு நாயின் தோல் தடிமனனானது ஆகும். இதனால் சில இனுவிட்டு மக்கள் நாயின் தோலை கடும் குளிரிலிருந்து காக்க ஆடையாக பயன்படுத்துகிறார்கள்[13] .

தொன்மவியல்

நாயுடன் பைரவர்

தொன்மங்களில் நாய் வளர்ப்பு விலங்காகவும் காவல் விலங்காகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது [14]. கிரேக்க தொன்மத்தில் செர்பெரஸ் என்பது ஏடிசு நகர வாயிலை காக்கும் மூன்று தலையுடைய நாய் ஆகும்[14]. நோர்சு தொன்மவியலில் கார்ம் என்பது நான்கு கண்களுடன் கூடிய இரத்தகறை படிந்த காவல் நாய் ஆகும்[14]. பாரசீக தொன்மத்தில் சின்வாட் பாலத்தை இரண்டு நான்கு கண்கள் உடைய நாய்கள் காப்பதாக உள்ளது[14]. யூத, இசுலாம் சமயங்களில் நாய் தூய்மையற்ற விலங்காக பார்க்கப்படுகிறது[14]. கிறித்துவத்தில் நாய் நம்பிக்கைக்குரியதாக பார்க்கப்படுகிறது[14]. சீனா, கொரியா, நிப்பான் போன்ற நாடுகளில் நாய் அரசனின் பாதுகாவலாளியாக கருதப்படுகிறது[14].

இந்து சமயத்தில், கிராமத்துக் காவற்தெய்வமாக வணக்கப்படும் பைரவர் என்ற தெய்வத்தின் வாகனமாக நாய் உள்ளது. இதனால் சிலர் நாயை பைரவர் என்று அழைப்பதும் உண்டு.

இலக்கியங்களில் நாய்

நாலடியாரில் நாய்

நாலடியாரில் நாயானது நன்றியுள்ள மிருகமாகவும், நல்லவர்களின் நட்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.[15]

மகாவம்சத்தில் நாய்

இலங்கையில் காலத்தால் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றுக்கிணங்க விசயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணிக்கு (இன்றைய இலங்கையின் மன்னார் பகுதி) வந்தடைந்த பொழுது ஒரு பெண்ணை (யாக்கினி) கண்டதாகவும், அவளை பின் தொடர்ந்து விசயனின் நண்பர்கள் ஒவ்வொருவராக சென்றவிடத்தில் ஒரு கிராமமும் அங்கே நாயும் இருந்ததாக கூறப்படுகிறது. அது இலங்கையில் விசயனின் வருகைக்கு முன்னரே நாயை வீட்டு வளர்ப்பு மிருகமாக வளர்த்துள்ளமையை மகாவம்சம் காட்டுகிறது.[16]

சான்றுகள்

  1. McGourty, Christine (2002-11-22). "Origin of dogs traced". பிபிசி. http://news.bbc.co.uk/2/hi/science/nature/2498669.stm. பார்த்த நாள்: 2007-11-27.
  2. Vilà, C. et al. (1997). Multiple and ancient origins of the domestic dog. Science 276:1687–1689. (Also "Multiple and Ancient Origins of the Domestic Dog")
  3. Lindblad-Toh, K, et al. (2005) Genome sequence, comparative analysis and haplotype structure of the domestic dog. Nature 438, 803–819.
  4. ஒப்புநோக்குக: நா < நாய், நா < நாவாய், நாக்கு போல் நீரில் மிதக்கும் தமிழரின் நாவாய்க்கப்பல்
  5. இளையர் துஞ்சின் வை எயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும், அரவாய் ஞமலி மகிழாது மடியின் ... நிலவு கான்றும் ... பல் முட்டின்றால் தோழி நம் களவே - அகநானூறு 122
  6. திரிகூடராசப்பக் கவிராயர்; புலியூர்க்கேசிகன் (தெளிவுரை) (2007). திருக்குற்றாலக்குறவஞ்சி. சென்னை: பாரி நிலையம். பக். 128. "ஞாளிபோல் சுவடெடுத்துப் பூனைபோல்..."
  7. Starostin, George; Sergei Starostin. "Dravidian etymology : List with all references". The Proto-Dravidian database. The Tower of Babel. பார்த்த நாள் 2007-11-27.
  8. கரோலஸ் லின்னேயஸ் (1758). Systema naturae per regna tria naturae:secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis.. 1 (10th ). Holmiae (Laurentii Salvii). பக். 38. http://www.biodiversitylibrary.org/page/726931. பார்த்த நாள்: 8 September 2008..
  9. Serpell, James (1995). The domestic dog: its evolution, behaviour, and interactions with people. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-42537-9.
  10. "ITIS Standard Report Page: Canis familiarus domesticus". Itis.gov. பார்த்த நாள் 2010-12-21.
  11. "ITIS Report: Canis lupus familiaris". ITIS Data. Integrated Taxonomic Information System. பார்த்த நாள் 16 April 2010.
  12. Serpell, James (1995). The Domestic Dog; its evolution, behaviour and interactions with people. Cambridge: Cambridge Univ. Press. பக். 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-42537-9.
  13. Coppinger, Ray (2001). Dogs: a Startling New Understanding of Canine Origin, Behavior and Evolution. New York: Scribner. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-684-85530-5.
  14. Sherman, Josepha (August 2008). Storytelling: An Encyclopedia of Mythology and Folklore. Sharpe Reference. பக். 118–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7656-8047-1.
  15. மெய்யதாய் வால் குழைக்கும் நாய். SriLanka education publication Department.
  16. விஜயனின் வருகையும் அங்கே கிராமமும் நாயும்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

    வெளியிணைப்புக்கள்

    விக்கியினங்களில் நாய் பற்றிய தரவுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.