மனித உடல் தொகுதிகள்

மனித உடலானது, ஒன்றுடனொன்று தொடர்புபட்டு இடைவினையாற்றும் பல உடல் தொகுதிகளைக் கொண்டுள்ளது. வெவ்வேறு உடல் தொகுதிகள், வேறுபட்ட உடற்கூற்று அமைப்புக்களைக் கொண்டிருந்தாலும், உடலியங்கியல் ரீதியில் மிகவும் நெருங்கிய தொடர்புகொண்டு, ஒன்றுடனொன்று இணைந்து செயலாற்றுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு தொகுதியும் தனக்கான தனிப்பட்ட தொழில்களையும், நோக்கங்களையும் கொண்டு செயல்படுவதற்கேற்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன.

மனித உடல் தொகுதிகளில் ஒன்றான சிறுநீர்த் தொகுதி (கழிவுத் தொகுதி)யின் வெவ்வேறு படிநிலைகளைக் காட்டும் படம்

அணுக்களே உயிரினங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த மிகவும் அடிப்படையான நிலையாகும். இரண்டுக்கு மேற்பட்ட அணுக்களுக்கிடையிலான இடைத் தொடர்பினால் மூலக்கூறுகள் உருவாகும். இவ்வாறு பல மூலக்கூறுகள் ஒன்றுபட்டு, உயிரணுக்களில் உள்ள நுண்ணுறுப்புக்களை உருவாக்கும். நுண்ணுறுப்புக்கள் அனைத்தும் சேர்ந்தே, உயிருள்ள ஒரு தொழிற்படும் உயிரணுவைக் கொடுக்கின்றது. இந்த நுண்ணுறுப்புக்கள் உயிரணுக்களில் வெவ்வேறு தொழில்களைப் புரிவதற்காக விருத்தியடைந்திருக்கும்.

உயிரினங்களில், உயிரணுக்களே அடிப்படை அலகாகும். விலங்குகளின் உடற்கூற்றியலில் உயிரணுக்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல படிநிலைகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு படிநிலையும் மேலே செல்லச் செல்ல, முன்னையதை விடச் சிக்கலானதாக அமைகின்றது. ஒரே அமைப்பையும், தொழிலையும் கொண்ட உயிரணுக்கள் கூட்டாகச் சேர்ந்து இழையத்தை (எ.கா. நரம்பிழையம், தசையிழையம்) உருவாக்குகின்றன. இழையத்திலுள்ள உயிரணுக்கள் இணைந்து குறிப்பிட்ட செயலைப் புரிகின்றன. வெவ்வேறு இழையங்கள் ஒரு குறிப்பிட்ட விசேடமான செயலைப் புரிவதற்காகக் கூட்டாக இணைந்து உறுப்புக்களைத் (எ.கா. மூளை, இதயம், தோல்) தோற்றுவிக்கின்றன. பல உறுப்புக்கள் ஒன்றாக இணைந்து விசேடமான தொழிலைப் புரிகின்றபோது, அது ஒரு உடல் தொகுதியாகக் கொள்ளப்படும்.

நரம்புத் தொகுதி

நரம்புத் தொகுதியானது மூளை மற்றும் முண்ணாணை க்கொண்ட மைய நரம்புத் தொகுதியையும், அதிலிருந்து செயற்படு உறுப்புக்களான தசை போன்ற உறுப்புக்களுக்குச் செல்லும் நரம்புகள், மற்றும் உணர் உறுப்புக்களிலிருந்து மையநரம்புத் தொகுதியை நோக்கிச் செல்லும் நரம்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய புற நரம்புத் தொகுதியையும் கொண்டதாக இருக்கும்.

இதில் மூளையே சிந்தனை, உணர்ச்சிகள், நினைவாற்றல் போன்றவற்றைக் கொண்டதாகவும், உணர்வு உறுப்புக்களின் தொழிற்பாட்டை செயற்படுத்துவதாகவும் இருக்கும் முக்கிய உறுப்பாகும். அத்துடன் எல்லா உடல் தொகுதிகளின் தொழிற்பாடுகளையும், அவற்றிற்கிடையிலான தொடர்பாடலையும் கட்டுப்படுத்துகின்றது.

உணர்வுத் தொகுதி

உணர்வுத் தொகுதியானது நரம்புத்தொகுதியுடன் இணைந்தே செயற்படுவதனால், சில இடங்களில், இது தனியான தொகுதியாகக் குறிப்பிடப்படாமல், நரம்புத் தொகுதியினுள்ளேயே சேர்க்கப்பட்டு நரம்புத் தொகுதியும் புலன் உறுப்புக்களும் (உணர் உறுப்புக்களும்) என்று பொதுப் பெயரில் குறிப்பிடப்படுகின்றது.

உணர்வுத் தொகுதியின் செயற்பாட்டினால் பார்வை, கேட்டல், சுவை, முகர்வுணர்வு, தொட்டுணர்வு, சமநிலை உணர்வு போன்ற உணர்வுச் செயற்பாடுகள் நிகழ்கின்றன. இச்செயற்பாடுகளுக்கான உறுப்புக்களாக முறையே கண், காது, நாக்கு, மூக்கு, தோல் என்ற உறுப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் தோலானது குளிர், வெப்பம், தொடுகை, வலி போன்றவற்றை உணரும் உறுப்பாக இருப்பதுடன் புறவுறைத் தொகுதியில் முக்கிய பங்காற்றும் உறுப்பாகவும் உள்ளது.

எலும்புக்கூட்டுத் தொகுதி

மனித எலும்புக்கூட்டுத் தொகுதியானது, முதிர்ந்த மனிதனில் 206 எலும்புகளைக் கொண்டிருப்பதுடன், முக்கியமான ஆறு தொழில்களைச் செய்கின்றது. அவையாவன:

தசைத் தொகுதி

தசைத் தொகுதியும், எலும்புக்கூட்டுத் தொகுதியும் தனித்தனியாக அறியப்பட்டாலும், அவற்றிற்கிடையிலான நெருக்கமான தொழிற்பாடுகள் காரணமாக சிலசமயம் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு தசை எலும்புத் தொகுதி என்ற பொதுப் பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. எலும்புத் தொகுதியுடன் இணைந்து உடல் அசைவுக்கு உதவுவதுடன், உடலின் அமைப்பையும் (structure), நிலையையும் (posture) சீராக வைக்கவும், தசைகளின் அசைவு மூலம் குருதியானது இதயத்திலிருந்து வெளியேற்றப்படவும், பின்னர் குருதிக்குழல்களூடாக உடலின் பல பாகங்களுக்கும் கடத்தப்படுவதற்கும் உதவுகின்றது.

பொதுவாக தசைத் தொகுதியிலுள்ள தசைகள் நரம்புத் தொகுதியினால் கட்டுப்படுத்தப்படுவதாக இருந்தாலும், இதயத்தசை போன்ற சில தசைகள் தன்னிச்சையாக இயங்கும் தசைகளாக உள்ளன.

குருதிச்சுற்றோட்டத் தொகுதி

சுற்றோட்டத் தொகுதியானது பல இடங்களில் இதயக்குழலியத் தொகுதி (Cardiovascular system) என்றும் அழைக்கப்படுகின்றது. இது முக்கிய உடல் உறுப்பான இதயத்துடன், தமனி, சிரை போன்ற குருதிக் கலன்களையும், அவை உடலின் பல பாகங்களுக்கும் சென்று ஒவ்வொரு உடல் உறுப்புக்களிலும் உள்ள இழையங்களுக்கு குருதியை வழங்குவதற்காக ஏற்பட்ட அமைப்பான மிகச் சிறிய மயிர்த்துளைக்குழாய்களையும் (Cappillaries) கொண்ட ஒரு தொகுதியாகும்.

உடலின் பல பாகங்களிலுமுள்ள உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், ஊட்டக்கூறுகள், இயக்குநீர்கள் போன்றவற்றை அவை தேவைப்படும் உயிரணுக்களுக்கு எடுத்துச் செல்லவும், அந்த உயிரணுக்களிலிருந்து பெறப்படும் காபனீரொக்சைட்டு, மற்றும் சில கழிவுப் பொருட்களை அவற்றை வெளியேற்றும் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் இந்தச் சுற்றோட்டத் தொகுதி பயன்படுகின்றது. உடல்வெப்பநிலை, ஒருசீர்த்திடநிலை என்பவற்றைப் பேணுவதிலும் இந்தச் சுற்றோட்டத் தொகுதி முக்கிய பங்காற்றுகின்றது. பிறபொருளெதிரிகள் போன்ற புரதப் பொருட்களையும் காவிச் செல்வதால், நோய்த்தொற்றில் இருந்து உடலைப் பாதுகாப்பதிலும் பங்கெடுக்கின்றது.

சமிபாட்டுத் தொகுதி

சமிபாட்டுத் தொகுதியானது, பல இடங்களில் இரையகக்குடற் தொகுதி எனவும் அழைக்கப்படுகின்றது. இது வாய், உணவுக்குழாய் (களம்), இரைப்பை, முன்சிறுகுடல், சிறுகுடல், பெருங்குடல், மலவாய் (குதம்) ஆகிய உறுப்புக்களை உள்ளடக்கிய நீண்ட குழல் வழியைக் கொண்டுள்ளது. இவற்றுடன் கல்லீரல், கணையம், பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற உறுப்புக்களும் இணைந்து தொழிற்படுகின்றன.

இந்த சமிபாட்டுத் தொகுதியானது உண்ணப்படும் உணவை சிறிய, ஊட்டச்சத்துள்ள, நச்சுத்தன்மை அற்ற மூலக்கூறுகளாக மாற்றி, அவற்றை குருதிச்சுற்றோட்டத் தொகுதி மூலம் உடலின் அனைத்துப் பகுதியிலுள்ள இழைங்களுக்கும் கடத்தி, அதன்மூலம் ஆற்றலை வழங்க உதவும். அத்துடன் மேலதிகமாக இருப்பவற்றைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்த உதவுவதுடன், பயன்படுத்தப்படாத கழிவுகளை அகற்றவும் உதவுகின்றது.

சுவாசத் தொகுதி

இந்த சுவாசத் தொகுதி அல்லது மூச்சுத் தொகுதியானது, மூக்கு, மேல் தொண்டை (நாசித் தொண்டை), மூச்சுக்குழாய், கிளை மூச்சுக்குழாய்கள், நுரையீரல் என்னும் சுவாசப் பாதையைக் கொண்டதாக இருக்கும். நுரையீரலில் இருக்கும் காற்று நுண்ணறைகளுக்கும், அங்கே இருக்கும் குருதி மயிர்க்குழாய்களுக்கும் இடையில் வளிமப் பரிமாற்றம் நிகழும். குறிப்பிட்ட சுவாசப் பாதையூடாக உள்மூச்சின்போது உடலினுள் செல்லும் வளி அதிகளவு ஆக்சிசனைக் கொண்டதாக இருக்கும். இதயத்திலிருந்து நுரையீரலுக்கு எடுத்து வரப்படும் குருதியில் காபனீரொக்சைட்டு அதிகளவில் இருக்கும். இதனால் பரவல் மூலம் ஆக்சிசன், காபனீரொக்சைட்டு ஆகிய இவ்விரண்டு கூறுகளும் பரிமாறிக் கொள்ளப்படும். பின்னர் ஆக்சிசன் அதிகளவிலுள்ள குருதியானது நுரையீரலில் இருந்து இதயத்துக்கு எடுத்துச் செல்லப்பட, காபனீரொக்சைட்டு கூடிய வளியானது வெளிமூச்சின்போது, உடலிலிருந்து வெளிச் சூழலுக்கு வெளியேற்றப்படும்.

மேற்கோள்கள்

  1. Lee, Na Kyung; Sowa, Hideaki; Hinoi, Eiichi; Ferron, Mathieu; Ahn, Jong Deok; Confavreux, Cyrille; Dacquin, Romain; Mee, Patrick J. et al. (2007). "Endocrine Regulation of Energy Metabolism by the Skeleton". Cell 130 (3): 456–69. doi:10.1016/j.cell.2007.05.047. பப்மெட்:17693256.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.