மூட்டு

மூட்டு (Joint) என்பது உடலில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகளும் தொடர்பு கொள்ளவும், எலும்புக்கூடமைப்பு ஒருங்கிணைந்து செயற்பட உதவும் இடமாகவும் உள்ளது[1][2][3]. வெவ்வேறு கோணங்களிலும், பல்வேறு வகையான அசைவுகளுக்கு ஏற்ற வண்ணம் இம்மூட்டுகள் அமைந்துள்ளன. கால், கை, தோள்பட்டைகளில் உள்ள மூட்டுகள் தானாக உயவூட்டுபவையாக உள்ளன. எனவே, இவை உராய்வற்று, அழுத்தத்தினைத் தாங்கக்கூடியவையாக, அதிகமான பளுவை ஏற்றும் மென்மையான, துல்லியமான அசைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகவும் உள்ளன[3]. பிற மூட்டுகளான, தலையிலுள்ள எலும்புகளுக்கிடையே அமைந்துள்ள முடிச்சுகள் மூளை மற்று உணர்வு உறுப்புகளை பாதுகாப்பதற்காக (பிறக்கும்போது நிகழும் அசைவினைத் தவிர்த்து) பிற அசைவுகளை அனுமதிப்பதில்லை[3]. பல்லுக்கும், தாடைக்கும் இடையேயுள்ள இணைப்பும் மூட்டு என்றே அழைக்கப்படுகிறது. இது ஆணிமூட்டு (gomphosis) எனப்படும் ஒருவகையான நார்மூட்டு ஆகும். அசைதலுக்கு இடமளிக்கும் வண்ணமும் (மண்டையோட்டெலும்புகளைத் தவிர்த்து), இயங்குவதற்கு ஆதரவளிக்கும் முறையிலும் அமைக்கப்பட்டுள்ள இம்மூட்டுகள் அமைப்பு மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன[4].

மூட்டு வரைபடம்
முள்ளெலும்பிடை வட்டின் (intervertebral disk) வரைபடம் (குருத்தெலும்பு மூட்டு)
நீர்ம மூட்டின் (synovial joint) வரைபடம் (சுழல்மூட்டு)

வகைப்பாடு

முதன்மையாக மூட்டுகள் வடிவம் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகின்றன. வடிவ வகைப்பாடுகள் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைந்துள்ளன என்பதைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. செயற்பாடுகளின் அடிப்படையில் வகைபடுத்தப்படுத்துவது அசையும் மூட்டுகளின் அசைவுகளைப் பொருத்து தீர்மானிக்கப்படுகின்றன. நடைமுறையில் கணிசமான அளவில் இரு வகைப்பாடுகளும் ஒன்றையொன்று தழுவியதாகவே உள்ளன.

மருத்துவம், எண்ணிக்கை அடிப்படையில் வகைப்பாடு

  • ஒற்றை மூட்டு - ஒரு மூட்டு
  • குறைந்தளவு மூட்டுகள் - இரண்டிலிருந்து நான்கு மூட்டுகள்
  • பலமூட்டுகள் - ஐந்து அல்லது அதற்கு அதிகமான மூட்டுகள்

வடிவ வகைப்பாடுகள்

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளன என்பதைப் பொருத்து வடிவ வகைப்பாடுகளின் பெயர்களும், பிரிவுகளும் அமைந்துள்ளன[1]. மூன்று வகையான வடிவ வகைப்பாடுகள் உள்ளன:[5]

  • நார்மூட்டு (en:Fibrous joint) - கொலாசன் இழைகளைக் கொண்ட, அடர்த்தியான, சீரான இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ளவை[6].
  • குருத்தெலும்பு மூட்டு (en:Cartilaginous joint) - கசியிழையத்தால் இணைந்துள்ளவை. இவை இரு வகைப்படும். பளிங்குக் கசியிழையம் (hyaline cartilage) கொண்டுள்ள முதன்மையானக் குருத்தெலும்பு மூட்டுகள். பளிங்குக் கசியிழையம் கொண்டுள்ள அசையும் எலும்புகளின் மேற்பரப்பை மூடியுள்ள, நார்க்கசியிழையத்தால் இணைந்துள்ள இரண்டாம்பட்சக் குருத்தெலும்பு மூட்டுகள்.
  • நீர்ம மூட்டு (en:Synovial joint) - நேரடியாக இணையாதவை - இத்தகு எலும்புகள் மூட்டுக்குழியினைக் கொண்டவை. அடைத்தியான ஒழுங்கற்ற இணைப்புத் திசுக்களால் இணைந்துள்ள, சாதாரணமாக துணைப் பிணைத்தசைகளைக் கொண்ட மூட்டு உறையினைக் கொண்டவை[6].
  • முகப்பு மூட்டு (en:Facet joint) - இரண்டு முள்ளெலும்புகளுக்கிடையேயுள்ள மூட்டுமுளைகளைப் பிணைப்பவை[7][8].

செயற்பாடுகளின் அடிப்படையில் வகைப்பாடுகள்

செயற்பாடுகளின் அடிப்படையில் மூட்டுகளின் வகைப்பாடுகள், அசையும் மூட்டுகளின் அசைவு வகைகளைப் பொருத்தும், அசைவுக்கோணங்களைப் பொருத்தும் தீர்மானிக்கப்படுகின்றன[1][9]. உடற்கூற்றமைப்புச் சார்ந்தத் தளத்தை அடைப்படையாகக் கொண்டு மூட்டு அசைவுகள் விவரிக்கப்படுகின்றன[3].

  • அசையா மூட்டுவாய் (synarthrosis) - அசைவுகளை பொதுவாக அனுமதிப்பதில்லை அல்லது மிக, மிகக் குறைவாக அனுமதிக்கிறது. பெரும்பாலான அசையா மூட்டுவாய்கள் நார்மூட்டுகளாகும் (உதாரணம்: தலையோட்டு முடிச்சுகள்)
  • இயங்கல்குறை மூட்டுகள் (amphiarthrosis) - சிறிதளவு அசைவுகளை அனுமதிக்கிறது. பெரும்பாலான இயங்கல்குறை மூட்டுகள் குருத்தெலும்பு மூட்டுகளாகும். (உதாரணம்: தண்டுவட எலும்புத் தட்டுகள்)
  • சுழல்மூட்டுகள் - தாரளமாக அசையக்கூடியவை[1][9]. இவை நீர்ம மூட்டுகளாகும். இவை எத்தகைய அசைவுகளை அனுமதிக்கின்றன என்பதைப் பொருத்து ஆறு குழுமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன: தகட்டுமூட்டு (plane joint), பந்துகிண்ணமூட்டு (ball and socket joint), கீல் மூட்டு (hinge joint), முளைமூட்டு (pivot joint)[10][11],முண்டனைய மூட்டு (condyloid joint), சேணமூட்டு (saddle joint)[12].

மேற்கோள்கள்

  1. Whiting, William Charles and RuggDynatomy, Stuart (2006) Dynamic Human Anatomy, Volume 10 p.40
  2. "Articulation definition". eMedicine Dictionary (30 October 2013). பார்த்த நாள் 18 November 2013.
  3. Saladin, Ken. Anatomy & Physiology. 7th ed. McGraw-Hill Connect. Web. p.274
  4. Ellis, Harold; Susan Standring; Gray, Henry David (2005). Gray's anatomy: the anatomical basis of clinical practice. St. Louis, Mo: Elsevier Churchill Livingstone. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-443-07168-3.
  5. "Introduction to Joints (3) – Joints – Classification by Tissue Joining Bones". anatomy.med.umich.edu. மூல முகவரியிலிருந்து 2011-06-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-01-29.
  6. Principles of Anatomy & Physiology, 12th Edition, Tortora & Derrickson, Pub: Wiley & Sons
  7. "Articular Facet". Medilexicon – Medical Dictionary. பார்த்த நாள் December 19, 2013.
  8. "Foundational Model of Anatomy". மூல முகவரியிலிருந்து December 19, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 19, 2013.
  9. "Introduction to Joints (2) – Joints – Classification by Movement". anatomy.med.umich.edu. மூல முகவரியிலிருந்து 2011-07-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-10-06.
  10. Samuel George Morton (1849) An Illustrated System of Human Anatomy p.119
  11. Henry Gray (1859) Anatomy, descriptive and surgical p.136
  12. Henry Gray (1887) Anatomy, descriptive and surgical p.220

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.