குருத்தெலும்பு

குருத்தெலும்பு அல்லது கசியிழையம் (cartilage) என்பது மனிதர், வேறு விலங்குகளின் உடலின் பல பகுதிகளிலும் காணப்படும், நெகிழ்வுத்தன்மை கொண்ட, வளையக்கூடிய ஒரு இணைப்பிழையம் ஆகும். இது மென்மையான எலும்பு போன்று இருக்கும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன விசேட இணைப்பிழையம் ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் அல்லது தாயம் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும்.

கசியிழையம்
Hyaline cartilage showing chondrocytes and organelles, lacunae and matrix
தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழலின் அருகே உள்ள தைராய்டு என்னும் தொண்டைச் சுரப்பிக் குருத்தெலும்பு படத்தில் காட்டப்பட்டுள்ளது.

சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பு (Thyroid cartilage) என்னும் தொண்டைச்சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும்.

கசியிழைய அமைப்பு

ஏனைய தொடுப்பிழையங்கள் போலவே கழியிழையத்திலும் தாயம் உள்ளது. இதன் விசேட இயல்புகள்:

  • தாயம் கொந்திரின் (Chondrin) எனும் ஜெலட்டின் போன்ற பல்லினப் பல்சக்கரைட்டால் ஆனது.
  • தாயம் பதார்த்தங்களுக்கு அதிக ஊடுபுகவிடுந்தன்மை உள்ளது. எனவே கசியிழையத்தினூடாகப் பதார்த்தப் பரவல் நன்றாக நடைபெறும்.
  • தாயத்தினூடாக குருதிக் கலன்கள் ஊடுருவிக் காணப்படாது.

கழியிழையத்தினைச் சூழ வெண்ணார்த் தொடுப்பிழையத்தினால் ஆன கசியிழையச் சுற்றி காணப்படும். கசியிழையச் சுற்றிக்கு அண்மித்ததாக அதிக குருதிக் கலன்களும் கசியிழைய அரும்பர் கலங்களும், நாரரும்பர் கலங்களும் உள்ளன. கசியிழைய அரும்பர் கசியிழைய வளர்ச்சியில் தாயத்தைச் சுரக்கும். பின்னர் அது கலனிடைக் குழியினுள தள்ளப்பட்டு கசியிழையக் குழியமாக மாற்றமடையும். கலனிடைக் குழியினுள் கசியிழையக் குழியங்கள் சோடியாகக் காணப்படுகின்றமை நுணுக்குக்காட்டியினூடு அவதானிக்கும் போது தென்படும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். கசியிழையத்தினுள் வெண்ணாரும் மஞ்சள் நாரும் காணப்படலாம். கசியிழையம் ஏனைய தொடுப்பிழையங்கள் போலவே இடைத்தோற்படை முளைய உற்பத்திக்குரிய இழையமாகும்.

வகைகள்

கசியிழையம்-நுணுக்குக் காட்டியில்

கசியிழையமானது அதில் உள்ள நார்களின் அடிப்படையில் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.

  • பளிங்குக் கசியிழையம்: இவ்வகைக் கசியிழையத்தில் நார்கள் மிக அரிதாகவே உள்ளன. இது பிரதானமாக உராய்வு நீக்கியாகத் தொழிற்படுகின்றது. இது மூட்டுக் கசியிழையமாக என்புகளிடையேயும், மார்புப் பட்டையுடன் விலா என்புகள் பொருந்தும் இடத்திலும், வாதனாளியில் C வடிவக் கசியிழையமாகவும் உள்ளது. இது மிதமான மீள்தன்மை இயல்புடைய, ஒளி ஊடுபுகவிடக்கூடிய கசியிழையமாகும்.
  • வெண்ணார்க் கசியிழையம்: இவ்வகைக் கசியிழையத்தின் தாயத்தில் அதிகளவான வெண்ணார்கள் உள்ளன. இது பொதுவாக அதிர்ச்சி உறிஞ்சியாகத் தொழிற்படுகின்றது. இது உறுதி கூடியதும், மீள்தன்மை இயல்பு குறைந்ததுமான கசியிழைய வகையாகும். இது முள்ளந்தண்டு என்புகளிடையே முள்ளந்தண்டென்பிடை வட்டத்தட்டாகவும், பூப்பென்பொட்டாகவும் உள்ளது.
  • மஞ்சள் நார்க் கசியிழையம்: இது அதிகளவான மஞ்சள் நார்களை உடைய கசியிழையமாகும். இது மீள்தன்மை, வளையும் தன்மை தேவைப்படும் இடங்களில் உள்ளது. இதனை வளைத்தால் விடுவிக்கும் போது மீண்டும் தன் பழைய நிலையை அடையக் கூடியது. இது மூக்கு நுனி, காதுச் சோணை, மூச்சுக்குழல் வாய் மூடி (Epiglottis) ஆகிய இடங்களில் உள்ளது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.