பி. ஸ்ரீநிவாச்சாரி

பி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ. (ஏப்ரல் 16, 1886அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக, உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக, சமயாச்சாரியராக, திறனாய்வாளராக இப்படி பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும் வழங்கப்படுகிறார்.

பி. ஸ்ரீநிவாச்சாரி

பிறப்பு பி.ஸ்ரீநிவாச்சாரி
ஏப்ரல் 16, 1886(1886-04-16)
தென் திருப்பேரை, தமிழ்நாடு
இறப்பு அக்டோபர் 28, 1981(1981-10-28) (அகவை 95)
புனைப்பெயர் பி.ஸ்ரீ
தொழில் எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாசிரியர், பத்திரிகை ஆசிரியர், திறனாய்வாளர்
நாடு இந்தியர்
துணைவர்(கள்) தங்கம்மாள்
பிள்ளைகள் ஒரு மகன், இரு மகள்

வாழ்க்கைக் குறிப்பு

தென் திருப்பேரை என்னும் ஊரில், பிச்சு ஐயங்கார்-பிச்சு அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு பி.ஸ்ரீநிவாச்சாரி எனப் பெயரிட்டனர். நாளடைவில் அவரது பெயர் சுருங்கி, பி.ஸ்ரீ. என ஆகிவிட்டது.[1]

நெல்லையில் உள்ள, தற்போது "மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி" என்று அழைக்கப்படும் இந்துக் கலாசாலையில் கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் நல்ல அறிவும் திறமையும் படைத்தவர் பி.ஸ்ரீ. பலமுறை பாரதியாரைச் சந்தித்து, பழகி மிகுந்த தோழமை பூண்டு, அவரைப் பாடச் சொல்லி, கேட்டு, மகிழ்ந்து பாராட்டியவர் பி.ஸ்ரீ.

பாரதியின் தாக்கத்தால் அந்நாளைய "இன்டர்மீடியட்' வகுப்புக்குப் பிறகு படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றார். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதைக் கண்ட அவரது பெற்றோர், அவருக்குத் திருமணம் செய்து வைத்து அவரது கவனத்தைத் திசை திருப்ப நினைத்தனர். அதன்படி தங்கம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்வித்தனர். இவருக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

தமிழிலக்கிய ஆர்வம்

தமிழ் இலக்கியத்தை அவ்வளவாக அறிந்திராத காலத்தில் ராஜாஜி தான் பி.ஸ்ரீ.யின் கவனத்தை தமிழின் பால் ஈர்த்தவர். தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில் திறனாய்வாகவும் ஆராய்ச்சியாகவும் உருப்பெற்றது.

பக்தி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பி.ஸ்ரீ., திருக்கோயில்களிலும் தலபுராணங்களிலும் தம்மையறியாது ஓர் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார். செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை போன்றவற்றிலும் மிகுந்த புலமை பெற்றிருந்தார். ஆனந்த விகடன் இதழில் "கிளைவ் முதல் இராஜாஜி வரை" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பின் அதை நூலாக்கினார்.

பத்திரிகையாளர்

இவரது எழுத்தார்வம் "கிராம பரிபாலனம்" என்கிற வார இதழைத் தொடங்க வைத்து நட்டமடையவும் வைத்தது. செட்டிநாட்டில் மூன்றரை ஆண்டுகள் தங்கி, "குமரன்" பத்திரிகையின் ஆசிரியராக, பல கட்டுரைகளையும் கதைகளையும் தொடர்களையும் எழுதிக் குவித்தார்.

உ.வே.சா., கா.சு.பிள்ளை, வையாபுரிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, மறைமலையடிகள், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வ.வே.சு ஐயர், ராஜாஜி, கல்கி, சோமசுந்தர பாரதி, ரசிகமணி டி.கே.சி., மற்றும் பல இலக்கிய அன்பர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் பி.ஸ்ரீ.

தினமணி, தினமலர், சுடர், சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களுக்கும், கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களுக்கும் கலைமகள், அமுதசுரபி போன்ற மாத இதழ்களுக்கும் கட்டுரைகளை எழுதிக் குவித்தார். "தினமணி" நாளிதழில் பதிப்பாசிரியராகப் பணியாற்றியபோது எண்ணற்ற நல்ல நூல்களைத் "தினமணி மலிவு வெளியீடாக' வெளியிட்ட பெருமை பி.ஸ்ரீ.க்கு உண்டு. அவர் "தினமணி'யில் இருந்து ஓய்வுபெற்று, ஆனந்தவிகடனில் பகுதிநேர எழுத்தாளரானார்.

திறனாய்வு

தமிழில் ஒப்பிலக்கியம் என்பதற்கு அடித்தளம் இட்ட பெருமையும் பி.ஸ்ரீ.க்கு உண்டு. கம்பனும் - ஷெல்லியும், பாரதியும் - ஷெல்லியும் என்று தொடங்கி, இலக்கிய ஒப்புமைகள் பல பி.ஸ்ரீ.யால் வெளிவந்தன. கம்பன் கவிதையை இலக்கியத் திறனாய்வு செய்து கம்பனின் புகழை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமைக்குரியவர் பி.ஸ்ரீ. உடல்நிலை குன்றி படுக்கையில் இருந்தபோதும் கூட, "நான் இரசித்த கம்பன்' என்ற இறுதி நூலை எழுதி முடித்தார்.

விருதுகள்

இவர் எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.

எழுதிய நூல்கள்

அல்லயன்ஸ் பதிப்பகம்

  • ஆறுபடை வீடுகள் (6 பாகங்கள்)
  • ஆழ்வார்கள் வரலாறு (8 பாகங்கள்)
  • திவ்யப் பிரபந்தசாரம்
  • அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு
  • கந்தபுராணக் கதைகள்
  • நவராத்திரியின் கதைகள்
  • ராஜரிஷி விசுவாமித்திரர்
  • தாயுமானவர்
  • தசாவதாரக் கதைகள்
  • துள்ளித் திரிகின்ற காலத்திலே
  • ஔவையார்
  • மூன்று தீபங்கள்
  • ஆண்டாள்
  • மஹாபாரதக் கதைகள்
  • சுடர்க தமிழ்நாடே
  • திருப்பாவை
  • திருவெம்பாவை
  • சிவநேசச் செல்வர்கள் ( 2 பாகங்கள் )
  • அன்புநெறியும் அழகுநெறியும்
  • காதம்பரி
  • கண்ணபிரான்
  • தேசியப் போர்முரசு
  • நாரதர் கதை
  • தங்கக் காவடி

கண்ணதாசன் பதிப்பகம்

(விமரிசனங்கள்)

  • ராமனும் முருகனும்
  • மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும்
  • கபீர்தாசரும் தாயுமானவரும்
  • காந்தியும் லெனினும்
  • காந்தியும் வினோபாவும்
  • ஆண்டாளும் மீராவும்
  • பாரதியும் தாகூரும்
  • வள்ளுவரும் சாக்ரடீசும்
  • நந்தனாரும் திருப்பாணாழ்வாரும்
  • பாரதி: நான் கண்டதும் கேட்டதும்

கலைமகள் காரியாலயம்

  • அன்பு வளர்த்த அறிவுப் பயிர் - ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும்
  • பாடும் பக்த மணிகள் (9 பாகங்கள்)
  • மூவர் ஏற்றிய மொழிவிளக்கு
  • தொண்ட குலமே தொழு குலம்
  • துயில் எழுப்பிய தொண்டர்
  • அடி சூடிய அரசு
  • பகவானை வளர்த்த பக்தர்

பெயர் தெரியாத பதிப்பகங்கள்

  • கிளைவ் முதல் ராஜாஜிவரை
  • தமிழ் வளர்ந்த கதை

மேற்கோள்கள்

  1. "ஒப்பிலக்கியச் செம்மல்". தினமணி. பார்த்த நாள் 20 அக்டோபர் 2014.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.