டி. கே. சிதம்பரநாத முதலியார்

டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, செப்டம்பர் 11, 1882 - பெப்ரவரி 16, 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்[1].[2][3]

வாழ்க்கை

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தீத்தாரப்ப முதலியார் - மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். இவரது தாய் மற்றும் இவரது மனைவி பிச்சம்மாளின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்து இருந்தார்.[4] 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார்.

இலக்கியப் பணி

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள இவரது வீட்டின் நடு முற்றமாக இருந்த (தொட்டிக்கட்டு) வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ. ப. சோமு, பி. ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, இராசகோபாலாச்சாரி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், ச. வையாபுரிப்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

அரசியல்

1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார்[5].

மேற்கோள்கள்

  1. "திறனாய்வு முன்னோடிகள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 21 திசம்பர் 2013.
  2. "இருபதாம் நூற்றாண்டு உரைநடை". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 21 திசம்பர் 2013.
  3. "Multi-dimensional personality". The Hindu. பார்த்த நாள் 21 திசம்பர் 2013.
  4. "வட்டத்தொட்டி நாயகர் ரசிகமணி டி.கே.சி.". தினமணி. பார்த்த நாள் 21 திசம்பர் 2013.
  5. "தமிழ் செய்த பாக்கியம்". கீற்று. பார்த்த நாள் 21 திசம்பர் 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.