அல்கா

அல்காக்கள் (Algae), அல்லது பாசி (இலங்கை வழக்கு) பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள் ஆகும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் அதிநுண்ணுயிரி மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு கல அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும்.

லௌரென்சியா (Laurencia) கடல்பாசியின் (seaweed) தோற்றம்: கிளைகள் பல திசுள் அமைப்புடையதாகவும் 1 மி.மி தடிமனுள்ளதாகவும் உள்ளன. இன்னும் சிறிய அல்காக்கள், இந்தக் கிளைகளுடன் ஒட்டியிருப்பதை படத்தின் கீழ் வலது மூலையில் காணலாம்

வகைகள்

நீலப்பசும் பாசி

அல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா.

நிலத்தாவரத் தோற்றம்

பூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலைக் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman)[1] உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழ் இலக்கியங்களில் பாசி

தமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது.

  கூசி லாதுகொல் கோள்வன் முதலைய
  ஏசி லாநீர்க் கிடங்கி னிருதலை
  மாசி லாத மறவ ரெதிரெதிர்
  பாசி போலப் பதிந்து பொருதனர்.(கிடங்கிடைப் போர், 16)

  நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
  பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
  நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
  விதியே விதியே தமிழச் சாதியை
  (24. தமிழ்ச் சாதி)

  தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
  பாசி சூழ்ந்த பெருங் கழல்,
  தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
  (கபிலர்)

  அருவிய யான்ற பெருவரை மருங்கில்
  சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது
  பாசி தின்ற பைங்கண் யானை
  ஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க
  (பாலை- மாமூலனார்)

  தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
  முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
  திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
  மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
  (பாடல் முதல் குறிப்பு:அறவை நெஞ்சத்து ஆயர்)

  பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது
  ஊருண் கேணி உண் துறைத் தொக்க
  பாசி யற்றே பசலை காதலர்
  தொடுவுழித் தொடுவுழி நீங்கி
  விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. ( 399-பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது )

  விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
  வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
  அடி நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய (..222)

  அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
  கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று
  கலங்கும் பாசி நீர் அலை கலாவ
  ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து (..65)

மேற்கோள்கள்

ஊடகங்கள்

பாசிகள்

̈

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.