முளைத்தல்

முளைத்தல் என்பது தாவரங்கள், பூஞ்சைகள் முறையே அவற்றின் வித்துக்கள் (seed), வித்திகள் (spore) இலிருந்து வெளியேறி வளரத் தொடங்கும் செயலாகும். தாவரங்கள் விதையிலிருந்து முளைவிட்டு வளர ஆரம்பிக்கும்போது, அந்த இளம் தாவரமானது நாற்று அல்லது கன்று என அழைக்கப்படும். பூக்கும் தாவரம் (Angiosperms), வித்துமூடியிலி (gymnosperm) வகைத் தாவரங்களில் அவற்றின் விதையிலிருந்து முளைத்தல் செயல் முறைமூலம் புதிய தாவரமான நாற்று உருவாகும். ஆனாலும் பூஞ்சைகளில், அவற்றின் வித்திகளில் இருந்து காளான் இழை அல்லது பூஞ்சை இழை (Hyphae) வளர ஆரம்பிக்கும் செயலும் முளைத்தல் என்று அழைக்கப்படுகிறது. பொது வழக்கில், கரு ஒன்றிலிருந்து புதிதாக ஒரு தாவரம் வளர ஆரம்பிக்கும் நிலையை முளைத்தல் என்றும் கூறலாம். இவை தவிர தாவரங்களில் பாலியல் இனப்பெருக்க முறையில், கருக்கட்டலுக்காக ஆண் பாலணுவைக் கொண்ட மகரந்தத்திலிருந்து மகரந்தக்குழாய் தோன்றி, பெண் பாலணுவான முட்டையை நோக்கி நீண்டு செல்லும் செயல்முறையும் முளைத்தல் எனப்படுகின்றது.

முளைக்கத் தொடங்கி 3 நாட்களில் சூரியகாந்தி நாற்று

முளைத்தலைக் கட்டுப்படுத்தும் காரணிகள்

விதை முளைத்தலானது, விதைக்குள்ளானதும், விதைக்கு வெளியானதுமான காரணிகளால் கட்டுப்படுத்தப்படும். அகக்காரணியில் முக்கியமானது வித்தின் உறங்குநிலையாகும். வெளிக்காரணிகளில் முக்கியமானவை வெப்பநிலை, நீர், ஆக்சிசன், அத்துடன் சிலசமயம் ஒளி அல்லது இருள்[2] என்பவையாகும். வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வகையில் கட்டுப்படுத்தப்படும். பொதுவாக இக்காரணிகளின் தாக்கம் தாவரங்களின் வகைக்கேற்பவும், அவற்றின் இயற்கையான வாழிடத்தின் தன்மை, அங்குள்ள காலநிலை மாற்றங்கள் என்பவற்றிற்கு ஏற்பவும் அமையும்.

நீர்

பொதுவாக முதிர்ந்த விதைகள் உலர்ந்த நிலையிலேயே காணப்படும். எனவே அவை முளைத்தலுக்கு தயாராவதற்கு, அதற்கான [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற செயற்பாடுகளை ஆரம்பிக்கத் தேவையான குறிப்பிட்டளவு நீரை உள்ளெடுக்கும். நீரை உள்ளெடுத்து அவை வீங்கும்போது வித்துறை உடைந்து, முளைத்தலுக்கு வழிவிடும். அத்துடன் விதையினுள் இருக்கும் சேமிக்கப்பட்ட உணவானது நீர்ப்பகுப்பு நொதியங்களின் தாக்கத்தினால் முளைத்தலின்போது தேவையான ஆற்றலைக் கொடுக்கும் நிலைக்கு மாற்றமடையவும் நீர் தேவைப்படும்.

ஆக்சிசன்

முளைத்தலின்போது, அதற்கான ஆற்றலைப் பெற, விதையினுள் நிகழும் வளர்சிதைமாற்றத்திற்கு ஆக்சிசன் தேவைப்படும்[3]. வித்தானது வளர்ந்து இலைகளைத் தோற்றுவித்து, பின்னர் சூரிய ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும்வரை, அதற்குத் தேவையான ஆற்றல் உயிரணு ஆற்றல் பரிமாற்றம் மூலமாகவே வழங்க வேண்டியிருப்பதனால் ஆக்சிசன் முக்கியமாகும். வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிசன், மண்ணில் உள்ள இடைவெளிகள் மூலம் விதைக்கு கிடைக்கும். மண்ணில் ஆழமாக விதை இருப்பின், அதற்குத் தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் முளைத்தல் பாதிக்கப்படும்.

வெப்பநிலை

விதையில் நிகழும் உயிரணு ஆற்றல் பரிமாற்றத்திற்கு சாதகமான வெப்பநிலை அவசியமாகும். வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு வெப்பநிலைகளில் முளைக்கும் திறனைக் கொண்டிருக்கின்றன. பொதுவான தாவரங்கள் 60-75 F (16-24 C) வெப்பநிலையில் முளைக்கும். ஆனால் சில குளிர்நிலையிலும், வேறு சில சூடும், குளிரும் மாறி மாறி இருக்கும்போதும் முளைக்கின்றன. சில விதைகளில் உறங்குநிலை அகல குளிர் வெப்பநிலை தேவைப்படுகின்றது.

ஒளி / இருள்

பொதுவான விதைகளில் ஒளியோ, இருளோ முளைத்தலைப் பாதிப்பதில்லை ஆயினும், சில விதைகளில் உறங்குநிலை நீங்க, ஒளியோ, இருளோ அவசியமாகின்றது.

வித்து உறங்குநிலை

வித்து உறங்குநிலை (Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம். சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையில் இருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம். முளைத்தலுக்கான அத்தியாவசியமான தேவைகள் கிடைக்காதவிடத்தோ, மிகவும் கடுமையான குளிர் அல்லது கடுமையான சூடு போன்ற தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைகளிலோ வித்துக்கள் முளைக்காமல் இருத்தல் Seed hibernation எனப்படும்.

வித்தானது உறங்கு நிலையிலிருப்பின், அந்த நிலை நீங்கினாலன்றி விதை முளைக்க முடியாது. முளைத்தலுக்கான சாதகமான நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விதைகள் உறங்கு நிலையிலிருந்து மீளலாம். பல்வேறு முறைகளால் அவற்றின் உறங்குநிலையை செயற்கையாக போக்கி முளைத்தலைத் தூண்ட முடியும்[1].

முளைத்தலின் வகைகள்

வெவ்வேறு வகைத் தாவரங்கள் வெவ்வேறு வழியான முளைத்தலைக் கொண்டிருக்கின்றன. இருவித்திலை, ஒருவித்திலைத் தாவரங்களில் வேறுபட்ட முளைத்தல் முறைகளை அவதானிக்கலாம். தாவரங்களின் வாழ்க்கை வட்டத்தில் வித்தாக இருக்கும்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு, குறிப்பிட்ட காலத்தின் பின்னர், முளைத்தல் மூலம் அடுத்த நிலைக்குத் தொடரும்.[4]

இருவித்திலைத் தாவர முளைத்தல்

முளையத்தில் இருக்கும் முளைவேர்ப் பகுதியே முதலில் விருத்தியடையும். இது நாற்றானது மண்ணில் வேரூன்றி நின்று, மண்ணிலிருந்து நீரை உறிஞ்ச உதவும். அதன் பின்னரே முளையத்திலிருந்து முளைத்தண்டு வெளியேறும். முளைத்தண்டில், இரு வித்திலைகளும் (cotyledens), வித்திலைக் கீழ்த்தண்டு (hypocotyl), வித்திலை மேல்தண்டு (epicotyl) என்பனவும் இருக்கும். இங்கே வேறுபட்ட விதைகளில் இரு வேறு வகையான முளைத்தலைக் காணலாம்.

1. தரைமேல் முளைத்தல்: வித்திலைக் கீழ்த்தண்டு தரைக்கு வெளியே நீண்டு ஒரு கொழுவி போன்ற அமைப்பில் வளைந்து, பின்னர் வித்திலைகளை மேல்நோக்கி இழுக்கும். வித்திலைகள் மண்ணின் மேற்பரப்பை வந்தடைந்ததும், வித்திலைக் கீழ்த்தண்டானது நிமிர்ந்து வித்திலைகளை மேல்நோக்கித் தள்ளும்.[5]. அதிலிருந்து இளம் தண்டானது மேல்நோக்கி வளரும். எ.கா. அவரை இனங்கள், பப்பாளி

2. தரைக்கீழ் முளைத்தல்: தரைக்குக் கீழாக முளைத்தல் நடைபெற்று, வித்திலை மேல்தண்டு முதலில் மண்ணிலிருந்து வெளியே வரும். வித்திலைகள் தரைக்குக் கீழேயே தங்கிவிடும். மேலே வந்த வித்திலை மேல்தண்டு வளர்ந்து நாற்றாகும். பட்டாணி இவ்வகையான முளைத்தலுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும்.

ஒருவித்திலைத் தாவர முளைத்தல்

இங்கே முளையத்தின் முளைவேரும், வித்திலைகளும் முறையே முளைவேர்க்கவசம் (Coleorhiza), முளைத்தண்டுக்கவசத்தால் (Coleoptile) மூடப்பட்ட நிலையிலிருக்கும். முளைவேர்க்கவசமே முதலில் விதையிலிருந்து வெளியே வரும் பகுதியாகும். பின்னர் அதிலிருந்து முளைவேர் வெளியேறி மண்ணில் வேரூன்றும். முளைத்தண்டுக்கவசம் அதன் பின்னர் விதையிலிருந்து வெளியேறி மேல்நோக்கி வளர்ந்து, தரை மேற்பரப்பை அடையும்போது வளர்ச்சியை நிறுத்தி விடும். பின்னர் வித்திலைகள் அங்கிருந்து வெளியேறி தரைக்கு மேலாக மேல்நோக்கி வளரும்.

முளைத்தல் வீதம்

வேளாண்மை மற்றும் தோட்டக்கலையில் ஒரு இனம் (species) அல்லது வகைத் (variety) தாவரத்தின் முளைத்தல் வீதம் எனப்படுவது, குறிப்பிட்ட இன/வகைத் தாவரத்தின் ஒரு தொகுதி விதைகளில் எத்தனை சதவீத விதைகள், தகுந்த சூழ்நிலை இருக்கையில் முளைத்து புதிய தாவரமாக விருத்தியடைவதற்கான வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது என்பதைக் குறிக்கும். இதனைத் தெரிந்திருப்பதால், குறிப்பிட்ட ஒரு பரப்பளவில் விதைப்பிற்கு எவ்வளவு விதை தேவைப்படும், அல்லது குறிப்பிட்ட எண்னிக்கையிலான பயிர்த் தாவரத்தைப் பெற எவ்வளவு விதை தேவைப்படும் என்பதைக் கணிப்பிடல் இலகுவாகும்.

வித்தி முளைத்தல்

பூஞ்சைகள், அல்காக்கள் போன்றவற்றில் ஓய்வு நிலையில் இருக்கும் வித்திகளில் இருந்து உயிரணுக்கள் வெளிப்பட்டு, வளர்வதும் முளைத்தல் செயல்முறையாகக் கொள்ளப்படுகின்றது.

மகரந்தம் முளைத்தல்

Lily தாவர மகரந்தமணிகள் முளைத்த நிலையில் இலத்திரன் நுண்நோக்கியின் கீழான தோற்றம்

மகரந்தச் சேர்க்கையின் பின்னர், பெண் பாலணுவுடன், ஆண் பாலணுவை இணைப்பதற்காக, மகரந்த மணியானது ஒரு குழாயை உருவாக்கி, அதனூடாக பாலணுக்களைக் கடத்துவதும் முளைத்தல் எனப்படும். விதைகளைப் போலவே, ஒரு தாவரத்தில் இருந்து, இன்னொரு தாவரத்திற்கு இலகுவாகக் கடத்தப்படுவதற்காக, மகரந்த மணிகளும், நீரை இழந்து உலர்நிலையில் காணப்படும். இதில் உறையாக பல உயிரணுக்கள் காணப்படும். பொதுவாக வித்துமூடியிலிகளில் 8 வரையிலான உயிரணுக்களும், பூக்கும் தாவரங்களில் 2-3 உயிரணுக்களும் காணப்படும். இவற்றில் ஒன்று குழாய் உயிரணு அல்லது குழாய்க் கலம் எனப்படும். இதுவே குழாயாக நீண்டு வளர்ந்து சென்று, அதன் கருவை, பெண் பாலணுவுடன் சேர்த்தும்.

அனேகமான தாவரங்களில், ஒரே தாவரத்தில் ஆண், பெண் என இருவகை அமைப்புக்களும் இருப்பதனால், தன்மகரந்தச் சேர்க்கை மூலம் ஏற்படக்கூடிய உள்ளினச் சேர்க்கையைத் தவிர்ப்பதற்காக, மகர்ந்தம் முளைத்தல் செயல்முறையின் மூலம் சில கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். ஒரு தாவரத்தில் மகரந்தம் முளைத்தலானது சில மூலக்கூற்று சைகைகளைக் கொண்டிருக்கும். ஒரு தாவரத்தின் குறியில்/சூலக முடியில் விழும் மகரந்தம் அதே தாவரத்தினுடையதா என்பது இச்சைகை மூலம் அறியப்பட்டு, அதே தாவரத்தின் மகரந்தமாயின், மகரந்தக் குழாய் முளைத்தல் தடுக்கப்படும். இது தன் ஒவ்வாமை (Self-incompatibility) என அழைக்கப்படும்.

படங்கள்

மேற்கோள்கள்

  1. "Methods of Removing Seed Dormancy". பார்த்த நாள் மே 08, 2013.
  2. Raven, Peter H.; Ray F. Evert, Susan E. Eichhorn (2005). Biology of Plants, 7th Edition. New York: W.H. Freeman and Company Publishers. பக். 504–508. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7167-1007-2.
  3. S. M. Siegel, L. A. Rosen (1962) Effects of Reduced Oxygen Tension on Germination and Seedling Growth Physiologia Plantarum 15 (3), 437–444 எஆசு:10.1111/j.1399-3054.1962.tb08047.x
  4. "Germination and Seedling Establishment". பார்த்த நாள் மே 10, 2013.
  5. "Epigeal germination". பார்த்த நாள் மே 09, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.