பூந்துணர்

ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் பூந்துணர் எனப்படும்.[1] மேலும் மலரடுக்குகளமைந்துள்ள விதம் மஞ்சரி எனவும் வழங்கப்படுகிறது.[2] பூக்கள் தோன்றும் ஒழுங்கமைப்பிலும் அவற்றின் கட்டமைப்பின் அடிப்படையிலும் பூந்துணர்களை மேலும் வகைப்படுத்தலாம்.

நுனிவளர் முறைப் பூந்துணர்

நுனிவளர் பூந்துணர்

அச்சு சிறிது காலத்திற்கு தொடர்ச்சியாக வள்ர்வதுடன் கக்கவரும்புகள் அடியிலிருந்து உச்சியை நோக்கிப் படிப்படியாகப் பூக்களை உருவாக்குமாயின் அது நுனிவளர் முறைப் பூந்துணர் ஆகும். இதில் முதிந்த பூக்கள் அடியிலும் இளம் பூக்கள் உச்சியிலும் காணப்படும். பூக்கள் உச்சிநாட்டமுள்ளவையாகக் காணப்படும். பூக்கள் அடுக்கப்பட்டுள்ள முறைமைக்கேற்ப மேலும் வகைப்படுத்தப்படும்.

  • எளிய நுனிவளர் முறைப் பூந்துணர் (raceme): இது கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டதாகவும் பூக்காம்பின் அடியில் காம்பு கொண்டதாகவும் காணப்படும்.
  • காம்பிலி(spike): இவை காம்பை கொண்டிருக்காது. பூ அச்சில் நேரடியாக இணைந்திருக்கும்.
  • மட்டச்சிகரி(corymb): இவை கிளை கொள்ளாத தனி அச்சைக் கொண்டது. பூந்துணரின் பூக்கள் ஒரேமட்டத்தில் காணப்படும்.
  • குடைப்பூந்துணர்(umbel): குறுகிய அச்சைக் கொண்டதாகவும், பூக்காம்புகள் சம நீளம் கொண்டதாகவும் காணப்படும். பூக்காம்புகள் ஒரே புள்ளியிலிருந்து தொன்றும்.
  • மடலி(spadix):இதன் நடு அச்சு பாளை எனப்படும் கட்டமைப்பாக மாறியிருக்கும். பளை பூவடியிலையின் திரிபாகும்.
  • தலையுரு (Capitulum): இது காம்பில்லாதது. நடு அச்சு தட்டையாக மாறி வட்டத்தட்டுப் போன்ற அமைப்பு உருவாகும். இதில் நடுவில் முதி பூக்களும் புறத்தே இளம் பூக்களும் அடுக்கப்பட்டிருக்கும்.

நுனிவளரா முறைப் பூந்துணர்

நுனிவளரா முறைப் பூந்துணர்களில் முனையரும்பில் முதலாவது பூ தோன்றியபின் கக்கவரும்புகளில் பூக்கள் தோன்றும். பொதுவாகப் பல அச்சுக்கள் காணப்படும்.

நுனிவளரா முறைப்பூந்துணரை அவற்றின் பூக்கிளைகளின் தன்மைக்கு ஏற்ப மேலும் பிரிக்க முடியும்.

  • எளிய நுனிவளராப் பூந்துணர்: இவை ஒரே துணை அச்சைக் கொண்டிருக்கும். மூன்றுபூக்கள் மத்திரம் இருக்கும். எ.கா: சிலவகை மல்லிகைகள்
  • நத்தையுரு நுனிவளராப் பூந்துணர் (helicoid cyme or bostryx): பக்கக் கிளைகள் நடு அச்சின் ஒரே பக்கத்துக்கு மட்டும் தொன்றும். எ.கா: கத்தரி, பூனைவணங்கி
  • drepanium: அடுத்தடுத்து வரும் கிளைகள் ஒரே தளத்தில் அமையும்.
  • தேளுரு நுனிவளராப் பூந்துணர்(scorpioid cyme): பக்கக் கிளைகள் நடு அச்சில் மாறிமாறி அடுக்கப்பட்டிருக்கும். எ.கா:முடிதும்பை, ஆனைச்செவிப்பூண்டு
  • இணைக்கிளை நுனிவளராப் பூந்துணர் (dichasial cyme): பக்கக் கிளைகள் மீண்டும் கிளைகளை கொண்டு காணப்படும்.

இங்கு பாகுபடுத்தப்பட்ட முறை தவிரவும் பூந்துணர்களின் பல்வேறுபட்ட பல்வகைமை இயற்கையில் காணப்படுகின்றன.

மேலும் படிக்க

மேற்கோள்கள்

  1. இ.இரா.சுதந்திர பாண்டியன்; ஆ.விஜய குமார்; ச.ஜீவா (1994). தாவரவியல் கலைச்சொல் விளக்கம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.
  2. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.