ஆவியுயிர்ப்பு

தாவரங்களில் இருந்து நீர் நீராவி நிலையில் ஆவியாதலே ஆவியுயிர்ப்பு (Transpiration) எனப்படும். ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது வாயுப் பரிமாற்றத்திற்காக இலைவாய்கள் திறந்திருக்கும் நிலையில், தாவரத்தில் மேல்நோக்கி எடுத்து வரப்படும் நீரானது ஆவியாக இலைவாய்களூடாக வெளியேறும். இது முக்கியமாக இலைகளிலுள்ள இலைவாய்களூடாகவே இடம்பெற்றாலும், தாவரங்களின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஆவியுயிர்ப்பு சிறிதளவில் நிகழும். இலைவாய் தவிர புறத்தோல், தண்டிலுள்ள பட்டைவாய்களூடாகவும் ஆவியுயிர்ப்பு நிகழ்வதுண்டு.[1][2][3]

தாவரங்களின் இலைவாய் ஊடாகவே அதிகளவில் ஆவியுயிர்ப்பு நிகழும்.
அமேசான் மழைக்காடு மேல் உருவாகியிருக்கும் இம்முகில்கள் ஆவியுயிர்ப்பின் விளைவுகளாகும்.

இது ஆவியாதல் போன்ற ஒரு செயற்பாடாகும். இது விலங்குகளில் வியர்த்தல் போன்றதென்றாலும் இரண்டுக்கும் பல வேறுபாடுகளும் உண்டு. மழை போதுமான அளவில் கிடைக்கும் இடங்களில் ஆவியுயிர்ப்பைத் தடுக்க தாவரங்கள் இசைவாக்கம் அடைந்திருக்காது. எனினும் வறண்ட பிரதேசங்களில் வாழும் தாவரங்களான கள்ளி போன்றவை ஆவியுயிர்ப்பைக் குறைக்க நன்றாக இசைவாக்கம் அடைந்துள்ளன. ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளால் செல்வாக்குச் செலுத்தப்படுகின்றது.

ஆவியுயிர்ப்பு வேகத்தை பாதிக்கும் காரணிகள்

ஆவியுயிர்ப்பு வீதம் பல காரணிகளில் தங்கியிருக்கும்[1][2][3]

காரணிஆவியுயிர்ப்பு வீதத்தைப் பாதிக்கும் விதம்
இலைகளின் எண்ணிக்கைஇலைகளின் எண்ணிக்கை கூடும்போது வாயுப் பரிமாற்றம் நிகழும் மேற்பரப்பு கூடும். எனவே, இலைகளின் எண்ணிக்கை கூடினால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும்.
இலைவாய்களின் எண்ணிக்கைஇலைவாய்களின் எண்ணிக்கை கூடினால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும் (இலைவாயினூடாகவே கூடியளவு நீர் ஆவியுயிர்ப்பால் வெளியேறும்.).
இலையில் புறத்தோல் காணப்படல்மெழுகு போன்ற புறத்தோல் காணப்பட்டால் சூரிய ஒளி தெறிக்கச் செய்யப்படும். இதனால் வெப்பம் குறைக்கப்பட்டு ஆவியுயிர்ப்புக் குறைக்கப்படும்.
ஒளிச் செறிவுஒளிச்செறிவு கூடினால் இலைவாய்கள் திறக்கப்பட்டு ஆவியுயிர்ப்பு கூடும்.
வெப்பநிலைவெப்பநிலையானது ஆவியுயிர்ப்பின் மீது மூன்று முறைகளில் செல்வாக்குச் செலுத்தும்:-

1) கூடிய வெப்பநிலையில் ஆவியாதல் கூடி ஆவியுயிர்ப்புக் கூடும்.
2) புறச்சூழலில் ஈரப்பதம் குறைவதால் ஆவியுயிர்ப்புக் கூடும்.
3) நீரின் இயக்கவாற்றல் கூட்டப்படுவதால் ஆவியுயிர்ப்பு வீதம் கூடும்.

சார்பு ஈரப்பதம்உலர்வான வளி ஆவியுயிர்ப்பு வீதத்தைக் கூட்டும்.
நீர் வழங்கல்நீர் வழங்கல் குறையும்போது வெளியிடப்படும் நீரின் அளவைத் தாவரம் குறைக்கும். எனவே, ஆவியுயிர்ப்புக் குறையும்.

ஆவியுயிர்ப்பு வகைகள்

  • இலைவாய் ஆவியுயிர்ப்பு
  • புறத்தோலுக்குரிய ஆவியுயிர்ப்பு
  • பட்டைவாய் ஆவியுயிர்ப்பு

இவற்றில் பொதுவாக இலைவாயினூடாகவே அதிகமான நீராவி ஆவியுயிர்ப்பு மூலம் வெளியேறுகின்றது.

ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிடல்

எடுகோளாக ஒரு தாவரத்தின் ஆவியுயிர்ப்பு வீத்தத்தை அளவிடும் ஒரு கருவியே உறிஞ்சன்மானி ஆகும்.

Ganong's Potometer

இதன் போது குழாயினுள் நகரும் வளிக்குமிளியின் வேகத்தை அளவிடுவதன் மூலம் ஆவியுயிர்ப்பு வீதத்தை அளவிட முடியும்.

ஆவியுயிர்ப்பைக் குறைக்க தாவரங்கள் கொண்டுள்ள இசைவாக்கங்கள்

  • இலைக்குழிகளில் இலைவாய் காணப்படுதல். உதாரணம்- சவுக்கு
  • இலைகள் ஒடுக்கப்பட்டு முட்களாக திரிபடைந்திருத்தல். உதாரணம்- கள்ளி, நாகதாளி
  • தண்டில் நீர் சளியமாக சேமிக்கப்பட்டிருத்தல்.
  • புறத்தோல் தடிப்பாக இருத்தல்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Transpiration". BBC, Bitesize GCSE. பார்த்த நாள் சூன் 10, 2014.
  2. "user.rcn.com". பார்த்த நாள் சூன் 10, 2014.
  3. "Transpiration - Water Movement through Plants". Plant and Soil Sciences eLibrary. பார்த்த நாள் சூன் 10, 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.