காட்டியல்

வனவியல் என்பது காடுகளையும், அதோடு சார்ந்த வளங்களையும் மனிதருக்குப் பயன்தரத்தக்க வகையில் பேண்தகுமுறையில் உருவாக்குவதற்கும், மேலாண்மை செய்வதற்கும், பாதுகாப்பதற்குமான அறிவியல், கலை, கைவினை என்பவற்றைத் தழுவிய பல்துறைசார் தொழிற் துறை ஆகும். இயற்கைக் காடுகளிலும், வளர்ப்புக் காடுகளிலும் காட்டியல் செயல்படுகின்றது. காடுகள், பேண்தகு முறையில், சூழல்சார் பொருட்களையும், சேவைகளையும் தொடர்ச்சியாக வழங்குவதை உறுதி செய்வதற்கு வேண்டிய முறைமைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே காட்டியலின் முக்கிய நோக்கம். காட்டு வளங்களையும் அதனால் தாக்கத்துக்கு உள்ளாகக்கூடிய பிற வளங்களையும், பேண்தகு நிலையில் வைத்திருக்கும் அதே வேளை சமூக அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுமான முறைமைகளை உருவாக்குவதே காட்டியலின் முன்னுள்ள சவால் ஆகும்.

ஆசுத்திரியாவில் இடம்பெறும் காட்டியல் சார்ந்த வேலைகள்

தற்காலக் காட்டியல், காடுகள் மரப்பொருட்களை வழங்குவதற்கு உதவுதல், காட்டுயிர் வாழிடங்கள், இயற்கை நீர்த் தர மேலாண்மை, பொழுதுபோக்கு, நிலத்தோற்றத்தையும் சமூகத்தையும் பாதுகாத்தல், வேலைவாய்ப்பு, அழகுணர்ச்சியைக் கொடுக்கும் நிலத்தோற்றங்கள், உயிரியற் பல்வகைமை மேலாண்மை, நீர்ப்பிடிப்பு மேலாண்மை, மண்ணரிப்பைக் கட்டுப்படுத்துதல், போன்ற பரந்துபட்ட விடயங்களில் கவனம் செலுத்துகிறது.

இன்று காட்டுச் சூழல் தொகுதியானது, உயிர்க் கோளத்தின் மிக முக்கியமான ஒரு கூறாக நோக்கப்படுவதுடன், முக்கியமான அறிவியல், பயன்படு கலை, தொழில்நுட்பம் ஆகியவை சார்ந்த ஒரு துறையாகவும் வளர்ந்துள்ளது.

வரலாறு

5 ஆம் நூற்றாண்டில், அட்ரியாட்டியக் கடற்கரையில் அமைந்துள்ள பைசன்டிய ரொமாக்னா பகுதியில், மத குருமார்கள், விறகுத் தேவைக்காகவும், உணவுக்காகவும் ஒரு வகைப் பைன் மரக் காடு வளர்ப்பை மேற்கொண்டிருந்தனர். தாந்தே அலிகியேரி என்னும் கவிஞர் 1308ல் எழுதிய "தெய்வீக நகைச்சுவை" (Divine Comedy) என்னும் கவிதையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிகப் பெரிய காட்டின் தொடக்கம் இதுவே. முறையான காட்டியல் நடவடிக்கைகள், 7 ஆம் நூற்றாண்டில் மரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்ட போது விசிகோத்தியர்களால் தொடங்கப்பட்டது. ஆக், பைன் ஆகிய மரங்களைக் கொண்ட காடுகளின் பாதுகாப்புக் குறித்த விதிகளையும் இவர்கள் உருவாக்கினர். சீனாவில், காட்டு வளங்களின் பயன்பாடும் மேலாண்மையும் நீண்டகால வரலாறுடையன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.