பாப்லோ நெருடா

பாப்லோ நெருடா, (Pablo Neruda, ஜூலை 12, 1904செப்டம்பர் 23, 1973) என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( Ricardo Eliecer Neftalí Reyes Basualto), சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர்.

Pablo Neruda

Pablo Neruda in 1963
தொழில் Poet, diplomat
நாடு Chilean
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
International Peace Prize

லெனின் அமைதிப் பரிசு (1953)

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1971)
கையொப்பம்

1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும்.

வாழ்க்கை

1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னையென்றாலும் நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார். நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெருந்தாய் என்று பெருமிதம் கொள்வார். முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, இவருடைய பெருந்தாயைப் பற்றிய‌தே.

பாப்லோ நெருடா என்ற புனைப்பெயருடன் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, இவருடைய 19ஆம் வயதில் " வைகறைக் கதிர்கள் (Books of Twilights) "[2] என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது நெருடாவின் "இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது.

1927ஆம் ஆண்டு சிலியின் தூதராக அவர் ரங்கூன் (பர்மா) சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும், சிங்கப்பூரிலும், ரங்கூனிலும் அவர் தூதராகப் பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மாபெரும் இலக்கியவாதிகளான, ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் போன்றவர்களுடைய எழுத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.

பெருமை

தமிழில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான் (The skin of the earth is same everywhere) " என்று பாடியுள்ளார்.

1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. 1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.

"இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார்.

மேற்கோள்கள்

  1. Patrick M. O'Neil, Great World Writers: Twentieth Century, Marshall Cavendish, 2004, p. 1062.
  2. அமுதசுரபி தீபாவளி மலர் 2004; பாப்லோ நெருடா; பக்கம் 195

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.