துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011
துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 2011 மும்பையின் வான்கேடே அரங்கத்தில் 2 ஏப்ரல் 2011 அன்று இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 2011ஆம் ஆண்டுப் போட்டியின் வெற்றியாளர்களை முடிவு செய்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும்[2]. இந்தியா 6 இழப்புகளால் வெற்றி பெற்றது[3]. இரண்டு அணிகளும் தமது இரண்டாவது உலகக்கிண்ண வெற்றிக்காகப் போட்டியிட்டன; இலங்கை கடைசியாக 1996 ஆம் ஆண்டிலும்[4], இந்திய அணி 1983 ஆம் ஆண்டிலும் வென்றன[5].
![]() | |||||||||
நிகழ்வு | 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
நாள் | 2 ஏப்ரல் 2011 | ||||||||
அரங்கம் | வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||
ஆட்ட நாயகன் | மகேந்திர சிங் தோனி | ||||||||
தொடர் ஆட்ட நாயகன் | யுவ்ராஜ் சிங் | ||||||||
நடுவர்கள் | சைமன் டோபல், அலீம் தர்[1] | ||||||||
← 2007 2015 → |
இறுதிப் போட்டியை நோக்கிய பயணம்
இலங்கை அணி நியூசிலாந்து அணியை கொழும்பில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் 5 இழப்புகளால் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி பாக்கித்தான் அணியை மொகாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. துடுப்பாட்ட உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளின் வரலாற்றில் ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்கும் முதல் இறுதிப்போட்டி இதுவேயாகும். 1979ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குப் பிறகு உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடொன்று இறுதியாட்டத்தில் பங்குபெறும் இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
இறுதிப் போட்டியாளர்கள்
இப்போட்டிக்கு முன்னர், இந்தியாவும் இலங்கையும் உலகக்கிண்ண வரலாற்றில் ஆறு தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடியிருந்தன. இலங்கை அணி நான்கிலும், இந்திய அணி இரண்டிலும் வென்றிருந்தன. இலங்கையை எதிர்த்து விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 67 வெற்றிகளையும், 50 தோல்விகளையும் பெற்றிருந்தது. 11 போட்டிகள் வெற்றி தோல்வியின்று முடிவடைந்தது[6].
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இறுதிப்போட்டியில் பங்கேற்பது இது மூன்றாம் முறையாகும். இந்தியா 1983 போட்டியில் வென்றும், 2003 போட்டியில் தோல்வியும் அடைந்தது. இலங்கை 1996 போட்டியில் வென்றும், 2007 போட்டியில் தோல்வியும் அடைந்தது. 1996 போட்டியில் துடுப்பாட்ட வரலாற்றில் உலக சாதனைகள் நடத்தியுள்ள சச்சின் டெண்டுல்கர், முத்தையா முரளிதரன் இருவருக்கும் இதுவே கடைசி உலகக்கிண்ணப் போட்டியாக இருக்கும்.
ஆட்ட விவரங்கள்
ஒருநாள் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி இரண்டு முறை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் முதல் தடவை இலங்கை அணித்தலைவர் சங்கக்கார வென்றார். ஆனால் அவர் கூறியது பார்வையாளர்களின் பலத்த சத்தத்தினால் தனக்குக் கேட்கவில்லை எனப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் குறிப்பிட மீண்டும் நாணயச் சுழற்சியில் ஈடுபடுமாறு அழைத்தார். இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவது தடவையும் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்[7]. சாகிர் கானின் சீரிய பந்துவீச்சையடுத்து இலங்கை அணி துவக்கத்தில் மெதுவாக ஆடியது. தனது முதல் மூன்று நிறைவுகளில் ஒரு ஓட்டம் கூடக் கொடுக்காது தனது ஐந்து நிறைவுகளில் ஆறே ஓட்டங்கள் கொடுத்த சாகிர் உபுல் தரங்கவின் இலக்கையும் கைப்பற்றினார்[8]. ஆனால் மற்ற முனையில் காயமடைந்த ஆசீஷ் நேராவிற்கு மாற்றாக வந்திருந்த ஸ்ரீசாந்த் தனது எட்டு நிறைவுகளில் 52 ஓட்டங்கள் கொடுத்தார். இலங்கை 17வது நிறைவின் போது 60/2 என்ற நிலையில் மகெல ஜயவர்தன ஆடப் புகுந்தார். 88 பந்துகளில் 103* ஓட்டங்கள் எடுத்து புத்துயிர் ஊட்டினார். இவருடன் இணைந்து நன்றாக அடித்து ஆடிய நுவன் குலசேகர மற்றும் திசாரா பெரேரா உதவியுடன் இலங்கை அணி தனது துடுப்பாட்ட திறன்விளையாட்டில் (batting powerplay) (45-50 நிறைவுகள்) 63 ஓட்டங்கள் எடுத்து இறுதியில் 274/6 என புள்ளிகள் எடுத்தது[8].
இதற்கு எதிராக ஆடத்துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சேவாக் மற்றும் சச்சினை இழந்து 31/2 என்ற நிலையை அடைந்தது. விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இணைந்து ஆட்டத்தை நிலைப்படுத்துமாறு ஆடி வந்தவேளையில் அணியின் ஓட்டங்கள் 114 இருந்தபோது கோலி திலகரத்ன டில்சான் பந்துவீச்சில் பந்துவீச்சாளருக்கே காட்ச் கொடுத்து வெளியேறினார். இந்நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி கம்பீருடன் இணைந்து நான்காவது இலக்குக்கிற்கு 109 ஓட்டங்கள் சேர்த்து அணியை நல்ல நிலைக்கு முன்னேற்றினார். கம்பீர் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறியபோது களமிறங்கிய யுவராஜ் சிங்குடன் இணைந்து ஆடிய தோனி 79 பந்துகளில் 91 ஓட்டங்கள் எடுத்து இந்திய வெற்றிக்கு வழிகோலினார். தோனி நுவன் குலசேகரவின் பந்தை களத்திற்கு வெளியே அடித்து ஆறு ஓட்டங்கள் பெற இந்தியா வெற்றி இலக்கை எட்டி உலகக்கிண்ணத்தை வென்றது[9].
எ |
||
- நாணயச்சுழற்சியில் இலங்கை வென்று முதலில் துடுப்பாடியது.
சாதனைகள்
- எட்டு நிறைவுகளில் 0/39 கொடுத்த முரளிதரனுக்கு இதுவே கடைசி பன்னாட்டுத் துடுப்பாடமாகும். இவரது முதல் மற்றும் கடைசி பன்னாட்டுத் துடுப்பாட்டங்கள் இந்தியாவுடனேயே நிகழ்ந்தன.தேர்வுத் துடுப்பாட்டத்திலிருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட முரளிதரன் இனி ஐபிஎல் ஆட்டங்களில் மட்டும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்காக ஆடுவார்.[10]
- இலங்கையின் மகெல ஜயவர்தன உலகக்கிண்ண இறுதிப்போட்டி யொன்றில் நூறு ஓட்டங்கள் எடுத்த ஆறாவது துடுப்பாட்டக்காரராவார். உலகக்கிண்ண அணிகளில் தோற்ற அணியில் நூறு அடித்த முதல் துடுப்பாட்டக்காரரும் ஆவார். [10] இதற்கு முன்னர் கிளைவ் லொயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், அரவிந்த டி சில்வா, ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் வெற்றிபெற்ற அணிகளில் நூறு அடித்துள்ளனர்.
- ஆசிய நாடுகள் மட்டுமே பங்கேற்ற முதல் உலக கோப்பை இறுதி ஆட்டமாக இது அமைந்திருந்தது. 1992ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரு ஆசிய நாடாவது பங்கேற்கும் ஆறாவது இறுதிப்போட்டியாகவும் அமைந்தது.[6]
- 2007ஆம் ஆண்டும் இறுதிப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது முறையாகும்.[6]
- இந்தியா, இலங்கை இருவருக்குமே இறுதிப்போட்டியில் இது மூன்றாவது முறையாகும். [6]
- ஓர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மிக உயர்ந்த இலக்கினை எட்ட முயன்ற முயற்சியாக இந்தியாவின் 275 ஓட்ட இலக்கு அமைந்திருந்தது.[8]
- இறுதிப்போட்டியில் இரண்டாவதாக ஆடிய அணி வெல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் இலங்கை 1996ஆம் ஆண்டும் ஆத்திரேலியா 1999ஆம் ஆண்டும் இவ்வாறு வென்றுள்ளன. [8]
- உலகக்கிண்ணத்தை ஒருமுறைக்கும் மேலாக வென்ற நாடாக இந்தியா தன்னை மேற்கிந்தியத் தீவுகள், ஆத்திரேலியாவுடன் இணைத்துக் கொண்டது. [5]
- உலகக்கிண்ண வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக ஓர் போட்டிநடத்தும் நாடு கிண்ணத்தை வென்றுள்ளது. போட்டி நடத்தும் நாடுகளில் ஒன்றாக இருந்த இலங்கை 1996ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியுள்ளது. [10] இருப்பினும் போட்டி நடத்தும் நாடொன்று தன் நாட்டிலேயே அந்த வெற்றியைப் பெற்றது இதுவே முதல்முறையாகும்.
மேற்கோள்கள்
- http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/508857.html
- FIXTURES of 2011 World Cup
- "There's no business like cricket business". CNBC (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "Records / World Cup / Series results". Cricinfo. பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "India power past Sri Lanka to Cricket World Cup triumph". BBC Sport (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "Statbox: India vs Sri Lanka in World Cup final". The Times of India (1 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "Cricket World Cup final: India-Sri Lanka as it happened". BBC Sport (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "India v Sri Lanka: MS Dhoni and Gautam Gambhir lead India to World Cup glory" (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "Final: India v Sri Lanka at Mumbai – ICC World Cup Final 2011" (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.
- "We've finally Dhon it". The Sun (2 ஏப்ரல் 2011). பார்த்த நாள் 2 ஏப்ரல் 2011.