ச. சாமிவேலு
சாமிவேலு சங்கிலிமுத்து (S. Samy Vellu) (பிறப்பு: மார்ச் 8, 1936) மலேசிய இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர். இவர் 1979ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சேவை ஆற்றியுள்ளார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர்.
Dato' Seri டத்தோ ஸ்ரீ உத்தாமா ச. சாமிவேலு | |
---|---|
![]() | |
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் 7வது தலைவர் | |
பதவியில் அக்டோபர் 12, 1979 – டிசம்பர் 6, 2010 | |
துணை | எஸ். சுப்பிரமணியம் (1979 - 2006) ஜி. பழனிவேல் (2006 - 2010) |
முன்னவர் | டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் (1973 - 1979) |
பின்வந்தவர் | டத்தோ ஜி. பழனிவேல் |
தொகுதி | சுங்கை சிப்புட் |
சுங்கை சிப்புட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1974 – பிப்ரவரி 13, 2008 | |
முன்னவர் | வீ. தி. சம்பந்தன் |
பின்வந்தவர் | மரு. ஜெயக்குமார் தேவராஜ் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 8 மார்ச்சு 1936 குளுவாங், ஜொகூர் |
அரசியல் கட்சி | மலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல் |
வாழ்க்கை துணைவர்(கள்) | இந்திராணி சாமிவேலு |
பிள்ளைகள் | 4 |
சமயம் | இந்து |
இணையம் | ம.இ.கா. இணையத்தளம் |
தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
சாமிவேலு 1963ல் இருந்து மலேசிய வானொலி, மலேசியத் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும், மலேசியத் தகவல் இலாகாவில் நாடகக் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் ஒரு தமிழ்மொழி ஆர்வலர்.
1974 ஆம் ஆண்டில் சுங்கை சிப்புட் தொகுதியின் இடைக்காலத் தேர்தலில் போட்டியிட்டு மலேசிய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப் பட்டார். 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், தன்னுடைய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் ஜெயக்குமார் தேவராஜிடம் தோல்வி அடைந்தார். அந்தப் பொதுத் தேர்தல் மலேசிய சரித்திரத்தையே மாற்றி அமைத்தது
அரசியல் வாழ்க்கை
பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளை
குடுமபத்தின் மீது காட்டிய அதே அக்கறையை, கடமை உணர்வைப் பின்னர் சமுதாயத்தின் மீதும் செலுத்த வேண்டிய பொறுப்பு சாமிவேலுவுக்கு வாய்த்தது. 1960 ஆம் ஆண்டில் பத்து கேவ்ஸ் ம.இ.கா. கிளையில் உறுப்பினராகச் சேர்ந்தார். பின்னர், அக்கிளையின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
1964 ஆம் ஆண்டில் ம.இ.கா. மத்திய செயலவையில் இடம் பிடித்தார். அத்துடன் அவர் ம.இ.கா. தேசிய கலாசாரப் பிரிவுத் தலைவராகவும் அப்போதைய தேசியத் தலைவர் துன் சமபந்தனால் நியமிக்கப் பட்டார்.
கட்டடக்கலைத் தேர்வு
பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்ட கால கட்டத்திலேயே சாமிவேலு தனது கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டார். லண்டனுக்குச் சென்று Royal Institute of British Architects எனும் அரச பிரித்தானிய கட்டடக்கலைக் கழகத்தில் கட்டடக்கலைத் தேர்வு எழுதி வல்லுநராகத் தாயகம் திரும்பினார். அந்தத் துறையிலேயே தொழில் புரியவும் தொடங்கினார்.
அரசியலில் சிலாங்கூர் மாநிலத் தலைவராகவும், தேசிய உதவித் தலைவராகவும் தொடர்ந்து தேசியத் துணைத் தலைவராகவும் கடுமையான போட்டிகளுக்கு இடையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974-இல் முதல் முறையாகச் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவு
1978-இல் துணையமைச்சராக நியமிக்கப் பட்டார். அதற்கு மறு ஆண்டில் அதாவது 1979-இல் முழு அமைச்சராகத் தகுதி உயர்த்தப் பட்டார். 1979 அக்டோபர் 12-இல் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மறைவிற்குப் பின் சாமிவேலு தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து மலேசிய அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராகவும், 1990 முதல் 1995 வரை எரிசக்தி தொலைத் தொடர்பு அஞ்சல் துறை அமைச்சராகவும் பணி புரிந்தார். அரசாங்கத்தின் தூதுக்குழுக்களில் இடம் பெற்ற சாமிவேலு உலகின் பல நாடுகளுக்கு மலேசியாவைப் பிரதிநிதித்து சென்றுள்ளார்.
டத்தோ விருது
1979 ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில சுல்தான் இவருக்கு ‘டத்தோ’ விருதை வழங்கினார். 1980-இல் ஜொகூர் மாநில சுல்தானும் இவருக்கு டத்தோ விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார்.
1982-இல் கொரியக் குடியரசு சாமிவேலுவுக்கு கொரிய அரச சேவை விருதை வழங்கியது. 1982-இல் இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய உயரிய அரசு சேவை விருதை வழங்கிக் கௌரவம் செய்துள்ளது. 1987-இல் உலக மாமனிதர் எனும் கௌரவ விருதை அமெரிக்க அரசாங்கம் வழங்கியது.
டாக்டர் பட்டம்
அப்போதைய பிரதமர் துன் (டத்தோ ஸ்ரீ) டாக்டர் மகாதீர் தலைமையில் செயல்பட்ட அமைச்சரவை பினாங்கு பாலத்தைக் கட்டி முடிக்கும் பொறுப்பைச் சாமிவேலுவிடம் வழங்கியது. அதன்படி 1985 செப்டமபர் 14-இல் 13.4 கி.மீ. தூரமுள்ள பினாங்கு பாலம் கட்டி முடிக்கப் பட்டது. இந்தப் பாலம் உலகின் நான்காவது நீளப் பாலமாக இருந்து வருகிறது.
1989 ஆம் ஆண்டு பேராக் சுல்தான் தன் 61ஆம் பிறந்த நாளில் சாமிவேலுவிற்கு ‘டத்தோ ஸ்ரீ’ எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்துள்ளார். அதே ஆண்டு இந்தியாவின் புகழ் பெற்ற அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது சாமிவேலுவிற்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பட்டது.
2001 ஆம் ஆண்டில் தமிழகத் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி, தமிழக முரசொலி அறக்கட்டளையின் சார்பில் சாமிவேலுவிற்கு ‘கலைஞர் விருது’ வழங்கிச் சிறப்பு செய்தார்.
பொது
இவருடைய மனைவியின் பெயர் டத்தின் ஸ்ரீ இந்திராணி. இவர் சமூக அரசியல் கழகங்கள், அரசு சாரா இயக்கங்களின் தொண்டூழியச் சேவைகளில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டு செயல் பட்டு வருகிறார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினருக்கு வேல்பாரி (பிறப்பு:1965) எனும் ஒரு மகன் உள்ளார்.
வேல்பாரி சர்ச்சைக்குரிய மலேசிய இந்தியர்களின் மைக்கா ஹோல்டிங்ஸ் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஷீலா நாயர், (பிறப்பு:1976) டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்பதியினரின் மருமகள் ஆவார்.
2008 ஆம் ஆண்டில், ம.இ.கா.வின் மாஜு கல்வி வளர்ச்சிக் கழகத்தின் (Maju Institute of Education Development (MIED)) நிர்வாக இயக்குநர் சித்திரகலாவின் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடரப் பட்டது. அந்தக் குற்றச் சாட்டை மறுத்த சித்திரகலா, ம.இ.கா தலைவர்களின் மீதே திருப்பிக் குற்றம் சாட்டினார். இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் கண்டுள்ளது.
அரசியல் சர்ச்சைகள்
2000 ஆம் ஆண்டுகளில் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியாக டத்தோ ஸ்ரீ சாமிவேலு தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டது ஒரு தவறான வியூகம் என்று மலேசிய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இவர் மீது ஒரு சில ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பு படுத்தப்பட்டன.[2]
அரசாங்கம் மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய மான்யத் தொகைகள் முறையாகப் போய்ச் சேரவில்லை எனும் குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப் பட்டன.[3]
அரசியல் ஆய்வாளர்கள் கருத்து
மலேசியாவின் பல சர்ச்சைக்குரிய இந்திய பிரச்னைகளில் இவர் தலையிட்டுத் தீர்வு காண முயற்சி செய்தார். ஆனால், சரியான தீர்வுகளைக் காண முடியவில்லை. அவரின் கீழ் பணிபுரிந்தவர்கள் அவரையே மோசம் செய்து விட்டனர் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து சொல்கின்றனர்.
நவம்பர் 25, 2007ல் வெடித்த மலேசிய இந்திய மக்கள் போராட்டமும் அதனை டத்தோ ஸ்ரீ சாமிவேலு தீர்வு காணக் கையாண்ட முறைகளும் இந்திய மலேசியர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விட்டன.[4]. அதனால், சாமிவேலுவின் அரசியல் எதிர்காலமும் பாதிப்பு நிலையை அடைந்தது.
மலேசிய இந்தியர்களின் எதிர்ப்பு அலை
பின்னர், மார்ச் 8, 2008ல் நடந்த பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மக்கள் நீதிக்கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட மரு. ஜெயக்குமார் தேவராஜிடம் சாமிவேலு தோல்வி கண்டார். அதன் விளைவாக, நாடாளுமன்ற உறுப்பியத்தையும் அமைச்சர் பொறுப்பையும் இழந்தார்.
இவர் தலைமையில் இயங்கிய மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் இத்தேர்தலில் தோல்வி அடைந்தது. அது மட்டும் இல்லை. ஆளும் கட்சியில் இருந்த பாரிசான் நேசனல், மலேசியாவில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் பறி கொடுத்தது. ம.இ.கா. பாரிசான் நேசனல் கூட்டணியின் பங்காளிக் கட்சியாகும்.