வி. மாணிக்கவாசகம்

டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் (Tan Sri Dato' Seri V. Manickavasagam, பிறப்பு: அக்டோபர் 4, 1926) ம.இ.கா. எனும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் ஆறாவது தலைவர். இவர் 1973ஆம் ஆண்டில் இருந்து 1978ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் பதவியில் சேவை ஆற்றியுள்ளார். மலேசிய அமைச்சரவையில் தொழிலாளர், தொடர்பு துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

டான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ
வி.மாணிக்கவாசகம்
Tan Sri V.Manickavasagam
மலேசிய இந்திய காங்கிரசின் 6வது தலைவர்
பதவியில்
ஜூலை, 1973  12 அக்டோபர் 1979
முன்னவர் துன் வீ. தி. சம்பந்தன்
பின்வந்தவர் ச. சாமிவேலு
தொகுதி கிள்ளான், சிலாங்கூர்
பெரும்பான்மை மலேசியா இந்தியர்
பதவியில்
ஜூலை, 1973  12 அக்டோபர் 1979
பின்வந்தவர் ச. சாமிவேலு
தனிநபர் தகவல்
பிறப்பு 4 அக்டோபர் 1926
கோலசிலாங்கூர் தோட்டம், சிலாங்கூர், மலேசியா
இறப்பு அக்டோபர் 12, 1979(1979-10-12) (அகவை 53)
கோலாலம்பூர்
அரசியல் கட்சி
மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC)
இருப்பிடம் கோலாலம்பூர்
பணி
ம.இ.கா தலைவர்
மலேசிய அமைச்சரவை
சமயம் இந்து

மலேசிய இந்திய சமுதாயத் தலைவர்களில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தனிச் சிறப்பு பெற்று விளங்குகின்றார். பொருளாதாரத் துறையில் இந்திய சமூகம் வெற்றி நடை போட வேண்டும் எனும் தணியாத ஆர்வம் கொண்டு தீவிரமாகச் செயல் பட்டார். அந்த வகையில் Nesa Multipurpose Cooperative எனும் நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கம், MIC Unit Trust எனும் ம.இ.கா யூனிட் டிரஸ்ட் அமைப்பை நிறுவினார்.

மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுடைமைத் திட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். நெகிரி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கம் பெறுவதில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மிக முக்கிய பங்கு வகித்தார். MIC Education Fund எனும் ம.இ.கா. கல்வி நிதியையும் Malaysian Indian Scholarship Fund எனும் மலேசிய இந்திய கல்வி உபகார நிதியையும் இவர் தான் தோற்றுவித்தார்.

வரலாறு

டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் இருக்கும் கோலசிலாங்கூர் தோட்டத்தில் 1926 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெங்கடாசலம் - சுப்பம்மாள் தம்பதியருக்கு மூத்தப் புதல்வராகப் பிறந்தார். தன்னுடைய தொடக்கக் கல்வியை கோலசிலாங்கூர் நகரத்தில் பயின்றார். உய்ர்நிலைப்பள்ளிப் படிப்பை கிள்ளானில் பயின்றார்.

டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் சமுதாயப் பணி மாணவப் பருவத்திலேயே தொடங்கி உள்ளது. தன்னுடைய இருபதாவது வயதில் ம.இ.காவில் இணைந்து சேவையாற்றத் தொடங்கினார். அதன் பின்னர், 32 ஆண்டுகள் தன்னை அரசியல் சேவைகளில் ஐக்கியப் படுத்திக் கொண்டார். ம.இ.காவின் முதல் அமைப்புக் கூட்டம் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூர், செந்தூல் பகுதியில் இருந்த தண்டாயுதபாணி ஆலய வளாகத்தில் இருந்த செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கலந்து கொண்டார்.

இளம் வயதில் மாநில ம.இ.கா தலைவர் பதவி

ம.இ.காவின் முதல் கிளை செந்தூலில் அமைக்கப் பட்டது. இரண்டாவது கிளை கிள்ளானில் அமைக்கப் பட்டது. கிள்ளான் கிளையின் செயலாளராக டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 20. ம.இ.காவின் தொடக்கக் காலத்தில் இருந்தே அவர் ஏதாவது ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். பொதுப் பணிகளில் ஈடுபட்ட டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் தனக்கு வழங்கப் பட்ட பொறுப்புகளை முழுமையாக செய்து முடிப்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.

ம.இ.காவில் தனிப் பெரும் தலைவராக ஆக வேண்டும் எனும் ஆவல் அவருடைய இளம் வயதிலேயே ஏற்பட்டு விட்டது. ம.இ.காவின் தலைமைப் பொறுப்பை ஏற்க படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டு வந்தார். அதற்காகத் தன் தகுதிகளையும் பெருக்கிக் கொண்டார். 1946-இல் தன்னுடைய 29 ஆவது வயதில் சிலாங்கூர் மாநில ம.இ.காவின் தலைவரானார்.

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்திற்கு தேர்வு

1953 மே மாதம் 13-இல் நடந்த சிலாங்கூர் மாநில ம.இ.கா பொதுக்கூட்டத்தில் க.குருபாதத்திடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த மாணிக்கவாசகம் அதற்குப் பின்னர் வெற்றிப் பாதைகளில் வலம் வரத் தொடங்கினார். 1956-இல் சிலாங்கூர் மாநில ம.இ.கா தேர்தலில் க.குருபாதத்தைத் தோல்வியுறச் செய்து மீண்டும் மாநிலத் தலைவர் ஆனார்.

1955-இல் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்திற்கு குருபாதமும் மாணிக்கவாசகமும் தேர்வு செய்யப் பட்டனர். சிலாங்கூரில் அப்போது மொத்தம் 13 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. அத்தனைத் தொகுதிகளிலும் கூட்டணியே வெற்றி பெற்றது.

தேசியத் தலைவர் பதவிக்கு போட்டி

1955 ஆம் ஆண்டு தெலுக் இந்தானில் நடைபெற்ற ம.இ.காவின் ஒன்பதாவது பேராளர் மாநாட்டில் தேசியத் தலைவர் பதவிக்கு டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் துன் சம்பந்தனை எதிர்த்துப் போட்டியிட்டார். அதில் துன் சம்பந்தன் வெற்றி பெற்றார். யாருடைய ஆதரவும் இல்லாமல் தனி மனிதனாக நின்று போட்டியிட்ட டான் ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் துணிச்சலைப் பாராட்டியே ஆக வேண்டும்.

துன் சம்பந்தனுக்கு ஆதரவாக க.குருபாதம், அப்புராமன், கா.அண்ணாமலை போன்ற அரசியல் ஜாம்பவான்கள் பக்க பலமாக இருந்தனர். வாக்கு விவரங்கள் வருமாறு:

  • வீ.தி.சம்பந்தன் - 1338 வாக்குகள்
  • ஏ.பாலகிருஷ்ணன் - 961 வாக்குகள்
  • வி.மாணிக்கவாசகம் - 673 வாக்குகள்
  • கேஹார் சிங் - 40 வாக்குகள்
  • செல்லாத வாக்குகள் - 185

முப்பதெட்டு வயதில் முழு அமைச்சர் பதவி

1959-இல் மலயாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதும் அவருக்கு தொழிலாளர் துறை துணையமைச்சர் பதவி வழங்கப் பட்டது. அப்போது மாணிக்கவாசகத்திற்கு வயது 33. அதன் பின்னர், 1964 ஆம் ஆண்டு வரை தொழிலாளர் அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். அடுத்து அவர் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப் பட்டார்.

1964, 1969 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் கிள்ளான் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாணிக்கவாசகம் தலைமையில் ஓர் அணி உருவானது.

நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கம்

இந்திய சமூகம் பொருளாதாரத் துறையில் வெற்றி நடை போட வேண்டும் எனும் நோக்கத்தில் நேசா பலநோக்கு கூட்டுறவு சங்கம், ம.இ.கா யூனிட் டிரஸ்ட் அமைப்பை நிறுவினார். மலேசிய இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுடைமைத் திட்டத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். நெகிரி தொழில்நுட்பக் கல்லூரி உருவாக்கம் பெறுவதில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் மிக முக்கிய பங்கு வகித்தார்.

மலேசிய இந்திய மாணவர்களுக்கு ம.இ.கா. கல்வி நிதியையும், மலேசிய இந்திய கல்வி உபகார நிதியையும் தோற்றுவித்துக் கொடுத்தார். ம.இ.கா. கல்வி நிதி தொடங்கப் பட்டதும் ம.இ.கா உறுப்பினர்களின் ஆண்டுச் சந்தாத் தொகை இரண்டு வெள்ளியில் இருந்து மூன்று வெள்ளிக்கு உயர்த்தப் பட்டது. அதில் கிடைத்த ஒரு வெள்ளி கல்வி நிதியில் சேர்க்கப் பட்டது.

மாணிக்கவாசகத்தின் சாதனைகள்

டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தன்னுடைய 53 ஆவது வயதில் இயற்கை எய்தினார். மலேசிய இந்திய சமுதாயத் தலைவர்களில் மாணிக்கவாசகம் மலேசிய வரலாற்றில் இடம் பெறத் தக்க சாதனைகளைச் செய்துள்ளார். குறிப்பாக, ம.இ.கா. கல்வி நிதியைச் சொல்லலாம்.

இவர் தலைவர் பதவியைப் பொறுப்பேற்று இருந்த அந்த ஆறு ஆண்டுகளில் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பல தொண்டுகளைச் செய்துள்ளார். ம.இ.கா வரலாற்றில் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையில் கோலாலம்பூரில் இருக்கும் ம.இ.கா தலைமைக் கட்டத்திற்கு ’மாணிக்கவாசக மாளிகை’ என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது. சிலாங்கூர் சிமினி நகரில் உள்ள ஒரு வீடமைப்பு பகுதிக்கு ’தாமான் மாணிக்கவாசகம்’ என்றும் பெயர் வைக்கப் பட்டுள்ளது.

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.