மலேசிய இந்திய காங்கிரசு

மலேசிய இந்திய காங்கிரசு ம.இ.கா (Malaysian Indian Congress அல்லது ’’MIC’’) என்பது மலேசியாவில் இயங்கும் ஒர் அரசியல் கட்சி ஆகும். இது 1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் அகில மலாயா இந்தியர் மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்புக் கூட்ட மாநாட்டில் மலாயா, சிஙப்பூரைச் சேர்ந்த 561 பேர் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் “மலாயா இந்தியர் காங்கிரஸ்” என்ற பெயரில் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டது.

ம.இ.கா
马来西亚印度国会
MIC
நிறுவனர்ஜான் திவி
தற்காளிக தலைவர்டத்தோ ஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம்
தொடக்கம்1946
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
கொள்கைதிராவிட சுயமரியாதை
தேசியவாதம்
பழைமைவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல்
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள்
4 / 222
மாநில சட்டமன்றத் தொகுதிகள்
5 / 576
இணையதளம்
www.mic.org.my

வரலாறு

ம.இ.காவின் தற்காளிக தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்

மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.கா. மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.ம.இ.காவைத் தோற்றுவித்த ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.தமிழர்களின் கல்வித் தகுதிக்குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன.

பிரித்தானியர்கள் மீது இந்தியர்களின் கசப்புணர்வுகள்

பூத் சிங் ம.இ.கா. தலைவராக இருந்த காலத்தில் Malayan Union எனும் மலாயா ஒன்றியத்தில் சேர்வதற்கு மலாயா இந்தியர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதற்கு பிரித்தானியர்கள் மீது இந்தியர்களுக்கு இருந்த கசப்புணர்வுகளே காரணம் ஆகும்.ம.இ.காவின் மூன்றாவது தலைவர் கே.இராமநாதன் காலத்தில், ம.இ.காவில் பொதுவான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டது.1951 ஆம் ஆண்டு ம.இ.கா.வின் நான்காவது தலைவராக கே.எல்.தேவாசர் பொறுப்பு ஏற்றார். மலேசிய அரசியலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அரசியல் கூட்டுறவு கண்டிப்பாக இருக்க வேண்டும் எனபதை உணர்ந்தார்.

கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் வாய்ப்பு

அதனால் மலாய்க்காரர்களின் அம்னோ கட்சி, சீனர்களின் ம.சீ.ச. கட்சியுடன் இணைந்து போகும் தனமைகளை முன் நிறுத்தினார். 1952 ஆம் ஆண்டு கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட ம.இ.காவிற்கு வாய்ப்பு கிடைத்தது.டத்தோ ஓன் ஜாபார் தலைமையில் மலாயா சுயேட்சை கட்சியில் Independent Malayan Party (IMP) ம.இ.கா இணைந்து அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கிட்டின.1955-இல் துன் வீ.தி.சம்பந்தன் பொறுப்பேற்ற பிறகு ம.இ.கா.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் தலைமைத்துவத்தின் கீழ், ஒரு பரந்த அடிப்படையில் ம.இ.கா. புதுத் தோற்றம் கண்டது. 1957 ஆகஸ்டு 31ஆம் நாள் மலேசியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது. அந்த மெர்டேகா சுதந்திர ஒப்பந்தம் லண்டனில் கையெழுத்தானது. அதில் துன் வீ.தி.சம்பந்தன் மலேசிய இந்தியர்களின் பிரதிநிதியாகக் கையெழுத்திட்டார்.

தடுமாறி நின்ற தமிழ்க் குடும்பங்கள்

இந்தக் காலகட்டத்தில் ம.இ.கா. ஒரு பெரும் சவாலை எதிர்நோக்கியது. மேலை நாட்டு நிறுவனங்கள் ரப்பர் தோட்டங்களை விற்று விட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்ட உள்நாட்டவர் அந்தத் தோட்டங்களை வாங்கித் துண்டாடத் தொடங்கினர்.அதனால் பல ஆயிரம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து வாழ்க்கையில் தடுமாறிப் போய் நின்றனர்.நடுத்தெருவிற்கு வந்து நின்ற தமிழ்க் குடும்பங்கள் ஆயிரம் ஆயிரம். இதைப் பார்த்த முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு தோட்டங்கள் துண்டாடப் படுவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். நாடாளுமன்றத்தில் தோட்டத் துண்டாடல் சட்டத்தையும் நிறைவேற்றினார்.

அல்லும் பகலும் அலைந்த துன் சம்பந்தன்

மலேசியாவில் பிரதமர் பதவியில் இருந்தவர்களில் மலேசிய இந்தியர்களின் நலன்களில் அதிகமாகக் கவனம் செலுத்திய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் ஆகும்.தோட்டங்கள் துண்டாடப் பட்டதினால் இந்திய இனம் தடுமாறிப் போய் நின்றக் கட்டத்தில் ம.இ.கா. தீவிரமாகக் களம் இறங்கியது. துன் வீ.தி.சம்பந்தன் வீடு வீடாக, தோட்டம் தோட்டமாகச் சென்று தோட்டத் தொழிலாளர்களிடம் பத்து பத்து வெள்ளியாகச் சேகரித்தார்.அல்லும் பகலும் அலைந்து பணத்தைச் சேர்த்தார். அரசாங்கச் சலுகைகளைப் பயன் படுத்தவில்லை. அத்துடன் அரசாங்க வாகனங்களையும் பயன் படுத்தவில்லை. தன் சொந்த வாகனங்களைப் பயன் படுத்தினார்.

தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம்

அந்தப் பத்துப் பத்து வெள்ளி மூலதனத்தில் உருவானது தான் National Land Finance Cooperative Society (NLFCS) எனப் படும் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம். இந்தத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் தான் 1970 ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே ஆகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.[1] துன் சம்பந்தனின் தன்னலமற்ற சேவைகளினால் ஆயிரம் ஆயிரம் இந்தியர் குடும்பங்கள் இப்போது நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. துன் சம்பந்தன் அவர்களை மலேசிய இந்தியர்கள் கர்ம வீரர் காமராசராக நினைக்கின்றார்கள். மலேசியாவில் Bank Buruh எனும் தொழிலாளர் வங்கி உருவாவதற்குக் காரணமாக இருந்தவரும் துன் சம்பந்தன் அவர்களே.1973ஆம் ஆண்டில் இருந்து தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் பணியாற்றி வருகின்றார்.

ம.இ.கா தலைவர்கள்

  1. ஜான் திவி (1946–1947)
  2. பூத் சிங் (1947–1950)
  3. கே. இராமநாதன் (1950–1951)
  4. கே. எல். தேவாசர் (1951–1955)
  5. துன் வீ. தி. சம்பந்தன் (1955–1973)
  6. வி.மாணிக்கவாசகம் (1973–1979)
  7. ச. சாமிவேலு (1979–2010)[2]
  8. ஜி. பழனிவேல் (2010–2015)
  9. ச. சுப்பிரமணியம் (2015 - தற்சமயம் வரை)

ம.இ.காவின் நோக்கம்

  • மலேசியாவின் தன்னாட்சி உரிமையையும், சுதந்திரத்தையும் தற்காத்து பேணிக் காப்பாற்றுதல்
  • மலேசிய அரசியல் சட்டத்தை கடைப்பிடித்தல்; ருக்குன் நெகாரா கோட்பாடுகளைப் பின்பற்றுதல்
  • மலேசிய இந்தியர்களின் சட்டபூர்வமான இலட்சியங்களுக்கு ஆக்கம் ஊட்டுதல்
  • மலேசிய வாழ் இந்தியர்களின் அரசியல், பொருளாதரம், கல்வி, கலாச்சார சமூக உரிமைகளை மேம்படுத்தல்
  • இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தையும், ஒற்றுமையையும் வளர்த்தல்
  • மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைத்தல்; இணைந்து பணியாற்றுதல்
  • மற்ற சமுதாயத்துடன் இணைந்து நின்று மலேசியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுதல்

மேற்கோள்கள்

  1. "National Land Finance Co Operative Society (NLFCS". NLFCS. http://www.nlfcs.com.my/nlfcs.html. பார்த்த நாள்: 30.07.2011@4.43pm. The society has 49682 members with a share capital of RM 109 million as at 31. திசம்பர் 2009.
  2. "Malaysian Indian Community". Malaysian Indian Community. http://indian.community.com.my/political-influences/. பார்த்த நாள்: 30.07.2011@4.34pm. ksmk
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.